ரஷ்ய ராணுவத்துக்காக சண்டையிட்ட இந்திய இளைஞர் உக்ரைன் படைகளிடம் சரண்

ரஷ்ய ராணுவத்துக்காக சண்டையிட்ட இந்திய இளைஞர் உக்ரைன் படைகளிடம் சரண்



மஜோதி சாஹில் முகமது ஹுசைன்

கீவ்: ரஷ்ய ராணுவத்துக்காக சண்டையிட்ட இந்தியர், உக்ரைன் படைகளிடம் சரணடைந்ததாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.


உக்ரைன் ராணுவத்தின் 63-வது படைப்பிரிவு, அதன் டெலிகிராம் சேனலில், குஜராத்தைச் சேர்ந்த மஜோதி சாஹில் முகமது ஹுசைன் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட இந்தியர் ஒருவரின் வீடியோவை வெளியிட்டது. ஆனால், இதுகுறித்து இந்திய அதிகாரிகளிடமிருந்து எந்த தகவலும் இல்லை.


உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள இந்திய தூதரகம் இந்த செய்தியின் உண்மைத்தன்மையை உறுதிசெய்து வருவதாக தெரிவித்துள்ளது. மேலும், இந்த விவகாரம் குறித்து உக்ரைன் அதிகாரிகளிடமிருந்து எந்த முறையான தகவலும் கிடைக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.


22 வயதான மஜோதி சாஹில் முகமது ஹுசைன் ஒரு பல்கலைக்கழகத்தில் படிக்க ரஷ்யா வந்ததாக உக்ரைன் ராணுவம் தெரிவித்ததாக தி கீவ் இன்டிபென்டன்ட் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.


முகமது ஹுசைன் அந்த வீடியோவில், “போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் ரஷ்ய சிறையில் எனக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், தண்டனையைத் தவிர்க்க ரஷ்ய ராணுவத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் வாய்ப்பு வழங்கப்பட்டது. நான் சிறையில் இருக்க விரும்பவில்லை, எனவே சிறப்பு ராணுவ நடவடிக்கைக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டேன். ஆனால் நான் அங்கிருந்து வெளியேற விரும்பினேன்.


16 நாட்கள் பயிற்சிக்குப் பிறகு, நான் அக்டோபர் 1-ம் தேதி எனது முதல் போர் பணிக்கு அனுப்பப்பட்டேன். போரில் இருந்த போது சுமார் இரண்டு முதல் மூன்று கிலோமீட்டர் தொலைவில் ஒரு உக்ரைன் துருப்பினை கண்டேன். நான் உடனடியாக என் துப்பாக்கியைக் கீழே வைத்துவிட்டு, நான் சண்டையிட விரும்பவில்லை என்று சொன்னேன். எனக்கு உதவி தேவை. நான் ரஷ்யாவுக்குத் திரும்பிச் செல்ல விரும்பவில்லை என்று கூறினேன்” என்று அவர் சொன்னார்.


ரஷ்ய ராணுவத்தில் தற்போது பணியாற்றி வரும் 27 இந்தியர்களை விடுவித்து திருப்பி அனுப்புமாறு ரஷ்யாவிடம் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் கடந்த மாதம் தெரிவித்தது நினைவுகூரத்தக்கது. உக்ரைன் போரில் ரஷ்யா சார்பில் சண்டையிடும் போது 12 இந்தியர்கள் கொல்லப்பட்டனர். அதே நேரத்தில் 96 இந்தியர்கள் ரஷ்ய அதிகாரிகளால் விடுவிக்கப்பட்டனர். மேலும் 16 பேர் காணாமல் போனதாக பட்டியலிடப்பட்டுள்ளனர்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%