ராயப்பேட்டையில் பைக் ரேஸில் ஈடுபட்ட மாணவர் விபத்தில் மரணம்: எதிர் திசையில் வந்த வியாபாரியும் உயிரிழந்த சோகம்
குமரன், சுகைல்
சென்னை: நண்பருடன் பைக் ரேஸில் ஈடுபட்ட கல்லூரி மாணவரும், எதிர் திசையில் வந்த வியாபாரியும் உயிரிழந்தனர். சென்னை ராயப்பேட்டை, பேகம் சாகிப் சாலையை சேர்ந்தவர் கல்லூரி மாணவர் சுகைல் (19).
இவரும், அதே பகுதியைச் சேர்ந்த நண்பரான செல்போன் கடை ஊழியர் முகமது ஜோயல் (19) என்பவரும் நேற்று முன்தினம் இரவு ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலை மேம்பாலத்தில் பைக் ரேஸில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அவர்கள் ராயப்பேட்டையிலிருந்து அண்ணா சாலை நோக்கி, பீட்டர்ஸ் சாலை மேம்பாலத்தில் விலை உயர்ந்த பைக்குகளில் அதிவேகத்தில் சென்றுள்ளனர். அப்போது, அவர்களது வாகனம் ஒன்றுடன் ஒன்று மோதி நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளது. விழுந்த வேகத்தில் பல மீட்டர் தூரத்துக்கு இழுத்து செல்லப்பட்டுள்ளனர். பைக்குகளும் நொறுங்கி சிதறின.
அப்போது, மேம்பாலத்தின் எதிர் திசையில், தி.நகரைச் சேர்ந்த வியாபாரியான குமரன் (49) என்பவர் பைக்கில் வந்து கொண்டிருந்தார். விபத்தில் சிக்கிய இரு பைக்குகளில் ஒன்று சிதறிய வேகத்தில் குமரனின் இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியது.
இதில், அவரும் தூக்கி வீசப்பட்டார். 3 பேரும் பலத்த காயத்துடன் அதே இடத்தில் உயிருக்குப் போராடினர். சிறிது நேரத்தில் மாணவர் சுகைல், வியாபாரி குமரன் இருவரும் அங்கேயே உயிரிழந்தனர்.
முகமது ஜோயல் தலை மற்றும் கைகளில் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதைக் கண்டு அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
நண்பர் படுகாயம்: தகவல் அறிந்து வந்த திருவல்லிக்கேணி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார், இருவரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த முகமது ஜோயலும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
விசாரணையில், உயிரிழந்த குமரன் தி.நகர் ராமசாமி தெருவில் சொந்தமாக கவரிங் நகைக் கடை நடத்தி வந்ததும், பணி முடித்து வீடு திரும்பும் வழியில் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளதும் தெரியவந்தது.
போலீஸார் விசாரணை: விபத்து நடந்த பீட்டர்ஸ் சாலை மேம்பாலம் இரவில் இரும்பு தடுப்புகளைக் கொண்டு மூடப்பட்டு போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டிருந்த நிலையிலும் இளைஞர்கள் எப்படி அங்கு ரேஸில் ஈடுபட்டனர் என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர். பைக் ரேஸில் ஈடுபட்டவர் உயிரிழந்ததோடு, அப்பாவி வியாபாரி ஒருவரும் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.