ரூ.8.20 கோடியில் முரசொலி மாறன் பூங்கா சீரமைக்கும் பணிகள்: ஸ்டாலின் துவக்கினார்
சென்னை, செப்.24–
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பெரம்பூர், பேப்பர் மில்ஸ் சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முரசொலி மாறன் பூங்காவினை 8 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மறுசீரமைக்கும் பணி மற்றும் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சென்னை மாநகராட்சி சார்பில் 13 கோடியே 95 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
மேலும், கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சென்னை மாநகராட்சி சார்பில் 8 கோடியே 65 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இரண்டு பள்ளிக் கட்டடங்கள், மேம்படுத்தப்பட்ட கால்பந்து மைதானம் மற்றும் விளையாட்டுத் திடலை திறந்து வைத்தார்.
முன்னதாக, சோமையா தெருவில் உள்ள சென்னை மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள அய்யன் திருவள்ளுவர் சிலையை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
பின்னர், சோமையா தெருவில் 4.19 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையக் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தையல் எந்திரங்கள்
கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உபகரணப் பொருட்கள் மற்றும் மடிக்கணினியை வழங்கினார். மேலும், பயனாளிகளுக்கு மருத்துவ உதவித் தொகை, திருமண உதவித் தொகை, மாவு அரவை இயந்திரங்கள், மூன்று சக்கர மோட்டார் வாகனம், தள்ளுவண்டி, சாலையோர வியாபாரிகளுக்கு குடைகள் ஆகியவற்றை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, பெரியார் நகர் விளையாட்டு மைதானத்தில் அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் பயிற்சி முடித்த 126 மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினிகள் மற்றும் சான்றிதழ்களையும், 356 மகளிர்க்கு தையல் இயந்திரங்கள் மற்றும் சான்றிதழ்களையும் வழங்கினார்.
மேலும், கொளத்தூரிலுள்ள கலைஞர் நூற்றாண்டு கண் சிகிச்சை மையத்தில் பரிசோதனை மேற்கொண்டவர்களில் 200 நபர்களுக்கு மூக்குக் கண்ணாடிகள் மற்றும் புத்தாடைகளை முதலமைச்சர் இன்றையதினம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலாநிதி வீராசாமி, கிரிராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, அ. வெற்றியழகன், ஜோசப் சாமுவேல், துணை மேயர் மு. மகேஷ் குமார், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் தலைவர் ப. ரங்கநாதன்,
நகர்ப்புற வளர்ச்சி துறை கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா, சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் கோ.பிரகாஷ், மாநகராட்சி ஆணையர் ஜெ. குமரகுருபரன், நகர் ஊரமைப்பு இயக்குநர் பா.கணேசன், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் கே. ஹேமலதா, அனிதா அச்சீவர்ஸ் அகாடமியின் தலைமை நிர்வாக அதிகாரிகள் நரேந்திரன் மற்றும் ஹெலன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.