லண்டனில் ஓடும் ரயிலில் கத்திக்குத்து; 10 பேர் காயம் - இருவர் கைது
Nov 03 2025
89
புதுடெல்லி: நேற்று (சனிக்கிழமை) மாலை லண்டன் செல்லும் ரயிலில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் பத்து பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக இரண்டு பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். காயமடைந்தவர்களில் ஒன்பது பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டான்காஸ்டரிலிருந்து லண்டனின் கிங்ஸ் கிராஸ் நிலையத்திற்கு ரயில் சென்று கொண்டிருந்தபோது, நேற்று இரவு உள்ளூர் நேரப்படி 7.30 மணிக்கு பீட்டர்பரோ நிலையத்திலிருந்து ரயில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இந்த கத்திக்குத்து சம்பவம் நடந்தது. அந்த ரயில் உடனடியாக ஹண்டிங்டன் நிலையத்தில் நிறுத்தப்பட்டு போலீசார் விரைந்துசென்றனர்.
பெரிய கத்தியுடன் வந்த ஒரு மர்ம நபர் அனைவரையும் குத்தியதாகவும், எல்லா இடங்களிலும் ரத்தம் இருந்தது என்றும் சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் சாட்சியம் அளித்தார். திடீரென நடந்த இந்த கத்திக்குத்து பயங்கரத்திலிருந்து தப்பிக்க சிலர் கழிப்பறைகளில் ஒளிந்துகொண்டனர். சிலர் ஓட முயன்றபோது மற்றவர்களால் மிதிபட்டு காயமடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக 2 பேரை கைது செய்துள்ள பயங்கரவாத எதிர்ப்பு போலீசார், தங்கள் விசாரணையை தொடங்கியுள்ளனர். இதுகுறித்து பேசிய பிரிட்டன் போக்குவரத்து காவல்துறை தலைமை கண்காணிப்பாளர் கிறிஸ் கேசி, "என்ன நடந்தது என்பதை கண்டறிய நாங்கள் அவசர விசாரணைகளை நடத்தி வருகிறோம். சம்பவத்துக்கான காரணத்தை விரைவில் கண்டறிவோம் " என்று கூறினார்.
கத்திக்குத்து சம்பவத்துக்கு இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், ‘அப்பகுதியில் உள்ள அனைவரும் காவல்துறையின் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?