வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகும் வாய்ப்பு எதிரொலி: அலுவலர்களுடன் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ஆய்வு

வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகும் வாய்ப்பு எதிரொலி: அலுவலர்களுடன் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ஆய்வு



தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கையின் தெற்குப் பகுதியில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலவுகிறது என்றும், இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்தகாற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது என்றும், இதனால் தமிழ்நாட்டின் டெல்டா மற்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை ஆகிய கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இந்தப் பேரிடரை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகத்தினர் தயார் நிலையில் இருக்குமாறு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. முதலமைச்சர் பல்வேறு துறை உயர் அலுவலர்களுக்கும் மற்றும் மாவட்ட கலெக்டர்களுக்கும் பேரிடரை எதிர்கொள்ள மேற்கொள்ள வேண்டிய ஆயத்த நடவடிக்கைகள் குறித்து அறிவுரை வழங்கியுள்ளார்.


மேலும், கடந்த இரு நாட்களில் தென்மாவட்ட மற்றும் டெல்டா மாவட்ட கலெக்டர்களுக்கு காணொலிக் காட்சி மூலம் உரிய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இன்றும், விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மாவட்ட கலெக்டர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையருக்கும் காணொலி காட்சி மூலம் தயார்நிலை குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டது.


நீர்த்தேக்கங்களில் உபரிநீர் இருப்பினை முன்கூட்டியே திறத்தல் மற்றும் முறையான நீர் மேலாண்மையின் மூலம் நகரம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் ஏற்படாதவாறு பாதுகாக்குமாறும், பாதிப்புக்குள்ளாகக் கூடிய தாழ்வான பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்குமாறும், தேவைக்கேற்ப பொதுமக்களை முன்கூட்டியே நிவாரண முகாம்களில் தங்க வைக்குமாறும், அவர்களுக்கு தேவையான பாதுகாப்பான குடிநீர், உணவு மற்றும் மருத்துவ வசதிகளுக்கு ஏற்பாடு செய்யுமாறும் மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தயார் நிலையில்


6033 நிவாரண முகாம்


குறிப்பாக, மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் வயது முதிர்ந்தவர்கள் ஆகியோரின் வெளியேற்றத்தில் கவனம் செலுத்துமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள 122 பல்நோக்கு பேரிடர் பாதுகாப்பு மையங்களும், 6033 தற்காலிக நிவாரண முகாம்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.


மாவட்டத்தில் உள்ள பல்துறை அலுவலர்கள் ஒருங்கிணைக்கப்பட்டு பேரிடரை எதிர்கொள்ள அனைத்து உபகரணங்களுடனும், கனரக வாகனங்களுடனும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் இரண்டு அணியினர் தூத்துக்குடி மாவட்டத்திலும், ஒரு அணி திருநெல்வேலி மாவட்டத்திலும், மூன்று அணியினர் நாகப்பட்டினம் மாவட்டத்திலும், இரண்டு அணியினர் கடலூர் மாவட்டத்திலும், இரண்டு அணியினர் சென்னை மாவட்டத்திலும், ஒரு அணி திருவள்ளூர் மாவட்டத்திலும் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர்.


மேலும் தேசிய பேரிடர் மீட்புப் படையின் ஒரு அணி திருநெல்வேலி மாவட்டத்திலும், ஒரு அணி இன்று முதல் விழுப்புரம் மாவட்டத்திலும், ஒரு அணி சென்னை மாவட்டத்திலும் முன்கூட்டியே நிலை நிறுத்தப்பட்டுள்ளனர். கூடுதலாக ஐந்து அணியினர் அரக்கோணத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.


இந்த ஆய்வின் போது, கூடுதல் தலைமைச் செயலர் எம்.சாய்குமார், பேரிடர் மேலாண்மைத் துறை செயலர் பெ.அமுதா, பேரிடர் மேலாண்மை ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன் மற்றும் பேரிடர் மேலாண்மை இயக்குநர் சி.முத்துக்குமரன் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%