வங்கிகள், முதலீட்டு நிறுவனங்களில் ரூ.1.84 லட்சம் கோடி உள்ளது உரிமை கோரப்படாத நிதி சொத்துகளை உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை: நிர்மலா சீதாராமன் தகவல்

ஆமதாபாத், அக்.5-
வங்கிகள் மற்றும் முதலீட்டு நிறுவனங்களில் ரூ.1.84 லட்சம் கோடி நிதி சொத்துகள் உரிமை கோரப்படாமல் உள்ளதாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நிதி சேவைத்துறை ஒருங்கிணைப்பில், ரிசர்வ் வங்கி, செபி, காப்பீடு கண்காணிப்பு அமைப்பான ஐ.ஆர்.டி.ஏ., முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி ஆணையம் ஆகியவை இணைந்து புதியதொரு விழிப்புணர்வு பிரசாரத்தை முன்னெடுத்துள்ளன.
‘உங்கள் பணம், உங்கள் உரிமை’ என்ற பெயரில் இந்த பிரச்சாரத்தை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குஜராத் மாநிலம் காந்திநகரில் நேற்று தொடங்கி வைத்தார்.
காப்பீடு முதலீடுகள், வங்கி டெபாசிட்டுகள், ஈவுத்தொகைகள், பங்குகள், பரஸ்பர (மியூச்சுவல் பண்டு) முதிர்ச்சி நிதி உள்ளிட்ட பல நிதி சொத்து கணக்குகளில் உரிமை கோரப்படாதவை எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முதலீட்டாளர்களின் மறைவு, குடும்பத்தினர் மற்றும் வாரிசுதாரருக்கு தகவல் தெரியாமல் இருப்பது, முதலீட்டாளர்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாமை உள்ளிட்ட காரணங்களால் இதுபோன்ற நிலை உள்ளது. இந்தநிலையில் இந்த உரிமை கோரப்படாத நிதி சொத்துகளை உரியவர்களிடம் ஒப்படைக்கும் விதமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை தொடங்கி வைத்து மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசினார். அப்போது அவர், “வங்கிகள் மற்றும் முதலீட்டு நிறுவனங்களில் ரூ.1.84 லட்சம் கோடி நிதி சொத்துகள் உரிமை கோரப்படாமல் உள்ளன. அது பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் உள்ளதற்கு நான் உறுதியளிக்கிறேன். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் உங்களுடைய பணத்தை பெற்று கொள்ளலாம்” என தெரிவித்தார்.
மேலும் அவர், “இந்த பிரசாரம் மூலமாக உரிமை கோரப்படாத நிதி சொத்துகள் தொடர்பாக தகவல் கேட்க வருபவர்களுக்கு வங்கி மற்றும் முதலீட்டு நிறுவனங்களில் உடனுக்குடன் வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். கடந்த மாதத்தில் ரூ.450 கோடி நிதி சொத்துகள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆகஸ்டு 31-ந் தேதி வரையிலான தகவலின்படி வங்கி நிலுவையாக இருந்த உரிமை கோரப்படாத ரூ.17 ஆயிரம் கோடி ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டது” என தெரிவித்தார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?