'
ஒவ்வொரு நாளும் கணவன் விவேக்கின் பேச்சு வசந்தியை தீயாய்ச் சுட்டது.
உருகி உருகி காதலித்து கல்யாணம் செய்து கொண்டு ஒன்றும் காணவில்லை. ஒரு பிரயோசனமும் இல்லை என்றானது.
ஒவ்வொன்றிலும் குறை கண்டு பிடித்தான். இரண்டாவது குழந்தையும் பெண்ணாக பிறந்ததும் சலித்துக் கொண்டான்.
அவன் பெற்றோரும் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் புரிந்து கொள்ளவில்லை.
எல்லாவற்றிலும் ஒரு மூர்க்கத்தனம். குத்திக் கிழிக்கும் கேள்விகள். முடியவில்லை வசந்தியால்.
விவேக்கின் இந்த செய்கைக்குப் பின்னால் என்ன உள்ளது என்று யோசிக்கலானாள்.
"என்னாச்சுங்க, எதுக்கு இப்படி எல்லாத்துக்கும் கோபப்படுறீங்க" என்றாள் வசந்தி.
"ஒன்னுமில்ல, ஏன் ஒரு மனுஷன் கோபப்படக்கூடாதா? என்னக் கேள்வி இது?" என்றான் ஒன்றும் நடக்காத மாதிரி.
"ஹாய் தீபா, எப்படியிருக்கீங்க?" -- வசந்தி.
"என்ன மேடம் அதிசயம், நீங்க போன் பண்றீங்க?" -- தீபா.
"ரொம்ப நாளாச்சேன்னு பண்ணேன் மா. சாய்ந்தரம் மீட் பண்ணலாமா?" கேட்டாள் வசந்தி.
"ஓ ஷ்யூர். நா இன்னிக்கு ளீவுதான். எப்ப வேணாலும் மீட் பண்ணலாம்" என்று தீபா சொன்னதும் வசந்திக்கு சற்று ஆறுதலாக இருந்தது.
விவேக்கிற்கு தெரியாமல் அவனுடன் வேலை பார்க்கும் தீபாவை சந்திக்க அரிய வாய்ப்பு. முடிவு செய்து விட்டாள்.
"தீபா இங்க, ரைட் கார்னர்ல, வாங்க வாங்க" என்று போனை வைத்தாள்.
இருவரும் அந்த கோயில் பிரகாரத்தின் உள்ளே ஒரு ஓரமாய் அமர்ந்தார்கள்.
"நேரவே விஷயத்திற்கு வறேன். ஆபீஸ்ல எதானும் பிரச்சினையா?" என்றாள்.
எதைப் பற்றிக் கேட்கிறாள் என்று தெரியாமல் எதையும் உளறிவிடக் கூடாது என்று உறுதியாக இருந்தாள் தீபா.
"என்னாச்சு மேம்? என்ன கேக்கறீங்க?" என்றாள்.
"கொஞ்ச நாளாவே இவர் சரியில்லை. ரெண்டாவது கொழந்தைப் பொறந்ததுலேநாதே ரொம்ப சரியில்லை. நானும் ளீவு முடிச்சு ஆபீஸ் போக ஆரம்பிக்கணும். அவங்க அம்மா, அப்பா கொழந்தைங்கள பாத்துப் பாங்க. அது பிரச்சினை இல்லை. ஆனா இவரோட பேச்சு, கோவம் எல்லாமே வீடே நிம்மதி இல்லாம இருக்கு" வருத்தப்பட்டாள் வசந்தி.
"எப்படி சொல்றதுன்னு தெரில மேம். ஆனா ஆபீஸ்லயும் பிராப்ளம்தான். கொஞ்சம் ஸ்டாப்களை அனுப்பிடப் போறாங்க. இன்னும் முடிவாகல. இருந்தாலும் ரெண்டு மூனு பேர் லிஸ்ட்ல இருக்காங்க. அதாவது நெறைய பேமண்ட் வாங்கறவங்கள எடுத்துட்டு ப்ரெஷ்ஷர்ஸ் எடுக்கப் போறாங்க" என்றாள் தீபா.
சொரேர் என்றது வசந்திக்கு. திருமணமாகி பத்து வருடங்கள் கழித்து ஒரு பெண்ணும், பனிரெண்டாவது வருடத்தில் ஒரு பெண்ணும் பிறந்தால்? யோசிக்கலானாள். "இவர் பேர் லிஸ்ட்ல இருக்கா?" கேட்டாள் வசந்தி.
"முதல் பேரே அவர்தான் மேம்" என்றாள் தீபா.
"சரி வாமா, சாமி தரிசனம் பண்ணிட்டு ப்ரசாதம் வாங்கிட்டுக் கெளம்பலாம்" என்றாள்.
வீட்டிற்கு வந்ததும் வசந்தியின் நடை, உடை, பாவனையெல்லாம் மாறியது. குழந்தைகளைக் கடிந்து கொள்வதும், மாமனார் மாமியாரிடம் எதிர்த்துப் பேசுவதும், கணவரை யாரோ போல நடத்துவதும் அமர்க்களப்பட்டது.
ஒரு வாரம் போனது. யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. விவேக் என்ன செய்வதென்று புரியாமல் தவித்தான்.
கடைசியில் பொறுக்க முடியாமல்"என்னாச்சு? ஏன் இப்படி நடந்துக்கற?" என்று கேட்டான் விவேக்.
கண்களில் கோபம் பொங்க, "ஏன் ஒங்களுக்கு மட்டும்தான் கோபம் வருமா? எங்களுக்கெல்லாம் வராதா?" என்று படபடவென கேட்டாள் வசந்தி.
அன்று அலுவலகத்திற்கு ளீவு போட்டுவிட்டு வசந்தியை அழைத்துக் கொண்டு வெளியே போனான். இருவரும் ஒரு பார்க்கில் அமர்ந்தனர்.
"என்னாச்சு மா? என்ன பிரச்சினை? மெதுவாகக் கேட்டான்.
"நீங்க மொதல்ல ஒங்கப் பிரச்சினையை சொல்லுங்க" என்றாள்.
எல்லாவற்றையும் சொன்னான்.
"இந்த வேலைப் போனா? ஒங்ககிட்ட படிப்பு இல்லையா? திறமை இல்லையா? இல்ல நம்பிக்கை இல்லையா?" சற்று ஆவேசமாகக் கேட்டாள். கண்கள் சிவந்து போயிருந்தது.
"நானும்தானே வேலைக்குப் போறேன். அத்தை மாமா அவங்கப் பென்ஷன் வாங்கறாங்க. நம்மள கஷ்டப்படுத்தறது கூட இல்லை".
"தன்னம்பிக்கை வேணுங்க. யார்கிட்டயும் எதையும் சொல்லாம, இப்பிடி எல்லார்கிட்டயும், ஏன் அந்தப் பச்சைக் குழந்தையக்கூட கொஞ்சாம, என்ன மனுஷன் நீங்க?" என்று கேட்டாள்.
அவளது உள்ளுணர்வு அவனது கோழைத்தனத்தை வெறுத்தது.
"வசந்தி ப்ளீஸ், கோவிக்காத. எல்லாரும் பாக்கறாங்க. எனக்குப் புரியுது. தப்புதான். பாத்துக்கலாம் விடு. நீ கவலைப் படாத" என்று சமாதானப் படுத்தினான்.
வீட்டிற்கு வந்ததும் குழந்தைகளைக் கொஞ்சினான். மிகப்பெரிய பலம் வந்தாற்போல் உணர்ந்தான். மறுநாள் அவன் ஆபீஸ் சென்றதும் பெரியவர்களுக்குச் சொல்லிப் புரிய வைத்தாள். கூடவே தன் செயல்களுக்கும் மன்னிப்புக் கேட்டாள். இனி என்ன? எல்லாம் இன்பமயம் தான்.
வி.பிரபாவதி
மடிப்பாக்கம்