================
அன்பான வாசக சொந்தங்களுக்கு இதய வணக்கங்கள்.
இன்றைய நமது இ இதழில்
சிந்திக்க ஒரு நொடியில் "காட்டிக்கொடுத்த எட்டப்பன்" என்ற குறிப்பைத் தவிர்த்திருக்கலாம்.
காசா தாக்குதலுக்கு எதிரான தீர்மானத்தை அரசு நிறைவேற்றும் என தமிழக முதல்வர் அறிவிப்பு. உள்ளூர் நிலைமை ஊசலாடும் போது உலக அரசியல் தேவையா என அண்ணாமலை அவர்களின் கேள்வி. எதேச்சையாக சார்பற்றவர் எவருக்கும் எழும் கேள்வி கவனம் பெறுகிறது.
புகழ் பெற்ற திரைப்பட நடிகர்கள் பலர் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுகிறார்கள். ரிசார்ட்டுக்களில் அடிதடி, போதையாட்டம், போதைப் பொருள் பரிமாற்றம், முறையற்ற வாகனக் குற்றங்கள் என பலவித குற்றச் செயல்களில் அவர்கள் இறங்குவது கேவலம். வருவாய் மற்றும் சுங்கத்துறையின் ஆபரேஷன் நும்கோர் தீவிரப் படுத்தப்படவேண்டும்.
இப்போதெல்லாம் நொபேல் பரிசு ஒரு நபருக்கு மட்டுமாக அளிக்கப்படுவதில்லை. ஓவ்வொரு துறையிலும் இரண்டு மூன்று நபர்களுக்காக சேர்த்து வழங்கப்படுகிறது. இது ஒரு வகையில் நல்ல அம்சம்தான்.
சீமான் அவர்கள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டதுடன் பிரச்சினை முடிய வில்லை. ஆம். நடிகை, தான் பாதிக்கப்பட்டுள்ளதுக்கு நஷ்ட ஈடு கோருகிறார். மழை விட்டும் தூவானம் விடவில்லை.
கிரேக்கத்தின் 3300 ஆண்டு தொன்மையான அர்காடிக்கா பாலக் கட்டுமான நுணுக்கங்கள் அசர வைக்கின்றன. Mortar பூச்சு இல்லாமல் அது காலத்தை வென்று நிற்கும் அதிசயம் சிறப்பான செய்தி.
ட்ரம்ப் அவர்களின் 20 அம்ச போர் நிறுத்த நிபந்தனைகள் வெற்றி பெறும் சூழல் கூடி வருவது நிம்மதி அளிக்கிறது. அவருக்கு நொபேல் பரிசு வழங்குவது சரியா தவறா என்ற சர்ச்சை ஒருபுறம் இருக்கட்டும். போர் ஓய்ந்து உலக அமைதி மலர்ந்தால் சரிதான்.
தங்கத்தில் ஆடகப்பொன், கிளிச்சிறைப்பொன், சாம்பூநதப்பொன், சாதரூபப்பொன் என்று நாலு வகை உண்டு. இன்று
ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூபாய் 91000+ ஆக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் 11000 த்தை எட்டியுள்ளது. ஒரு கிராம் ராஜநாகத்தின் விஷம் ரூபாய் 18000 ஆக 2021லேயே மதிப்பிடப்பட்டது. அதன் நிறமும் பொன்னிறமானது. விலை விஷம் போல் ஏறுகிறது என்பது தங்கத்துக்குத் தான் மிக மிக பொருத்தம்! தங்கத்தை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடுகளின் வரிசையில் இந்தியா இரண்டாவது இடம் என்பது குறிப்பிடத் தக்கது.
180 திரையிசைப் பாடல்கள் மட்டுமே எழுதி அழியாப் புகழ் பெற்றுவிட்ட மாபெரும் பாட்டாளிக் கவிஞர் பட்டுக்கோட்டையாரின் வரலாற்றுக்குறிப்பு சுருங்கச் சொல்லி விளங்கவைத்துள்ளது சிறப்பு. பட்டுக்கோட்டையார் (29), கீட்ஸ் (24), ஷெல்லி (30) பாரதி (39) என சாதனைக் கவிஞர்கள் 40 ஐத் தொடும் முன்பே காலனைத் தொட்டது மாபெரும் இலக்கிய இழப்பே.
ஆனந்த பாஸ்கரில் வந்துள்ள "ஓய்வு" சிறுகதை ஒரு வரியில் சொல்வதானல் -- மஹா அபத்தம்.
திருமதி. சசிகலா விஸ்வநாதன் அவர்களின் சமூகப் பிரக்ஜ்ஜையுள்ள கவிதை "நடுக்கடல்" மற்றும் தமிழ்நிலா அவர்களின் "கடமை" மிகவும் சிறப்பான கருப்பொருள் கொண்டவை. "காதல் மட்டுமல்ல காமமும் தலைக்கு ஏறுதடி...
அப்போவே பாடையில் படுத்திருப்பாய்" போன்ற வரிகளைக் கொண்ட sub- standard கவிதையின் மத்தியில் இவை இரண்டும் substance கவிதைகள் தாம். தவிரவும் சான்றோர்கள் இராம. வேதநாயகம், கருமலைத் தமிழாழன், பரிபூரணன் போன்றோரின் படைப்புகளும் குறிப்பிடத்தக்கவை.
பாராட்டுக்கள்.
போரில்லா வாழ்க்கை பேரின்பம் - மிகச் சரிதான். ஆனால் இயக்கத்தின் சரியான பெயர் "போரில்லா உலகம் காண்போம் பேரன்பு இயக்கம்" என்பதே.
மீண்டும் நாளை சந்திப்போம். நன்றி.
P. கணபதி
பாளையங்கோட்டை.