ஒரு கோரிக்கையுடன் இன்றைய கடிதத்தை துவங்குகிறேன்.
நமது இ இதழின் பக்கம் 4 ல் "போரில்லா உலகம் காண்போம் - பேரன்பு" என்ற லோகோ வருகிறது. அதிலுள்ள வாசகம் சற்றும் மாற்றமின்றி பழங்காலக் கல்வெட்டுப்போல் ஒரே வாசகத்துடன் வருகிறது. உலக நன்மைக்கான உயரிய விழுமியத்தை உரத்துக் கூறும் இதன் நோக்கம் இதனால் தேங்குகிறது. எனவே சிந்திக்க ஒரு நொடி, ரவுசு ரமணி போன்றவை தினம் புதுப்புது வாசகத்துடன் வருவதுபோல இந்த லோகோவும் தினம் ஒரு புதிய வாசகத்துடன் வெளிவர ஆவன செய்யவும். எழுதி அனுப்ப நான் ரெடி. வெளியிட நீங்கள் ரெடியா?
முனைவர். இராம. வேதநாயகம் - திருமதி. வே. அருணாதேவி தம்பதியரின் wedding anniversary படத்தை நமது இ இதழில் பார்த்தேன். ஒரு லட்சிய அன்னையும் பிதாவுமாகக் கண்டேன். மலரும் மணமும் போல இணைந்து நிறை வாழ்வு பெற அனைத்து வாசக உறவுகளின் சார்பாக வாழ்த்தி மகிழ்கிறேன். வாழ்க வளத்துடன்.
பெற்றோரை இழந்து வாடும் 6000 சிறாருக்கு மாதம் ரூபாய் 2000 மும் பல்வேறு உதவிகளும் வழங்கும் அன்புக் கரங்கள் திட்டத்தை தமிழக அரசு துவக்கியுள்ளது பாராட்டுதலுக்கு உரியது. அங்கவைக்கும், சங்கவைக்கும் ஆதரித்து பாதுகாக்க ஒரு கபிலர் அமைந்தது போல அரசின் ஆதரவுக்கரம் இந்தக் குழந்தைகளுக்கும் அமைந்தது இறைவனின் கருணையே.
பல தமிழ் இலக்கியப் பாடல்களும், இறை கீர்த்தனைகளும் சினிமாவில் வரும் இசைப்பாடல்களால் தான் மக்களின் மனதில் ஆழமாக வேரூன்றியது உண்மை. எனவே முதல்வரின் வேண்டுகோளை ஏற்று இசைஞானி அவர்கள் சங்கப்பாடல்களுக்கு இசை அமைக்க முன்வந்துள்ளது இனிப்பான செய்தி.
செட்டியார்கள் குலம் என்னும் மணிமகுடத்தில் இன்றும் கோகிநூர் வைரமாக ஜொலிப்பவர் மரணத்தை வென்ற மாமனிதர் திரு. கருமுத்து தியாகராஜன் செட்டியார் அவர்கள். ஆன்மிக, அரசியல், தமிழ் சேவை, தொழிலியல் தளங்களில் சாதனைகளை நிகழ்த்திய அப்பெருமகனாரின் வரலாறு நாம் அறிந்து கொள்ள வேண்டிய படிப்பினை. ஊர் நடுவே ஓங்கி வளர்ந்து நின்ற கனிமரமான அவரது வாழ்க்கைக் குறிப்பு பற்றிய கட்டுரை அழகு.
காவல் நிலைய லாக் அப் மரணங்களும், மனித உரிமை மீறல்களும் அதிகரித்து வரும் தற்போதைய சூழலில், காவல் நிலைய சி சி டி வி க்களை கண்காணிக்க மனிதத் தலையீடுகள் அற்ற தானியங்கிக் கட்டுப்பாட்டு அறை அமைக்கும் நீதிமன்றத்தின் யோசனை அவசியம் செயல்படுத்த வேண்டியதாகும்.
பி. எ ட்., எம். எ ட். மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாச நீட்டிப்பு குறித்த செய்தி ஒரு சிறந்த சமூக சேவை.
வெளிநாட்டினர் குடியேற்றத்தை எதிர்த்து லண்டனில் 1.5 லட்சம் பேர் பங்கேற்ற பேரணி apartheid அநியாயத்தின் மறு வடிவமாகத் தோன்றுகிறது.
கூகுளின் ஜெமினியின் நானோ பானோ AI தொழில் நுட்பத்தின் பாதக விளைவுகள் பற்றிய தகவல் காலமறிந்து ஒலித்த எச்சரிக்கை மணி.
அதே ரகம் தான் தெரு ஓரக் கடை உணவின் ஆபத்தும்.
சாஸ்திரத்தின் சில துளிகள் சிறந்த, பயனுள்ள தகவல் தொகுப்பு.
முகில் தினகரனின் "ஆண்டவன் கோர்ட்டில்" --- கதையோட்டம் ஆற்றொழுக்கு போல் இயல்பாக நகர்வது சிறப்பு. இலக்கியப் படைப்புக்கு poetic justice அவசியம் தான். ஆனால் happy ending என்பது கூடுதல் சிறப்பாக அமையும்.
பாரதி முத்து அவர்களின் கவிதை முத்த மழை பெண்மைச் சட்டகங்களை உடைத்துவிட்டது. கவிஞரின் பெயர் ராசி அப்படி!! ஒற்றை மலரோடு பேசிய கவிதையும் அபாரமான கற்பனை.
தனித்தமிழின் தாள லய வேகம், தாய்லாந்துக் கன்றின் சோகம் -- அதுவே வே. கல்யாண் குமார் அவர்களின் கவிதை. மன நிறைவளித்தது.
குடந்தை பரிபூரணன் அவர்களின் அண்ணா கவிதை காவியமாகக் கனிந்துள்ளது. திரு. நெல்லை குரலோன் அவர்களின் "உணர்ந்த கணத்தில் ஒளிர்வாய்" சிறந்த motivational work. இருவருக்கும் வாழ்த்துக்கள்.
மீண்டும் நாளை சந்திப்போம். நன்றி.
P. கணபதி
பாளையங்கோட்டை.