-பாவலர் கருமலைத்தமிழாழன்
வாழ்க்கை தன்னை வாழ்ந்து பார்ப்போம்
ஏழ்மை எனினும் எதிர்த்து நின்றே !!
வீழ்ந்த போதும் வீறுடன் எழுவோம்
வாழ்க்கை தன்னை வாழ்ந்து காட்டவே !!
தோல்விகள் வந்தால் தொங்க விட்டுக்
கால்களில் உதைத்துக் காண்போம் வெற்றியே !!
இரண்டு கைகள் இருப்ப தெதற்கு
உரமாய் உழைத்து உயர்வோம் வாழ்விலே !!
அயர்வை நீக்கி அல்லும் பகலும்
வியர்வை சிந்துவோம் விளையும் பலனே !!
சுற்றம் தன்னைச் சூழ அணைத்துக்
குற்றம் தவிர்ப்போம் கூடும் மகிழ்வே !!
கூழ்தான் எனினும் கூடி உண்போம்
காழ்ப்பும் வெறுப்பும் காணா தோடுமே !!
வருவாய்க் கேற்ப வாழ்வை அமைத்தால்
வறுமை யின்றி வாழ்வோம் நன்றே !!
துன்பம் வந்தால் துவண்டி லாமல்
நன்றாய் சிந்தி நல்வழி காட்டுமே !!
பதவி வரினும் பணம்தான் வரினும்
உதவும் மனம்தான் உயர்வைத் தருமே !!
திருக்குறள் கருத்தில் தினமும் நடந்தால்
திருவாய் வாழ்வும் திகழும் சிறந்தே !!
வரமாய் வந்த வாழ்க்கை தன்னில்
தரமாய் வாழ்வோம் தரணி போற்றவே !!
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?