திருநெல்வேலி: “விஜய் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார். கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் தொடர்பான விரிவான அறிக்கை அளித்துள்ள நிலையில், அவற்றுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும்” என்று தமிழக சட்டப் பேரவை தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் இன்று அவர் கூறியது: “இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி சட்டப் பேரவையில் நிறைவேற்றிய மசோதா குறித்து எவ்வளவு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அந்தளவுக்கு ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 2 ஆண்டு காலமாக மசோதாவை ஆளுநர் நிலுவையில் வைத்து வந்துள்ளார்.
கிடப்பில் போடப்படும் மசோதாவை நிறைவேற்ற கால நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் ஆளுநர் விருப்பு வெறுப்பு இல்லாமல் செயல்படவேண்டும் என்றுதான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் விளக்கத்தையே நீதிமன்றம் கொடுத்துள்ளது. வழக்குக்கு தீர்ப்பு கொடுக்கவில்லை.
அந்த வழக்கில் தடை, தவறு என எதையும் நீதிமன்றம் சொல்லவும் இல்லை. காலக்கெடு கொடுப்பதற்கு நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்பதையே நீதிமன்றம் சொல்லி உள்ளது. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அதனை செய்து கொடுங்கள் என்றுதான் சொல்லி உள்ளார்கள்.
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு கொடுக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது. ஆனால், அதனை நிராகரிக்கவில்லை என பாஜக சொல்லி வருகிறது. மத்திய அமைச்சர் நிராகரித்ததாக சொல்கிறார். ஆனால் தமிழக பாஜகவினர் அதனை நிராகரிக்கவில்லை, திருப்பித்தான் அனுப்பப்பட்டுள்ளது என சொல்லிவருகிறார்கள். யார் சொல்வதை நம்புவது?
தமிழக அரசால் கொடுக்கப்பட்ட மெட்ரோ திட்ட டி. பி. ஆர்-ல் பல இடங்கள் பாதிக்கப்படும் எனவும், அளவீடுகள் குறைவாக உள்ளது என்பதையும் சுட்டி காட்டித்தான் திருப்பி அனுப்பி உள்ளதாக பாஜகவினர் கூறிவருகிறார்கள். இலவசமாக மெட்ரோ திட்டத்தை மத்திய அரசு தரவில்லை. 50 சதவீத பங்கை மட்டும்தான் அவர்கள் தருகிறார்கள்.
சென்னை 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 6 ஆண்டுகள் எதனையும் செய்யாமல் இருந்த சூழலில்தான், தமிழக அரசு 6-ல் 5 பங்கு நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. ஆனால் ஒரு பங்கு தொகையை மட்டும் கொடுத்துவிட்டு அனைத்தையும் தாங்கள் கொடுத்ததாக சொல்லி வருகிறார்கள்.
அதற்குள்ள வட்டி தொகையை மத்திய அரசு கட்டுமா? மத்திய அரசு தமிழக அரசை சிரமப்படுத்தினால் என்ன செய்ய முடியும். பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் அனைத்து திட்டங்களையும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. விஜய் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளார். அவர் மீண்டும் பிரச்சாரத்திற்கு செல்கிறார் என்பதை சொல்லி அவரை நெருக்கடிக்கு உள்ளாக்க வேண்டாம்" என்று தெரிவித்தார்.