விராசத்’ கடன் திட்டத்தில் ரூ.10 லட்சம் வரை கடனுதவி: சிறுபான்மை கைவினை கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் கீழ், சிறுபான்மையின கைவினைக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ‘விராசத் – கைவினை கலைஞர் கடன் திட்டம்’ செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ் தையல் தொழில், பாய் முடைதல், கூடை பின்னுதல், தறி நெய்தல், ஆரி வேலை, எம்பிராய்டரி, கைவினைப் பொருட்கள் தயாரித்தல், மரச்சாமான்கள் செய்தல் உள்ளிட்ட பல்வேறு கைவினைத் தொழில்களில் ஈடுபட்டு வரும் சிறுபான்மையின கலைஞர்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன் உதவி வழங்கப்படுகிறது.
நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் வசிக்கும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் உள்ள சிறுபான்மையின கைவினைக் கலைஞர்களுக்கு, அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படும்.
இதில் ஆண் பயனாளிகளுக்கு 5% மற்றும் பெண் பயனாளிகளுக்கு 4% ஆண்டு வட்டி விகிதத்தில் கடனுதவி வழங்கப்படுகிறது.
குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சம் வரை உள்ள நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற சிறுபான்மையின கைவினைக் கலைஞர்களுக்கு, ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படும். இதன் கீழ் ஆண் பயனாளிகளுக்கு 6% மற்றும் பெண் பயனாளிகளுக்கு 5% ஆண்டு வட்டி விகிதத்தில் கடன் உதவி வழங்கப்படுகிறது. மேற்கண்ட இரண்டு திட்டங்களின் கீழ் பெறப்படும் கடன் தொகையை 5 ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும்.
இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் சமூகங்களைச் சேர்ந்த சிறுபான்மையின கைவினைக் கலைஞர்கள், https://tamco.tn.gov.in/ என்ற இணையதள முகவரி வாயிலாக அல்லது
கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை நேரில் அணுகி விண்ணப்பங்களைப் பெற்றுப் பயன்படுத்தலாம்.
இந்த வாய்ப்பை சிறுபான்மையின கைவினைக் கலைஞர்கள் அதிகளவில் பயன்படுத்திக் கொண்டு பொருளாதார முன்னேற்றம் அடைய வேண்டும் என கலெக்டர் துர்காமூர்த்தி கேட்டுக்கொண்டுள்ளார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?