விளையாட்டு வீரர்கள் உபகரணங்கள் வாங்க ரூ. 23.21 லட்சம் நிதி உதவி: உதயநிதி வழங்கினார்
சென்னை, செப். 20–
தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வாங்குவதற்காகவும், பயிற்சி பெறுவதற்காகவும் 23,21,140 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளை நிதியிலிருந்து பதக்கங்கள் வென்ற பாரா தடகள வீராங்கனைகள் முத்துமீனா வெள்ளைசாமி, நா. சங்கர் சத்யா, பாரா தடகள வீரர் க. கஐன் கெளதம் ஆகியோர் ஆஸ்திரேலியா நாட்டின் பிரிஸ்பேன் நகரில் அக்டோபர் 8 முதல் 15 வரை நடைபெற உள்ள 2025 தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துக் கொள்வதற்காக தலா 2,61,800 ரூபாய்க்கான காசோலைகளையும்,
பாரா பேட்மிண்டன் வீரர் தினகரன் பாண்டுரங்கன் நடைபெற உள்ள உலக சாம்பியன்ஷிப் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக பயிற்சி மேற்கொள்ள 75 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையையும், தங்கப் பதக்கம் வென்ற நீச்சல் வீராங்கனை பிரமிதி ஞானசேகரன் பக்ரைன் நாட்டில் நடைபெறும் 2025 ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கவும், விளையாட்டு உபகரணங்கள் வங்குவதற்காகவும் 1.25 லட்சம் ரூபாய்க்கான காசோலையையும்,
தேசிய சீனியர் தடகள சேம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தடகள வீராங்கனை கி. கோபிகா விளையாட்டு உபகரணங்கள் வங்குவதற்காக 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையையும் மற்றும் வில்வித்தை வீராங்கனை கே. எஸ். வெனிசா ஸ்ரீ விளையாட்டு உபகரணங்கள் வாங்குவதற்கு 4,10,740 ரூபாய்க்கான காசோலையையும் வழங்கினார்.
இதேபோல, போர்ச்சுக்கலில் நடைபெறும் சர்வதேச போட்டியில் பங்குபெறும் ஃபிளையிங் டிஸ்க் அணிக்கு 6 லட்சம் ரூபாய்க்கான காசோலையையும், 75ஆவது தேசிய ஜீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு விடுதி கூடைப்பந்து வீரர், வீராங்கனைகள் ர.ர.அஸ்வீன், ஐ. ஆகாஷ், பா.சு. ராஐலெட்சுமி, பெ.குருதீபா, பா.ஸ்ரீராஐலெட்சுமி ஆகியோருக்கு விளையாட்டு உபகரணங்களுக்காக தலா 30 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளையும், இரக்பி வீராங்கனை ந.சு.அக்ஷயாவிற்கு உபகரணங்கள் வாங்குவதற்காக 75 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையையும் வழங்கினார்.
டைவிங் போட்டி வீராங்கனைகள்
டைவிங் போட்டியில் சாதனை படைத்த வீராங்கனை சா. அர்ச்சனா, உலக அளவில் இந்தியா மற்றும் தமிழ்நாட்டை பிரதிநிதித்துவ படுத்திய, உலகிலேயே ஆர்க்டிக் மிஷன் முடித்த இளம் வயது விண்வெளி வீராங்கனை இனியா பிரகதி ஆகியோர் துணை முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இந்நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத ரெட்டி உள்பட விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.