விழுப்புரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள்: கலெக்டர் ஷேக் அப்துல் ஆய்வு
Oct 10 2025
10

விழுப்புரம், அக்.9-–
விழுப்புரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை மாவட்ட கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் ஆய்வு செய்தார்.
விழுப்புரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையையொட்டி அதனை எதிர்கொள்ளும் விதமாக அனைத்து பகுதிகளுக்கும் பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரம் தீயணைப்பு நிலையத்தில் மழைக்காலங்களில் மீட்பு பணிகள் மேற்கொள்வதற்காக சிறப்பு தளவாடங்களான ரப்பர் படகு, ஜெனரேட்டர், சூப்பர் ஜெட் பம்ப், ஏணி வகைகள், ஹைட்ராலிக் டோர் ஓப்பனர், கயிறு வகைகள், பாம்பு பிடிக்கும் கருவி, ஸ்டெச்சர், புயல்கால விளக்குகள், பாதுகாப்பு உடைகள் போன்ற உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளதை கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விழுப்புரத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கில் மழைக்காலங்களில் பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய அரிசி, பருப்பு, சர்க்கரை, பாமாயில் போன்ற அத்தியாவசிய பொருட்கள் இருப்பு உள்ளதை பார்வையிட்ட அவர், மாவட்டத்தில் உள்ள 1,254 ரேஷன் கடைகளுக்கும் அத்தியாவசிய பொருட்கள் சரியாக அனுப்பப்படுகிறதா என்பதை ஆய்வு செய்தார்.
காணை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பேரிடர் காலத்தில் அவசரகால தொலைதொடர்பு அழைப்பு சம்பந்தமாக ஆய்வு மேற்கொண்டார். பின்னர் காணைகுப்பம் ஊராட்சியில் நீர்வளத்துறை சார்பில் பம்பை ஆற்றிலிருந்து வைலாமூர் ஏரிக்கு செல்லும் பிரிவில் தலைமதகு கதவு அமைப்பதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் கண்ணன், மின்வாரிய செயற்பொறியாளர்கள் சுரேஷ்குமார், முருகன், உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஜமுனாராணி, துணை மண்டல மேலாளர் உமாமகேஸ்வரி, நீர்வளத்துறை உதவி பொறியாளர் கார்த்தி, காணை ஒன்றியக்குழு தலைவர் கலைச்செல்வி, நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கு கண்காணிப்பாளர் சத்தியமூர்த்தி உள்பட பலர் உடனிருந்தனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?