பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகளை தொய்வின்றி நிறைவேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவு
திண்டுக்கல், அக்.9–
திண்டுக்கல்லில் நடந்த ஆய்வு கூட்டத்தில் துணை முதல் -அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகளை தொய்வின்றி நிறைவேற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார்.
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் அனைத்துத் துறை பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார். இதில் மாவட்டத்தில் அனைத்து துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள், அரசின் சிறப்பு திட்டங்களின் செயல்பாடு குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் அரசின் திட்ட பணி களை தொய்வின்றி முடிக்கும் படி உத்தரவிட்டார்.
அப்போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:–
-மாநிலம் தழுவிய திட்டங்களை மட்டுமின்றி, அந்தந்த மாவட்ட மக்களின் தேவைகளையும் அறிந்து நிறைவேற்றுகிறோம். பொதுமக்களின் தேவைகளை அறிய, "உங்களுடன் ஸ்டாலின்" முகாம் நடத்தப்படுகிறது. மாநிலம் முழுவதும் 10 ஆயிரம் முகாம்கள் நடத்த திட்டமிட்டு, 8,200 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. நவம்பர் 15- ந்தேதி-க்குள் அனைத்து முகாம்களும் நடத்தப்படும். திண்டுக்கல் மாவட்டத்தில் இன்னும் 102 முகாம்கள் நடத்தப்பட இருக்கிறது. இதில் பொதுமக்களிடம் பெறப்படும் மனுக்களை முறையாக விசாரித்து தீர்வு காண வேண்டும்.
பாலமாக செயல்படுங்கள்
தமிழக அரசு வேலை வாய்ப்பில் விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு கொடுத்துள்ளோம். மாற்றுத்திறனாளி வீரர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. எனவே கிராம ஊராட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட விளையாட்டு உபகரணங்களை வழங்கி, மினி ஸ்டேடியத்தின் கட்டுமான பணிகளை முடிக்க வேண்டும். பொதுமக்களின் அடிப்படை தேவைகளான சாலை, குடிநீர், தடையில்லா மின்சாரம் ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அடிப்படை வசதிகளை தொய்வின்றி நிறைவேற்ற வேண்டும். இதற்காக மக்கள் பிரதிநிதிகளின் ஆலோசனையை பெற்று பணியாற்றும்படி கேட்டுக்கொள்கிறேன்.
நமது முதலமைச்சர் பல முற்போக்கு திட்டங்களை செயல்படுத்துகிறார். அவை மக்களிடம் சேரவேண்டும். இதற்காக அரசுக்கும், பொது மக்களும் பாலமாக இருந்து அரசு அலுவலர்கள் செயல் பட வேண்டும். தமிழக அரசுக்கும் முதல்-அமைச்சருக்கும் நல்ல பெயரை பெற்றுத்தர வேண்டும் என பேசினார்.
இதில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, எம்.பி.க்கள் சச்சிதானந்தம், ஜோதிமணி, எம்.எல்.ஏ.க்கள் செந்தில்குமார், காந்திராஜன், மேயர் இளமதி, அரசின் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை கூடுதல் தலைமை செயலாளர் பிரதீப் யாதவ், கலெக்டர் சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, போலீஸ் சூப்பிரண்டு பிரதீப், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திலகவதி, மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் சதீஷ்பாபு, மாநகராட்சி ஆணையர் செந்தில்முருகன், 17-வது வார்டு கவுன்சிலர் கே.கே.ஆர்.வெங்கடேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.