வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் – பாகிஸ்தான் பிரதமர் சந்திப்பு

வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் – பாகிஸ்தான் பிரதமர் சந்திப்பு



வாஷிங்டன், செப். 26–


வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நேற்று சந்தித்துப் பேசினார்.


80வது ஐ.நா. பொதுச்சபை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கூடியது. கடந்த 21ம் தேதி தொடங்கிய கூட்டம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதற்கிடையே காசா பிரச்சினை உள்ளிட்டவை தொடர்பாக முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளின் தலைவர்களுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த கூட்டத்தில் பங்கேற்வர்களில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபும் ஒருவர் ஆவார்.


இந்த சூழலில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், நேற்று தலைநகர் வாஷிங்டன் சென்று வெள்ளை மாளிகையில் ஓவல் அலுவலகத்தில் அதிபர் டிரம்ப்பைச் சந்தித்துப் பேசினார். அப்போது, பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனிர் உடன் இருந்தார். அப்போது, அனைத்து கதவுகளும் மூடப்பட்டு ரகசியமான முறையில் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.


அப்போது இருநாட்டு உறவுகள்,வருங்கால திட்டங்கள் குருத்து பேச்சுவார்த்தை நடந்ததாக தெரிகிறது. சந்திப்புக்கு முன் அவர்கள் இருவரையும் டிரம்ப் ஒரு மணி நேரம் காக்க வைத்ததாகவும் கூறப்படுகிறது. பிரதமராக இருந்த இம்ரான் கான், 2019-ல் ஓவல் அலுவலகத்தில் அமெரிக்க அதிபரைச் சந்தித்துப் பேசினார். அதன்பிறகு, பாகிஸ்தான் பிரதமர் ஒருவர் ஓவல் அலுவலகத்தில் அமெரிக்க அதிபரை சந்திப்பது இதுவே முதல்முறை. சந்திப்புக்கு பின், இருவரையும் சிறந்த மனிதர்கள் என டிரம்ப் விவரித்துள்ளார்.


இந்த சந்திப்பு தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ராணுவத் தளபதி அசிம் முனீருடன் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், டிரம்ப்பை சந்தித்துப் பேசினார். அப்போது, அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோர் உடன் இருந்தனர்.


பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் பாகிஸ்தானின் பங்கை வெளிப்படையாக ஆதரித்ததற்காக டிரம்ப்புக்கு ஷெரீப் நன்றி தெரிவித்தார். மேலும், பாதுகாப்பு மற்றும் உளவுத்துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார். டிரம்ப்பை, அமைதியின் மனிதர் என ஷெரீப் வர்ணித்தார். உலகின் பல பகுதிகளில் மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதில் டிரம்ப்பின் நேர்மையான முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்தார். தைரியமான, துணிச்சலான, தீர்க்கமான தலைமைப்பண்பை டிரம்ப் கொண்டுள்ளதாகவும் ஷெரீப் பாராட்டினார்.


மேலும், கடந்த மே மாதம் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே 4 நாட்கள் நடந்த ராணுவ மோதலை முடிவுக்குக் கொண்டு வர டிரம்ப் செய்த மத்தியஸ்தத்துக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். மேலும், தனது வசதிக்கு ஏற்ப பாகிஸ்தானுக்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொள்ளுமாறு டிரம்ப்புக்கு பிரதமர் ஷெரீப் அழைப்பு விடுத்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%