வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்தியா 518 ரன்னுக்கு டிக்ளர்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்தியா 518 ரன்னுக்கு டிக்ளர்


புதுடெல்லி, அக்.11-


வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்டில் சிறப்பான தொடக்கத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழந்த நிலையில் 518 ரன்களுக்கு டிக்ளர் செய்தது.


இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று தொடங்கியது. சமீபத்தில் மரணம் அடைந்த வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் பெர்னார்ட் ஜூலியனின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்திருந்தனர்.


‘டாஸ்’ ஜெயித்த இந்திய கேப்டன் சுப்மன் கில் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். டெஸ்ட் கேப்டன் பொறுப்பை ஏற்ற பிறகு கில் டாசில் வெல்வது (முதல் 6-ல் தோல்வி) இதுவே முதல் முறையாகும். இதன்படி லோகேஷ் ராகுலும், யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். நிதானமாக ஆடிய இவர்கள் முதல் 8 ஓவர்களில் 2 பவுண்டரி மட்டுமே அடித்தனர். முதல் விக்கெட்டுக்கு 58 ரன்கள் (17.3 ஓவர்) எடுத்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. ராகுல் 38 ரன்களில் (54 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) இடக்கை சுழற்பந்து வீச்சாளர் ஜோமல் வாரிகனின் பந்தில் ஸ்டம்பிங் செய்யப்பட்டார்.


2-வது விக்கெட்டுக்கு தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்சன் நுழைந்தார். முதலாவது டெஸ்டில் ஒற்றை இலக்கத்தை தாண்டாத சுதர்சன் இந்த முறை பவுண்டரியுடன் ரன் கணக்கை தொடங்கியதுடன், நிலைத்து நின்று நேர்த்தியான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். ஜெய்டன் சீல்சின் ஒரே ஓவரில் 3 பவுண்டரிகளை சாத்திய ஜெய்ஸ்வால், 145 பந்துகளில் தனது 7-வது சதத்தை நிறைவு செய்தார்.


மறுமுனையில் 58 ரன்னில் எளிதான கேட்ச் வாய்ப்பில் இருந்து தப்பித்த சாய் சதர்சன் தனது முதலாவது சர்வதேச சதத்தை நோக்கி முன்னேறினார். அணியின் ஸ்கோர் 251-ஐ எட்டிய போது சாய் சுதர்சன் 87 ரன்களில் (165 பந்து) எல்.பி.டபிள்யூ. ஆனார்.


3-வது விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வாலுடன், கேப்டன் சுப்மன் கில் இணைந்தார். இவர்கள் ஸ்கோர் 300-ஐ தாண்ட வைத்தனர். இந்தியாவின் ஆதிக்கத்தை அனுபவம் இல்லாத வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களால் தடுக்க முடியவில்லை.


ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 90 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 318 ரன்கள் குவித்துள்ளது. ஜெய்ஸ்வால் 173 ரன்களுடனும் (253 பந்து, 22 பவுண்டரி), சுப்மன் கில் 20 ரன்னுடனும் (68 பந்து, 3 பவுண்டரி) களத்தில் உள்ளனர்.


வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் 6 பேர் பந்து போட்டனர். ஆனால் ஆச்சரியம் அளிக்கும் வகையில் வைடு, நோபால் என எக்ஸ்டிரா வகையில் ஒரு ரன் கூட விட்டுக்கொடுக்கவில்லை. சொல்லப்போனால் லெக்-பை வகையில் கூட ரன் வரவில்லை. இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெறும்.


இந்திய தொடக்க ஆட்டக்காரர் 23 வயதான ஜெய்ஸ்வால் இதுவரை 26 டெஸ்டுகளில் ஆடி 7 சதங்கள் அடித்துள்ளார்.


இவற்றில் 5 முறை 150 ரன்களை கடந்துள்ளார். 24 வயதை எட்டுவதற்குள் அதிக முறை 150 ரன்களை கடந்த சாதனையாளர்களில் ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேனுக்கு (8 முறை) அடுத்த இடத்தை ஜெய்ஸ்வால் பிடித்துள்ளார்.


இந்நிலையில், ஆட்டத்தின் 2வது நாளான இன்று கேப்டன் சுப்மன் கில் சதம் அடித்து அசத்தினார். ஜெய்ஸ்வால் இரட்டை சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஜெய்ஸ்வால் ரன் அவுட் ஆனார். அவர் 175 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சீல்ஸ் வீசிய பந்தை விளாசிவிட்டு ஒருரன் ஓட முற்பட்டார். ஆனால், அவருடன் களத்தில் இருந்த ஷுப்மன் கில் ரன் ஓட மறுத்துவிட்டார். இதனால், ஏற்பட்ட குழப்பத்தில் ஜெய்ஸ்வால் ரன் ஆவுட் ஆனார். ஜெய்ஸ்வால் ரன் அவுட் முறையில் வெளியேறி இரட்டை சதத்தை தவறவிட்டது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


158 ரன்களுக்கு டிக்ளர்


அவரைத் தொடர்ந்து களம் இறங்கிய நிதிஷ்குமார் ரெட்டி சிறப்பான ஆட்டத்தை வெளிப் படுத்திய போதிலும் 43 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார்.


அதன்பின் களம் இறங்கிய ஜுரேல் கேப்டன் சுப்மன் கில்லுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் 44 ரன்களில் அவுட்டானார். 134.2 ஓவரில் இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 518 ரன் அடித்த நிலையில் டிக்ளர் செய்தது. சுப்மன் கில் 128 ரன்கள் அடித்திருந்தார்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%