உலகக் கோப்பை: வங்காளதேசத்தை வீழ்த்தி நியூசிலாந்து பெண்கள் அணி முதல் வெற்றி

உலகக் கோப்பை: வங்காளதேசத்தை வீழ்த்தி நியூசிலாந்து பெண்கள் அணி முதல் வெற்றி


கவுகாத்தி, அக்.11-


பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் வங்காளதேசத்தை வீழ்த்தி நியூசிலாந்து முதலாவது வெற்றியை பதிவு செய்தது.


அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்று நடந்த 11-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான நியூசிலாந்து அணி, வங்காளதேசத்தை எதிர்கொண்டது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 38 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்த போதிலும் கேப்டன் சோபி டிவைனும், புரூக் ஹேலிடேவும் இணைந்து சரிவில் இருந்து காப்பாற்றினர். தனது 18-வது அரைசதத்தை அடித்த சோபி டிவைன் 63 ரன்களும் (85 பந்து), ஹேலிடே 69 ரன்களும் (104 பந்து) விளாசினர்.


நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுக்கு 227 ரன்கள் சேர்த்தது. சுழற்பந்து வீச்சாளர் ரேபயா கான் 3 விக்கெட் வீழ்த்தினார்.


பின்னர் 228 ரன் இலக்கை நோக்கி ஆடிய வங்காளதேசம், நியூசிலாந்தின் பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திண்டாடியது. 33 ரன்னுக்குள் 6 விக்கெட்டுகளை தாரைவார்த்த அந்த அணியால் அதில் இருந்து மீள முடியவில்லை. 39.5 ஓவர்களில் 127 ரன்னில் சுருண்டது. இதனால் நியூசிலாந்து 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக பஹிமா கதுன் 34 ரன்கள் எடுத்தார். இதற்கு அடுத்தபடியாக எக்ஸ்டிரா வகையில் 30 ரன் அவர்களுக்கு கிடைத்தது. நியூசிலாந்து தரப்பில் ஜெஸ் கெர், லியா தஹூஹூ தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.


முதல் 2 ஆட்டங்களில் தோற்றிருந்த நியூசிலாந்துக்கு இது முதலாவது வெற்றியாகும். வங்காளதேசத்துக்கு 2-வது தோல்வியாகும்.


கொழும்பில் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடக்கும் 12-வது லீக்கில் 4 முறை சாம்பியனான இங்கிலாந்து அணி, இலங்கையை சந்திக்கிறது.


இவ்விரு அணிகள் இதுவரை 20 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 17-ல் இங்கிலாந்தும், ஒன்றில் இலங்கையும் வெற்றி பெற்றுள்ளன. 2 ஆட்டத்தில் முடிவில்லை.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%