வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை: விழுப்புரம் கலெக்டர் வழங்கினார்
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில், மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமினை கலெக்டர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிக்குமார், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா. லட்சுமணன் ஆகியோர் முன்னிலையில் துவக்கி வைத்து, தோ்வு பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
அப்போது அவர் கூறியதாவது:
முதலமைச்சர், தமிழ்நாடு அனைத்துத்துறைகளிலும் முதன்மை மாவட்டமாக விளங்கிட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் பல்வேறு சிறப்புத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில், அரசு மற்றும் தனியார்துறைகளில் படித்த இளைஞர்களின் பங்கு அதிகமாக இருந்திட வேண்டும் என்பதற்காக வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு மற்றும் தனியார்துறை வேலைவாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுத்திடும் விதமாக, அனைத்து மாவட்டங்களில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், அரசு போட்டித்தோ்விற்கான பயிற்சி வகுப்புகள் மற்றும் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்து வருகிறார்கள்.
இன்றைய தினம் நடைபெற்ற மாவட்ட அளவிலான மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில், 154 தனியார்துறை நிறுவனங்களும், 4212 வேலைநாடுநர்கள் கலந்துகொண்டனர். இதில், 17 மாற்றுத்திறனாளிகள் உட்பட 880 நபர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. 11 நபர்கள் திறன் பயிற்சி பெற விண்ணப்பித்துள்ளனர். 187 நபர்கள் வேலைவாய்ப்பிற்கான இரண்டாம் கட்ட தோ்விற்கு தகுதிபெற்றுள்ளனர். எனவே, தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு தோ்வானவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தொிவித்துக்கொள்வதோடு, சிறப்பான முறையில் பணிபுரிந்து தங்கள் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்வில், திட்ட இயக்குநர் இணை இயக்குநர் (மகளிர் திட்டம்) செந்தில்வடிவு, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், உதவி இயக்குநர் தி.பாலமுருகன், விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, முதல்வர் சிவக்குமார், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் வேல்முருகன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.