"வேலை எதுவும் காலி இல்லை!' போ... போ!" பலசரக்குக் கடை முதலாளி துரத்த,
அந்த இளைஞன் மறுபடியும், " ஐயா... எந்த வேலை குடுத்தாலும் செய்வேனுங்க" என்றான்.,
கோபமான கடை முதலாளி, தன் பக்கத்திலிருந்த ஆரஞ்சு நிற பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலை எடுத்து அவன் மீது வீசினார். நொந்து போனவன் குனிந்து அந்த பிளாஸ்டிக் பாட்டிலை பொறுக்கிக் கொண்டு நடந்தான்.
சிறிது தூரம் சென்றதும் பசியின் தாக்கத்தால் கால்கள் "கிடு...கிடு" வென்று நடுங்க, சாலையோரமிருந்த பாறையின் மீது அமர்ந்தான்.
கொதிப்பாயிருந்தது பாறை. வயிற்றினுள் எரியும் பசியின் கொதிப்பை விட அந்தக் கொதிப்பு குறைவாகவேயிருந்தது அவனுக்கு.
பிளாஸ்டிக் பாட்டிலுக்குள்ளிருந்த கொஞ்சம் தண்ணீரைத் தொண்டையில் வார்த்து விட்டு, காலி பாட்டிலை பாறை மீது வைத்தான்.
இரு முழங்கால்களுக்கும் இடையில் முகத்தைப் பொதித்துக் கொண்டு கண்களை மூடிக் கொண்டான்.
இருபது நிமிடங்களுக்குப் பின் மெல்லத் தலையைத் தூக்கிப் பார்த்தான். தண்ணீருக்காக பாட்டிலைப் பார்த்தான்.
வெயிலின் தகிப்பையும், பாறையின் கொதிப்பையும் தாங்க முடியாத அந்தப் பிளாஸ்டிக் பாட்டில் உருகி, பிளாஸ்டிக் கலவையாய் பாறை மீது படிந்திருந்தது.
கையால் அதைத் தொட்டுப் பார்த்தவன் "ஸ்ஸ்...ஆ ஆ" என்றான்.
வெயிலின் உஷ்ணம் குறையக் குறைய பிளாஸ்டிக் கலவை இறுக ஆரம்பித்தது.
இப்போது அதைக் கையால் எடுக்க முடிய, மெல்ல எடுத்து இரு உள்ளங்கைகளுக்கு நடுவில் வைத்து உருட்ட ஆரம்பித்தான்.
அப்போது அவன் கண்கள் சற்றுத்தள்ளி மரத்தடியில் இருந்த பிள்ளையாரைப் பார்க்க கைகள் மாறி மாறி அந்தப் பிளாஸ்டிக் கலவையைப் பிசைய சில நிமிடங்களில் அவன் கையில் அற்புதமான விநாயகர் உருவச்சிலை.
அதை மரத்தின் நிழலில் வைக்க, சில நிமிடங்களில் அது கெட்டியானது.
அந்தச் சிலையை கடைவீதிக்கு கொண்டு போய் விற்றான். நூறு ரூபாய் கிடைக்க, பல்வேறு நிறங்களில் பழைய பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை வாங்கி, ஒரு பெரிய தகரத்தின் மீது வைத்து, அடியில் நெருப்பை வைத்து உருக்கினான்.
பிறகு கையால் பிசையும் அளவிற்கு சூடு தணிந்ததும் மீண்டும் பிள்ளையாரை மனதில் நினைத்துக் கொண்டு செய்தான்.
அடுத்த அரை மணி நேரத்தில் பத்துக்கும் மேற்பட்ட சிலைகள் அவன் எதிரில்.
மீண்டும் கடைவீதி சென்று விற்பனையை தொடர்ந்தான். கையில் ஆயிரம் ரூபாய் விழுந்தது.
அதைக் கொண்டு பிள்ளையார் சிலை செய்வதற்கான அச்சு வாங்கினான். தினமும் நூற்றுக்கணக்கான பிள்ளையார் சிலைகள் தயாரித்தான்.
ஆறே மாதத்தில் பெரிய சிலை தயாரிப்பாளரானான். பணம் குவியத் துவங்கியது.
மார்க்கெட்டிலுள்ள எல்லாக் கடைகளுக்கும் சப்ளை செய்தான்.
எந்த முதலாளி அவனை பிளாஸ்டிக் பாட்டிலால் அடித்து துரத்தினாரோ அதே முதலாளியின் கடைக்குச் சென்று 50 சிலைகளை தந்து விட்டு, "ஐயா என்னை தெரிகிறதா?" கேட்டான்
அவர் புருவம் சுருக்க, இவனே பழைய சம்பவத்தை நினைவூட்டினான்.
வெட்கித் தலை குனிந்தவரின் தாடையைத் தொட்டுத் தூக்கி, "ரொம்ப நன்றிங்க உங்களாலதான் இந்த அளவுக்கு உயர்ந்தேன்" சொல்லி விட்டு வேக வேகமாய் நடந்தான்.
(முற்றும்)

முகில் தினகரன்
கோயம்புத்தூர்.