வைகுண்ட ஏகாதசியின் சிறப்புகள்

வைகுண்ட ஏகாதசியின் சிறப்புகள்



மாதங்களில் நான் மார்கழி என்று ஸ்ரீ கிருஷ்ணர் கீதையில் கூறினார் அப்படிப்பட்ட சிறப்பான மாதமான மார்கழியில் வரும் வளர்பிறை ஏகாதசி வைகுண்ட ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது ஏகாதசி என்பதற்கு பதினோராம் நாள் என்பது பொருள் ஞானேந்திரியங்கள் ஐந்து கர்மேந்திரியங்கள் ஐந்து மனம் ஒன்று ஆகிய பதினொன்றையும் பெருமாளுடன் ஐக்கிய படுத்தி தியானம் இருப்பதே ஏகாதசி தத்துவமாகும். மகாவிஷ்ணுவிற்கு உரிய விரதங்களில் ஏகாதசி விரதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. வைகுண்ட ஏகாதசி நாளில் திருமாலின் இருப்பிடமான வைகுண்டத்தின் கதவுகள் திறக்கப்படுவதாக ஐதீகம். மார்கழி மாதத்தில் வரும் இந்த வளர்பிறை ஏகாதசிக்கு முக்கோடி ஏகாதசி என்ற பெயரும் உண்டு. இவ்வுலகில் உள்ளவர்கள் மட்டுமல்லது முப்பத்து முக்கோடி தேவர்களும் வைகுண்ட ஏகாதசி விரதம் இருந்து மகாவிஷ்ணுவை வழிபடுவர். 

    இந்த ஏகாதசியுடன் இரண்டு அசுரர்களின் கதை உள்ளது, கிருத யுகத்தில் முரன் என்று ஒரு அசுரன் இருந்தான். அவன் தேவர்கள் உட்பட அனைவரையும் துன்புறுத்தினான். தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மகாவிஷ்ணு முரனை சம்ஹாரம் செய்ய புறப்பட்டார். அவன் படைக்கலன்களை எல்லாம் அழித்த பகவான், அவன் திருந்துவதற்கு ஒரு சந்தர்ப்பம் தர எண்ணி பத்ரிகாசிரமத்தில் ஒரு குகையில் சென்று உறங்குவது போல் படுத்துக் கொண்டார். பகவானை தேடிக் கொண்டு வந்த முரன் பகவான் உறங்குவதாக நினைத்து அவரைக் கொல்ல எண்ணினான். அப்போது மகாவிஷ்ணுவின் திருமேனியில் இருந்து ஒரு அழகான பெண் ஆயுதங்களுடன் தோன்றி முரனைப் போருக்கு அழைத்தாள். பெண் என்று அலட்சியமாக நினைத்த முரன்," பெண்ணே! உன்னைக் கொல்ல ஒரு அம்பே போதும்", என்று அம்பை எடுக்க முனைந்த போது அந்தப் பெண் "ஹூம்" என்று ஒலி எழுப்பினாள். அந்தக்ஷணமே முரன் பிடி சாம்பல் ஆகிப்போனான். 


ஏதும் அறியாதவர் போல் கண் விழித்த மகாவிஷ்ணு தன் திருமேனியில் இருந்து வெளிப்பட்ட சக்தியை பாராட்டி அவளுக்கு ஏகாதசி என்ற பெயரையும் சூட்டினார் நீ தோன்றிய இந்நாளில் விரதம் இருந்து வழிபடுபவர்களுக்கு சகல செல்வங்களையும் அருள்வதுடன் முடிவில் வைகுண்ட பதவியும் கிடைக்கும் என்று அருளினார். 


மேலும் இந்த ஏகாதசி "மது, கைடபர்" என்னும் இரு அசுரர்களின் கதையோடு தொடர்புடையது. முற்காலத்தில் பிரம்மாவுக்கு ஏற்பட்ட கர்வத்தை ஒடுக்க நினைத்த மகாவிஷ்ணு தனது செவிகளில் இருந்து மது கைடபர்களை தோற்றுவித்தார். அவர்கள் பிரம்மாவை கொல்ல முயன்ற போது தடுத்த மகாவிஷ்ணு அவர்களிடம் பிரம்மாவை விட்டு விடும்படியும், அவ்வாறு செய்தால் அவர்களுக்கு வேண்டிய வரம் தருவதாகவும் கூறினார். ஆனால் அந்த அசுரர்கள் பகவானுக்குத் தாங்கள் வரம் தருவதாக கூறினர். மகாவிஷ்ணுவும் தன்னால் அவர்கள் இருவரும் வதம் செய்யப்பட வேண்டும் என்ற வரத்தைக் கேட்டார். அசுரர்களாக இருந்தாலும் தாங்கள் கொடுத்த வாக்கை நிறைவேற்ற விரும்பி, "அப்படியே எங்களை வதம் செய்யுங்கள். ஆனால், ஒரு சிறு விண்ணப்பம்! எங்களுடன் நீங்கள் ஒரு மாத காலம் யுத்தம் செய்ய வேண்டும். அதன் பிறகே நாங்கள் சித்தி அடைய வேண்டும்", என்று வேண்டினர். பகவானும் அப்படியே ஆகட்டும் என்றார். யுத்தத்தின் முடிவில் அவர்களை வீழ்த்தினார். மகாவிஷ்ணுவின் மகிமைகளை உணர்ந்த அசுரர்கள் பரமபதத்தில் நாங்கள் நித்திய வாசம் செய்ய வேண்டும் என்ற வரத்தை கேட்டனர். "மார்கழி மாத வளர்பிறை ஏகாதசி என்று பரமபதத்தின் வடக்கு வாசலைத் திறந்து அதன் வழியாக மது, கைடபர்களைப் பரமபதத்தில் சேர்த்துக் கொண்டார். அசுரர்கள் தாங்கள் பெற்ற இன்பத்தை இவ்வுலக மக்கள் அனைவரும் பெற வேண்டும் என்று விரும்பி, "மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசியன்று தாங்கள் எங்களுக்கு செய்த அனுக்கிரகத்தை, உன் ஆலயங்களில் உள்ள பரமபத வாசல் வழியாக வந்து உன்னை தரிசிப்பவர்களுக்கு மோட்சத்தை நல்க வேண்டும்," என்று வேண்டினர். அந்த வேண்டுகோளையும் அவர் ஏற்றார். வைகுண்ட ஏகாதசித் திருவிழா வைணவத்தின் தலைமை பீடமாகிய ஸ்ரீரங்கத்தில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும். வைகுண்ட ஏகாதசி நாளில் திருவரங்கக் கோயிலில் உள்ள பரமபத வாசல் (வடக்கு வாசல்) வழியாக ஆச்சாவதாரத்தில் பெருமாள் வெளியே வரும்போது தரிசிப்பவர்களுக்கும், அவர்கள் செய்த பாவத்தை எண்ணி வருந்தி அதை திருத்திக் கொள்பவர்களுக்கும் அரங்கன் முக்தி அளிப்பார். 


ஏகாதசி விரதம் இருக்கும் முறை ஏகாதசி விரதம் இருப்பவர்கள் தசமி அன்று பகலில் மட்டும் உணவு எடுத்துக்கொண்டு ஏகாதசியன்று உண்ணாமலும் உறங்காமலும் இருக்க வேண்டும் குளிர்ந்த நீர் குடிக்க தடை இல்லை ஏகாதசி நாட்களில் துளசி இலைகளை பறிக்கக்கூடாது. வைகுண்ட ஏகாதசி அன்று, இரவு கண் விழித்து பரமபதம் விளையாடுவது ஒரு முக்கியமான சம்பிரதாயமாக கருதப்படுகிறது. வாழ்வில் ஏற்ற இறக்கங்கள் நமது பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப கிடைக்கும் என்பதே இதன் கருத்து. 


மறுநாள் துவாதசி என்று அதிகாலையில் குளித்து கோவிலுக்கு சென்று இறைவனை வணங்கிய பிறகு புளி இல்லாத உணவை உண்ண வேண்டும். உணவில் சுண்டைக்காய் நெல்லிக்கனி அகத்திக்கீரை சேர்த்து பற்களில் படாமல் ,"கோவிந்தா, கோவிந்தா, கோவிந்தா" என்று மூன்று முறை கூறி, ஆகாரம் எடுத்துக் கொண்டு விரதத்தை முடிக்க வேண்டும். ஏழைகளுக்கும் பசுக்கள், பிராணிகளுக்கும் உணவு வழங்க வேண்டும். துவாதசி என்று பகலில் தூங்கக் கூடாது. வயதானவர்களுக்கும் குழந்தைகளுக்கும் இதிலிருந்து விதிவிலக்கு உண்டு. 


எல்லா வைஷ்ணவ திவ்ய தேசங்களிலும் வைகுண்ட ஏகாதசி, பரமபத வாசல் திறப்புடன் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும். பூலோக வைகுண்டம் என்னும் ஸ்ரீரங்கத்தில் முக்கோடி ஏகாதசி 21 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும். 

அமாவாசைக்கு மறுநாள் பிரதமை அன்று தொடங்கும் பகல் பத்து, திருவத்யயன உற்சவம் அதாவது திருமொழித் திருநாள் என்றும், வைகுண்ட ஏகாதசியன்று இராப் பத்து அதாவது திருவாய்மொழி திருநாளும், பின் இயற்பா சாற்றுமுறையும் நடைபெறும். திருமொழி திருநாளில் நம்மாழ்வார் தவிர ஏனைய ஆழ்வார்களின் திவ்யப் பிரபந்த பாசுரங்களை, அர்ச்சுன மண்டபத்தில் அரையர் சேவையுடன் செவி சாய்க்கும் பெருமாள், இராப் பத்து உற்சவத்தின் போது நம்மாழ்வார் பாசுரங்ளை திருமாமணி மண்டபம் என்னும் ஆயிரம் கால் மண்டபத்தில் எழுந்தருளி செவி சாய்ப்பார். 


வைகுண்ட ஏகாதசிக்கு முதல் நாள் நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் காட்சியளிப்பார் அன்று அரையர் சேவையில் திருப்பாற்கடலை கடைந்த வைபவம் அபிநயம் பிடிக்கப்படும். 


இந்த ஏகாதசி நன்னாளில் பரமபத வாசல் வழியாக ரத்தினங்கியில் நம் பெருமாள் வரும் போது "ரங்கா ரங்கா" என்ற

கோஷம் விண்ணை பிளக்கும். 

ராப்பத்து எட்டாம் நாள் திருமங்கை மன்னன் வேடுபறியின் நடைபெறும். சாற்று முறை அன்று நம்மாழ்வார் மோட்சம், அதற்கு மறுநாள் இயற்பாசாற்று முறையுடன் முடிவு பெறும். இராப் பத்து நாட்களில் பரமபத வாசல் தினமும் பெருமாள் திருமாமணி மண்டபத்திற்கு எழுந்தருளும் போது திறக்கப்படும்.


இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த வைகுண்ட ஏகாதசி இந்த வருடம் டிசம்பர் மாதம்30ஆம் தேதி, மார்கழி மாதம் 15ஆம் தேதி வருகிறது. இந்நன்னாளில் விரதம் இருந்து அனைவரும் மகாவிஷ்ணுவின் அருளுக்கு பாத்திரமாவோம். 

ஸர்வோ ஜனஹா சுகினோ பவந்து🙏


எழுத்தாளர் அலமேலு ரங்கராஜன்

ஸ்ரீவில்லிபுத்தூர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%