"அதே காதலுடன் அங்கொருவன்"

"அதே காதலுடன் அங்கொருவன்"


கல்லூரிக் காலத்தில் தன்னைத் துரத்தித் துரத்தி ஒரு தலையாய்க் காதலித்த திவாகரின் எண்ணம் புரிந்திருந்தும் புரியாதவள் போல் அவனைத் தவிர்த்த கல்பனாவிற்கு ஏனோ இன்று காலையிலிருந்தே அவன் நினைவு.


  "ஏன்?.. ஏன் என் மனம் இன்று அவனை நினைக்கிறது?... ஐம்பத்தேழு வயதாகி... கணவனை இழந்து விதவையாய்... குழந்தைப் பேறும் இல்லாத காரணத்தால் தனிமையாய்... வாழும் நான் எதற்காக அவனை நினைக்கிறேன்" யோசித்தாள்.


  "ஒருவேளை நானும் ஆழ்மனத்தில் அவனைக் காதலித்தேனா?... அதனால்தான் முப்பத்தியேழு வருஷம் கழித்து என் மனம் அவனை நினைக்கின்றதா?"


மெல்ல எழுந்து தொலைக்காட்சியை ஆன் செய்தாள்.


திரையில் ஓடிய சினிமாவின் கதாநாயகன் முகம் கூட அவன் முகம் போலவே தெரிய, சேனலை மாற்றினாள். அங்கே தெரிந்த அனைத்து முகங்களிலும் அவனே தெரிந்தான்.


 "கடவுளே... என்ன ஆச்சு எனக்கு?" வெறுப்பாய் எழுந்து மொபைலை எடுத்து பல வருடங்களாய் தொடர்பிலேயே இருக்கும் கல்லூரித் தோழி மைதிலிக்குக் கால் செய்து விஷயத்தைச் சொன்னாள்.


  "என்னடி வயசான காலத்துல ரொமான்ஸ் ஆரம்பிக்குதா?" மைதிலி கிண்டல் செய்ய,


 "ஏய்... நான் சீரியஸா பேசறேண்டி... ஏன் இன்னிக்கு திரும்பத் திரும்ப அவன் ஞாபகமே வருது எனக்கு?" சலிப்பாய் கேட்டாள் கல்பனா.


  "நீ சொல்றதையெல்லாம் கேட்கும் போது... நீயும் அவனை உள்ளுரக் காதலிச்சிருப்பியோ?ன்னு தோணுதடி" என்றாள் மைதிலி.


  "அய்யய்ய... அப்படியெல்லாம் ஒரு சின்ன நினைப்புக் கூட என் மனசுல இல்லை... அப்படி இருந்திருந்தா நான் எங்க வீட்ல பார்த்த மாப்பிள்ளையைக் கல்யாணம் பண்ணிட்டு... குடும்ப வாழ்விலே ஈடுபட்டிருப்பேனா?"


  "சரி இப்ப என்கிட்ட என்ன எதிர்பார்க்கறே?" மைதிலி நேரடியாகவே கேட்டாள்.


   "வந்து எனக்கு அந்த திவாகர் இப்ப எங்கே?..எப்படி இருக்கான்?னு கண்டுபிடிச்சுச் சொல்ல முடியுமா?"


வாய்விட்டுச் சிரித்த மைதிலி, "நீ என்ன லூஸா?... சுத்தமா முப்பத்தியேழு... முப்பத்தியெட்டு வருஷமாச்சு... மனுஷன் உள்நாட்டில் இருக்கிறானா?... இல்ல வெளிநாட்டில் எங்காவது இருக்கானா?... ஒண்ணுமே தெரியாம எப்பிடிடி கண்டுபிடிக்கிறது?" என்றாள். 


சில நிமிடங்கள் அமைதி காத்த கல்பனாவை உசுப்பினாள் மைதிலி.


   "என்னடி திடீர்னு அமைதியாயிட்ட?"


   "வந்து யோசிச்சுப் பார்த்தேன்?... எனக்கே இத்தனை நேரம் நான் பேசியது பைத்தியக்காரத்தனமாத் தெரிஞ்சது.... அதான் நிறுத்திட்டேன்!... மைதிலி.... நீயும் நான் பேசியதை.... நான் கேட்டதை.... எல்லாத்தையும் மறந்துடு." சீரியஸானாள் கல்பனா.


  "ஓகே... ஓகே... லீவ் இட்!... வேற சப்ஜெக்ட் ஏதாவது பேசுவோம்"என்று ஆரம்பித்து இருவரும் நீண்ட நேரம் பேசிக் கொண்டே இருந்தனர்.


மறுநாள் காலை.


பேப்பர்க்காரன் கேட்டில் செருகி விட்டுச் சென்றிருந்த நியூஸ் பேப்பரை எடுத்து, நடந்தவாறே புரட்டிய கல்பனா பேப்பரிலிருந்த ஒரு விளம்பரத்தைக் கூர்ந்து பார்த்தாள். 


   " கண்ணீர் அஞ்சலி" என்ற எழுத்திற்குக் கீழே, கருப்பு கட்டத்திற்கு நடுவே வயதான திவாகரின் போட்டோ போடப்பட்டிருந்தது. 


   சாகும் வரை திருமணமே செய்து கொள்ளாமல், கல்பனாவை மட்டுமே மனதில் நினைத்துக் கொண்டு வாழ்ந்து... உயிர் விட்ட திவாகர் போட்டோவில் மட்டும் சிரித்துக் கொண்டிருந்தான்.


(முற்றும்)


முகில் தினகரன் 

கோயம்புத்தூர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%