மாதங்களில் சிறந்தது மார்கழி! அம்மாதத்தில் வரும் நட்சத்திரங்களில் சிறந்தது திருவாதிரை! இரண்டு சிறப்புகள் ஒன்றாக சேரும் பொழுது அதன் மதிப்பும் சிறப்பும் பன்மடங்கு கூடிவிடுகிறதல்லவா! வாருங்கள் சிறப்புகளை ஒன்றொன்றாகப் பார்ப்போம்!
1.வேண்டுவன வேண்டியவாறு பெறும் வழி
இந்த திருவாதிரை திருநாள் பண்டிகையாகவும் விரதமாகவும் அனுஷ்டிக்கப்படுகிறது. மார்கழி மாதம் நிறைந்த பௌர்ணமி நாளில் திருவாதிரை நட்சத்திரத்தில் சிவ ஸ்தலங்களில் இந்த தரிசனம் கிடைக்கிறது. இந்த நன்னாளில் நாம் அனைவரும் சிவ ஸ்தலங்களில் உள்ள நடராஜ பெருமானை அதிகாலையில் சென்று தரிசித்தும், அவரது அபிஷேகம் கண்டு ஆராதித்தும், வீடுகளில் களி மற்றும் கூட்டு செய்து சிவனுக்கு நிவேதனம் செய்தும், நல் ஆரோக்கியம், நீண்ட ஆயுள், செய்யும் தொழிலில் அபிவிருத்தி, மனதிருப்தி, முதலான நீங்காத செல்வங்களை யெல்லாம் வேண்டிப் பெறலாம்.
2.ஆணவம் அடக்கிய படலம்
27 நட்சத்திரங்களில் திரு என்ற அடைமொழியுடன் வரும் நட்சத்திரங்கள் இரண்டே ஆகும். ஒன்று திருவோணம் மற்றொன்று திரு ஆதிரை. ஆவணி திருவோண நட்சத்திரத்தில் வாமன அவதாரம் எடுத்து பெருமாள் மகாபலியின் ஆணவத்தை அடக்கினார். மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தில் சிவபெருமான் பிச்சாடனார் ஆக வெளிப்பட்டு தாருகாவன முனிவர்களின் ஆணவத்தை அடக்கினார். அதாவது கர்வம் கொண்ட தாருகாவன முனிவர்கள் சிவபெருமானை அழிக்க வேண்டி யாகம் செய்து அதிலிருந்து வெளிப்பட்ட யானை, புலி முதலானவற்றை பிச்சாடனார் மீது ஏவினர். எதிர்கொண்ட சிவபெருமான் புலியை கிழித்து அறை ஆடையாகவும் யானையை கிழித்து மேலாடையாகவும் மற்றும் அதைத்தொடர்ந்து வந்த அனைத்தையும் தன் அணிகலன்கள் ஆகவும் ஏற்று அவர்கள் ஆணவத்தை அடக்கினார். பின் முனிவர்கள் வருந்தி சிவனிடம் மன்னிப்பு கேட்க நடராஜராக ஆனந்த தாண்டவம் ஆடி அவர்களுக்கு ஆருத்ரா தரிசனம் தந்தார். ஆக்கல் காத்தல் அருளுதல் மறைத்தல் அழித்தல் ஆகிய ஐந்து தொழில்கள் செய்யும் பஞ்சாட்சரமான சிவபெருமானின் சிறப்பை உணர்த்துவதே இந்த ஆருத்ரா தரிசனமாகும்.
3.திருவாதிரை நோன்பு
ஒரு முறை த்ரேதாயுகா என்ற பார்வதி தேவியின் பக்தை திருமணம் முடிந்த மூன்றாம் நாளில் கணவனை இழந்தார். அதனால் அவர் தேவியின் பாதங்களை பற்றி கதறி அழுதார். அந்த ஓசை தேவியின் காதுகளை எட்டியதும் தேவியும் சிவபெருமானும் எமனிடமிருந்து அவரது கணவர் உயிரை மீட்டு தந்து, அவர்களுக்கு பார்வதி பரமேஸ்வரராக இந்த மார்கழி திருவாதிரையில் தரிசனம் தந்து ஆசிர்வதித்தனர். அதனால்தான் பல இல்லங்களில் சுமங்கலிப் பெண்கள் இந்த திருநாளில் விரதம் இருந்து 21 வகையான காய்கறிகள் சமைத்து, அத்துடன் 21 எண்ணிக்கையில் அதிரசம் முதலான பலகாரங்களையும் தேவிக்கு நிவேதனம் செய்து, மஞ்சள் சரடு அணிந்து தங்களது கணவரின் நீண்ட ஆயுள், ஆரோக்கியம், தொழில் வளர்ச்சி, மன மகிழ்ச்சி, சுப நிகழ்ச்சி முதலானவற்றை வேண்டி பெறுகின்றனர்.
4. சிறப்பு ஆருத்ரா தரிசன ஸ்தலங்கள்
திருவாதிரை என்று தமிழில் சொல்லப்படும் இந்த நட்சத்திரம் வடமொழியில் ஆருத்ரா என்று சொல்லப்படுகிறது. மார்கழி ஆருத்ரா நாளில் சிவ ஸ்தலங்கள் அனைத்திலும் இந்த ஆருத்ரா தரிசனம் மிகச் சிறப்பாக கொண்டாடப் பட்டாலும் தில்லை என்கின்ற சிதம்பரத்திலும் திருவாருரிலும் உத்தரகோசமங்கையிலும் இத்திருநாள் மிகவும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது. முடிந்த வரையில் அன்று இத்திருத்தலங்களில் சென்று சிவபெருமானின் அருள் பெறுவது சாலச் சிறந்ததாகும்.
5.தில்லை என்கின்ற சிதம்பர தரிசனம்.
தில்லையில் ஆருத்ரா தரிசனத்தன்று தேவர்கள் அனைவரும் வந்து நடராஜ பெருமாளை வேண்டி அருள் பெறுவதாக ஐதீகம் உள்ளது.
பதஞ்சலி முனிவரும் வியாகரபாதரும் தவமாய் தவமிருந்து ஆடவல்லானின் ஆடலை காண விழைந்த போது சிவபெருமான் இந்த மார்கழி திருவாதிரை பௌர்ணமி நாளில் தான் ஆனந்த தாண்டவம் ஆடி அவர்களுக்கு தரிசனம் தந்தார்.
தில்லை அருகே சேந்தனார் என்ற சிவனடியார் தினமும் விறகு வெட்டி அவற்றை விற்று அதில் உணவுக்கான பொருட்களை வாங்கி அவர் துணைவியார் உதவியுடன் சமைத்து இருவரும் ஒரு சிவனடியாருக்கு உணவளித்து பின்னரே உண்பர். மார்கழி மாதத்தில் ஒரு நாள் மழை பெய்ததால் விறகு வெட்ட முடியாமல் வீட்டில் இருந்த அரிசி குருணையில் களி செய்து தோட்டத்தில் பறித்த காய்கறியில் ஒரு கூட்டும் செய்து சிவனடியாரின் வருகைக்காக காத்திருந்தனர்.
நீண்ட நேரம் மழையால் யாருமே வரவில்லை. அப்பொழுது மழையில் நனைந்து கொண்டு சிவபெருமானே அடியார் வடிவில் சேந்தனாரின் பெருமையை உலகிற்கு உணர்த்த அவர்கள் இல்லம் புகுந்தார். சிவனடியாரைக் கண்டு மனமகிழ்ந்த தம்பதியர் அவருக்கு களியும் கூட்டும் படைத்தனர். களியை விரும்பி உண்ட சிவனடியார் மிகவும் புகழ்ந்து கொஞ்சம் களியை வீட்டிற்கு எடுத்துச் செல்வதா கூறி தனது மேலாடையில் முடிந்து கொண்டு நாளை தேர் பவனி காண வாருங்கள் என்று விண்ணப்பித்து விட்டு மறைந்தார்.
அடுத்த நாள் திருவாதிரை காலை கோவிலைத் திறந்தவர்கள் இறைவனின் உதட்டிலும் இறைவனை சுற்றியும் களி சிந்தி இருப்பதைக் கண்டு திகைத்தனர். பின்னர் தேரில் நடராஜரின் ஊர்வலம் புறப்பட்டது. மழையால் ஏற்பட்ட சகதியில் தேர் சக்கரங்கள் சிக்குண்டு நின்றது. பக்தர்கள் செய்வதறியாது திகைத்தனர். அப்பொழுது ஓர் அசரீர் ஒலித்தது. சேந்தா பல்லாண்டு பாடு என்றது. வைணவத்தில் பெரியாழ்வார் பெருமாளுக்கு பல்லாண்டு பாடினார் சைவத்தில் அதுவரை பாடிய அறியாத சேந்தனார் இறை அருளாள்
மன்னுக தில்லை வளர்க hoநம் பக்தர்கள் பல்லாண்டு கூறுதுமே
என்று 13 பாடல்கள் மூலம் 7பல்லாண்டு பாடியபடி தேர் வடத்தை இழுத்தார். தேர் அழகாக நகர்ந்தது. சேந்தனார் புகழை உலகம் அறிந்தது. அது முதலே களி கூட்டு செய்து நடராஜ பெருமானுக்கு நிவேதனம் செய்யும் வழக்கம் ஏற்பட்டது.
களி என்றால் ஆனந்தம். அஞ்ஞானம் நீங்கி மெய்ஞானம் எனும் ஆனந்தத்தை சத் சித் ஆனந்தம் அருளால் அடைவதையே அது உணர்த்துகிறது. தில்லை ஆருத்ரா தரிசனத்தின் மகிமையை என்னவென்று புகழ்வது.
6. திருஆரூர்
திருவாரூரிலும் ஆருத்ரா தரிசனம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஒருமுறை திருஞானசம்பந்தர் திருவாரூர் செல்ல முடியாததால் அங்கே நடைபெற்ற ஆருத்ரா தரிசனம் குறித்து சொல்லுமாறு திருநாவுக்கரசரிடம் வேண்டினார். அவரும்
முத்துவிதான மணிப்பொற்
கவரி முறையாலே
என்று தொடங்கும் நாலாம் திருமுறை பாடல் மூலமாக முத்து விதானத்தில் மணிப்பொன் கவரி வீச நடராஜர் எழுந்து அருளிய காட்சியையும் பக்தர்களும் பெண்களும் வென் திருநீர் அணிந்த சிவனடியார்களும் சூழ தான் கண்டு களித்த அற்புதமான ஆருத்ரா தரிசன காட்சியையும் மேற்படி திருமுறைப் yபாடலால் விவரிக்க, சிறுவனான சம்பந்தர் கண்ணீர் மல்க மனக் கண்ணில் அந்த காட்சியை கண்டு ரசித்தாராம். அப்பப்பா நமக்கும் மெய் சிலிர்க்கிறத ல்லவா!
இங்கே நடராஜரின் வலது கால் எந்திரத்தால் மூடப்பட்டிருக்கும். வருடத்தில் இருமுறையே பக்தர்கள் அந்தப் பாத தரிசனம் செய்ய இயலும். அவை மார்கழி திருவாதிரை நாளிலும் பங்குனி உத்தர நாளிலும் நிகழும். எனவே ஆருத்ரா தரிசனத்தன்று திருவாரூரில் பக்தர்கள் கூட்டம் வலது பாத தரிசனத்திற்காக அலைமோதும்.
7. உத்தரகோசமங்கை
சிவபெருமான் அபிஷேகப் பிரியர் ஆனால் நடராஜ பெருமானுக்கு வருடத்தில் ஆறு முறையே அபிஷேகம் நடைபெறுகிறது. வருடத்தின் கடைசி அபிஷேகம் இந்த ஆருத்ரா திருநாளில் நடைபெறும். உத்தரகோசமங்கையில் இந்த அபிஷேகம் அரிய ஒரு காட்சியாகும். இங்கு மரகத நடராஜரின் சந்தனக் காப்பு நீக்கப்பட்டு பாலபிஷேகம் நடை பெறும். அச் சமயம் அந்த பால் பச்சை நிறமாக மாறி அவர் மேனியை தழுவி செல்லும். அது ஓர் அற்புத நிகழ்வாகும். இதனைக் காண பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து அபிஷேகம் கண்டு ஆருத்ரா தரிசனத்தில் மகிழ்ந்து போவார்கள்.
8.திருவெம்பாவைநோன்பு
இந்த மார்கழி மாதத்தில் கன்னிப் பெண்கள் திருவாதிரைக்கு முந்திய 9 நாட்களிலுமே விடியற்காலை எழுந்து குளித்து உமையொரு பாகனைத் துதித்து திருவெம்பாவை நோன்பிருந்து நல்ல சிவனடியாரே தனக்கு கணவராக அமைய வேண்டும் என்று வேண்டி திருவாதிரை திருநாளில் அந்த நோன்பினை முடிப்பார்கள். திருவெம்பாவை பாடல்களும் இந்த சிறப்பினையே உணர்த்துகிறது.
ஆருத்ரா தரிசனத்தின் சிறப்பினை இதுவரை கண்டோம் நாம் அனைவரும் அந்த நன்னாளில் களி, கூட்டு செய்து சிவகாமி சமேத நடராஜரை துதித்து சகல சௌபாக்கியங்களும் பெறுவோம்.

வனஜா நாகராஜன்.
யூ எஸ் ஏ