"மறைமுக குற்றவாளி"

"மறைமுக குற்றவாளி"


"டேய்... யார்ரா நீ?... எதுக்குடா என்னைக் கடத்திட்டு வந்து இந்தப் பாழடைஞ்ச பங்களாவுல கட்டிப் போட்டிருக்கே?" கத்தினான் இளங்கோ.


அவன் தாடையைத் தொட்டு நிமிர்த்திய குணா சொன்னான். "ஏன்னா... என் அம்மா... அப்பா ரெண்டு பேரையும் நீ கொன்னுட்டியல்ல... அதுக்குத்தான்!"


 "வாட்... நான் உன்னோட அப்பா அம்மா ரெண்டு பேரையும் கொன்னேனா...?... உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு?... எனக்கு உன்னையும் தெரியாது... உன்னோட அம்மா... அப்பா ரெண்டு பேரையும் தெரியாது... அப்புறம் எப்படி... நான்... அவங்களைக் கொன்னிருக்க முடியும்" இளங்கோ சற்றும் பயமில்லாமல் சொல்ல,


தன் கையிலிருந்த மொபைலை ஆன் செய்து அதிலிருந்த வீடியோவை இளங்கோவிடம் காட்டினான் குணா.


ஒரு மாதத்திற்கு முன்னால், அந்த குணாவின் தாயும் தந்தையும் ரோட்டைக் கிராஸ் செய்யும் போது பஸ் மோதி, ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த காட்சி அதில் தெளிவாய் படம் பிடிக்கப்பட்டு, ஆயிரக் கணக்கான பார்வையையும், பகிர்வையும் பெற்றிருந்தது.


"இதை எதுக்கு என்கிட்ட காட்டுறே?" 


"இது நீ எடுத்த வீடியோ"


சில நிமிடங்கள் யோசித்த இளங்கோ, "ஆமாம்... நான் எடுத்துப் போட்டதுதான்... அதுக்கென்ன இப்போ?"


அடுத்த நிமிடம் "பளார்"ரென்று அவன் கன்னத்தில் அறைந்த குணா, "ராஸ்கல் நீ மட்டும் அந்த நேரத்துல வீடியோ எடுக்காம 108 ஆம்புலன்ஸைக் கூப்பிட்டு அந்த ரெண்டு பேரையும் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வெச்சிருந்தேன்னா அவங்க ரெண்டு பேருமே உயிர் பிழைச்சிருப்பாங்க..." 


"அது வந்து...நான்...." இளங்கோ திக்கித் திணற,


"உனக்கு அந்த ரெண்டு உயிர்களையும் காப்பாத்தறதை விட அவங்க துடிக்கறதை வீடியோ எடுத்துப் போட்டு... எத்தனை லைக்ஸ் வருது... எத்தனை பேர் ஷேர் பண்றாங்க... அதுதான் முக்கியமாப் போச்சு... அப்படிப் பார்க்கும் போது அவங்க ரெண்டு பேரையும் கொன்னது நீதானே,?"


தலை குனிந்த இளங்கோ "விருட்"டெனத் தலையைத் தூக்கி, "சார்... உணர்ந்திட்டேன் சார்... உங்க வேதனையை... என்னோட தவறை,!... இனிமே சத்தியமா லைக்குகளுக்கும், ஷேர்களுக்கும் அடிமையாகி மனிதாபிமானத்தை விட மாட்டேன் சார்... இது என் அம்மா மீது சத்தியம் சார்"


அதைக் கேட்டு பலமாய்ச் சிரித்த குணா, "ஸாரிப்பா... என்னோட கோர்ட்டுல தப்பு செஞ்சவங்களுக்கு கண்டிப்பா தண்டனை உண்டு!.. அதனால எந்த விரல்களால் நீ மொபைலை யூஸ் பண்றியோ... அந்தப் பத்து விரல்களையும் உன் கையிலிருந்து பிரித்து விடப் போறேன்..."


"ஏய்... நோ..."இளங்கோ  கத்தக் கத்த அவன் வலது கையை 

"வெடுக்"பற்றி தன் கையிலிருந்த கத்தியால் ஐந்து விரல்களையும் வெட்டினான் குணா.


ரத்தம் சொட்டும் கையை இளங்கோ உதற, சட்டென்று அவன் இடது கையையும் பற்றி ஐந்து விரல்களையும் தரைக்கு தானம் தந்தான் குணா.


" இதையும் வீடியோ எடுத்துப் போடு" சொல்லியவாறே அங்கிருந்து அகன்றான் குணா.


(முற்றும்)



முகில் தினகரன், 

கோயமுத்தூர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%