12 இராசிக்காரர்களும் வழிபடுவதற்கு ஒரே இடத்தில் அமைந்த ஒரு பஞ்சபூதத்தலம் சிவபுரம்
ஶ்ரீபஞ்சலிங்கேஸ்வரர்
மக்கள் தங்கள் வாழ்வில் ஏற்படும் பிரச்னைகளுக்குப் பரிகாரம் தேடி கோயில் கோயிலாகத் தேடிச் செல்கிறார்கள்.
ஒவ்வொரு இராசிக்காரரும் தங்கள் தோஷங்களும் பிரச்னைகளும் நீங்க ஒவ்வொரு தலமாக நாடிச் செல்ல வேண்டியிருக்கிறது.
எல்லா இராசிக்காரர்களும், இராசி நட்சத்திரம் தெரியாதவர்களும்கூட ஒரே தலத்தில் வழிபட்டுத் தங்கள் துன்பங்களில் இருந்து விடுபடும் வகையில் ஓர் ஆலயம் உண்டு.
அதுவே தேடி வருவோருக்கு கோடி நன்மைகளை அள்ளி வழங்கும் இறைவனாக, பஞ்சபூதங்களின் நாயகனாக, ஐந்து சிவலிங்க மூர்த்தமாகக் கோயில் கொண்டுள்ள ஆதியில் சிவபுரம் என்ற பெயரில் அழைக்கப்பட்ட கொண்டாபுரம் ஶ்ரீ பஞ்சலிங்கேஸ்வரர் ஆலயம்.
அன்னை, இந்தத் தலத்தில் எழுந்தருளிய சில கணப்பொழுதிலேயே அந்தத் தலமே இறைவனின் பஞ்சபூத வடிவங்களும் ஒரே இடத்தில் லிங்கரூப மூர்த்தங்களாகக் கோயில் கொள்ள உகந்த தலம் என்பதை அறிந்து கொண்டார்.
அம்மையே அங்கு பஞ்ச லிங்கங்களையும் பிரதிஷ்டை செய்து வழிபட்டாள்.
சென்னையில் இருந்து 75 கி.மீ. தொலைவில் உள்ளது என்னும் காவேரிப்பாக்கம்.
இந்த ஊரின் ஒரு பகுதியாக விளங்கும் கொண்டாபுரம் ஆதியில் சிவபுரம் என்ற பெயரில் அழைக்கப்பட்டது.
இந்தக் கொண்டாபுரத்தில்தான் அன்னை பிரதிஷ்டை செய்த பஞ்சலிங்கேஸ்வரர் ஆலயம் உள்ளது.
சிவபுரம் யார், என்ன காரணத்துக்காக இந்தப் பெயரை இந்தத் தலத்துக்கு வழங்கினார்களோ தெரியவில்லை; ஆனால், மிகப் பொருத்தமான திருப்பெயர்.
மேலும், பன்னிரு இராசிகளையும் நால்வகை யாகப் பிரித்து, ஒவ்வொரு வகைக்கு ஒரு லிங்கம் என்றும், தன்னுடைய இராசி எதுவெனத் தெரியாதவர்கள் வணங்க ஐந்தாவதாக ஒரு லிங்கம் எனவும் நியதிகள் வகுத்து, முன்னோர் வழிபட்டு வரம்பெற்ற புண்ணிய க்ஷேத்திரம் இது!
இராசிகளுள் மேஷம், சிம்மம், தனுசு ஆகியன அக்னியின் ஆதிக்கத்துக்குட்பட்ட இராசிகள். எனவே இந்த இராசிக்காரர்கள் அக்னி ரூபமான இறைவனை வழிபடுதல் சிறப்பு.
பொதுவாகத் திருவண்ணாமலையையே அக்னித் தலமாக வழிபடுவோம். சிவபுரத்தில் கோயில் கொண்டிருக்கும் அக்னி லிங்கத்தையும் தரிசித்து வழிபடலாம்.
ரிஷபம், கன்னி, மகரம் ஆகிய இராசிக்காரர்கள் பஞ்சபூதங்களுள் நிலத்தின் ஆதிக்கத்துக்கு உட்பட்டவர்கள். காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரரே பஞ்சபூதத் தலங்களுள் நிலத்துக்கு உரிய தலம். பஞ்சலிங்கேஸ்வரர் ஆலயத்துள் கோயில் கொண்டுள்ள பிருதிவி லிங்கத்தை வழிபடுவதன் மூலம் ஏகாம்பரேஸ்வரரை வழிபட்ட பலன் கிட்டும்.
மிதுனம், துலாம், கும்பம் ஆகிய இராசிக்காரர்கள் வாயுவின் ஆதிக்கத்துக்கு உட்பட்டவர்கள். காளகஸ்தியில் உள்ள சிவனை வழிபடுவதால் கிடைக்கும் புண்ணிய பலனை இங்கே சந்நிதி கொண்டிருக்கும் வாயுலிங்கத்தை வழிபடுவதன் மூலம் பெறலாம்.
கடகம் , விருச்சிகம், மீனம் ஆகிய மூன்று இராசிக்காரர்களும் பஞ்சபூதங்களுள் நீரின் ஆதிக்கத்துக்கு உட்பட்டவர்கள். ஆனைக்காவில் இருக்கும் ஜலகண்டேஸ்வரர் ஆலயமே நீர்தலம். அதற்கு இணையான பலனை இங்கிருக்கும் அப்பு லிங்கத்தை வழிபடுவதன் மூலம் பெறலாம்.
பன்னிரண்டு இராசிகளுக்கு உகந்த நான்கு லிங்கங்கள் தவிர்த்து மூலவரான பஞ்சலிங்கேஸ்வரர் ஆகாய லிங்கமாகக் காட்சி கொடுக்கிறார்.
சிதம்பரமே ஆகாயத் தலம். இங்குள்ள மூலவரை வழிபடுவதன் மூலம் சிதம்பரத்தில் வழிபாடு செய்த புண்ணிய பலனையும் பெறலாம்.
மேலும் தங்களுடைய இராசி, நட்சத்திரம் தெரியாதவர்களும் ஆகாய லிங்கமாகக் காட்சி கொடுக்கும் இந்த மூலவரை வழிபடுவதன் மூலம் அவரவரது ஆதிக்கத்துக்குட்பட்ட பஞ்சபூதங்களை வழிபட்ட பலனை பெறலாம் என்பது ஐதிகம்.
ஒருமுறை, அறங்கள் குறைந்து அல்லல்களால் நிறைந்து தவித்தது பூவுலகம். ஜகன்மாதா கலங்கினாள். உலக உயிர்களின் துன்பம் தீர்க்க பூலோகம் செல்வது என்று முடிவெடுத்தாள்.
அருளாடலைத் துவங்கினாள். ஒருநாள், விளையாட்டாக தன் கரங்களால் தன் நாயகனின் கண்களைப் பொத்தினாள். அதனால் அண்டசராசரங்களிலும் இருள் சூழ்ந்தது. அந்த இருளின் கருமை அன்னையின் மேனியிலும் படர்ந்தது.
தன் கரிய நிறம் மாற, கயிலைநாதனிடமே வழிகேட்டாள். சிவம் சிரித்தது.
அம்பிகையின் எண்ணம் எதுவோ அதுவாகத் தானே சிவ சிந்தையும் இருக்கும். ”பூலோகம் சென்று தவம் இயற்று. உன் மேனியின் கருமை நீங்கும்; பூமியின் கவலையும் தீரும்” என்று உலகம் உய்ய, உமையாளுக்கு வழிசொன்னது சிவம்.
தேவியும் பூலோகத்தின் பத்ரிகாச்ரமத்துக்குக் குழந்தையாய் வந்தாள்; காத்யாயன முனிவரிடம் வளர்ந்தாள். குறிப்பிட்ட பருவம் வந்ததும், அவளிடம் சில பொருட்களைத் தந்த முனிவர், ‘காசிக்குச் சென்று சில காலம் அறம் நிகழ்த்தும்படியும், ‘பின்னர் தெற்கு திசை வரும்போது, ஓரிடத்தில் தான் கொடுத்த பொருட்கள் மாற்றம் அடையும்; அங்கே சிவனருள் கைகூடும்’ என்றும் கூறி, வழியனுப்பிவைத்தார்.
எம் அசோக்ராஜா __
அரவக்குறிச்சிப்பட்டி __
திருச்சி _620015__