சூரத்: குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்தவர் 18 வயதான பிரின்ஸ் படேல். சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவுகளை பதிவிட்டு வரும் பிரின்ஸ், பிகேஆர் பிளாகர் என்ற பெயரில் வீடியோக்களைப் பதிவிட்டு வருகிறார். வேகமாக பைக் ஓட்டுவதில் வல்லவரான பிரின்ஸ் படேல், தனது கேடிஎம் டியூக் மோட்டார் சைக்கிளை அதிவேகத்தில் ஓட்டி அதை வீடியோவாகப் பதிவிட்டு வந்தார்.
இந்நிலையில் அண்மையில் சூரத்தில் உள்ள கிரேட் லைனர் மேம்பாலத்தில், பிரின்ஸ் படேல் 140 கிலோமீட்டர் வேகத்தில் பைக்கை ஓட்டியுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த இவரது வாகனம் தரையில் விழுந்து நொறுங்கியது. இதில் பிரின்ஸ் படேல் தலை தனியாக துண்டிக்கப்பட்டு உடல் தனியாக விழுந்தது. பைக் வேகமாக வந்ததால் தரையில் விழுந்தபோது பிரின்ஸ் படேல் பலமுறை உருண்டார். அப்போதுதான் இவரது தலை துண்டிக்கப்பட்டு உடல் தனியாக விழுந்து சிதறியது. பைக் ஓட்டியபோது, பிரின்ஸ் படேல் ஹெல்மெட் அணியவில்லை என்று தெரியவந்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதத்தில்தான் இந்த புதிய பைக்கை, பிரின்ஸ் படேல் வாங்கியுள்ளதும் தெரியவந்துள்ளது. பிரின்ஸ் படேலின் தாய், குடிசைப்பகுதியில் வசித்து வருகிறார். தினந்தோறும் பால் விற்று அதில் வரும் பணத்தில் வாழ்க்கையை நடத்தி வருகிறார். இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அயோத்தியில் 55 ஏக்கரில் கோயில் அருங்காட்சியகம்: சர்வதேச தரத்தில் டாடா சன்ஸ் நிறுவனம் அமைக்கிறது
புதுடெல்லி: ராமர் கோயில் அமைந்துள்ள அயோத்தியை சர்வதேச தரத்தில் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நகரில் கோயில் அருங்காட்சியகம் அமைக்க கடந்த வருடம் செப்டம்பர் 3-ல் மத்திய அரசு, உ.பி. அரசு மற்றும் டாடா சன்ஸ் நிறுவனம் இடையே முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்காக அயோத்தியின் மஞ்சா ஜம்தாரா கிராமத்தில் 25 ஏக்கர் நசுல் நிலம் 90 ஆண்டுகள் குத்தகைக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில் அருங்காட்சியகத்தை சர்வதேச தரத்தில் பிரம்மாண்டமாக கட்ட டாடா சன்ஸ் கூடுதல் நிலம் கோரியது. இதை ஏற்ற உ.பி. அரசு கூடுதலாக 27.102 ஏக்கர் சேர்த்து, மொத்தம் 52.102 ஏக்கர் நிலத்தை ஒதுக்க முடிவு செய்துள்ளது. இதற்கான ஒப்புதலை முதல்வர் ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவை நேற்று அளித்தது.
அயோத்தியை சர்வதேச கலாச்சார மற்றும் ஆன்மிக தலமாக மேம்படுத்தும் ஒரு பெரிய திட்டத்துக்கு முதல்வர் யோகி அரசு இதன்மூலம் அடித்தளம் அமைத்துள்ளது. டாடா சன்ஸ் தனது சிஎஸ்ஆர் நிதியைப் பயன்படுத்தி அதிநவீன முறையில் இந்த கோயில் அருங்காட்சியகத்தை உருவாக்கி, இயக்கும் பொறுப்பை ஏற்றுள்ளது.
இதன் மூலம் அயோத்திக்கு ஒரு புதிய கலாச்சார அடையாளம் கிடைப்பதுடன், நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளும் உருவாக உள்ளது. இந்த திட்டம் அயோத்தியின் சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்துவதிலும் முக்கியப் பங்கு வகிக்கும்.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டிடம் உ.பி. சுற்றுலாத்துறை முதன்மைச் செயலாளர் அம்ரித் அபிஜத் கூறுகையில், ‘‘அயோத்தி ராம ஜென்மபூமி கோயில் பிராண பிரதிஷ்டை மற்றும் கொடியேற்ற விழாவை தொடர்ந்து பக்தர்களின் வருகை பன்மடங்கு அதிகரித்துள்ளது. தற்போது தினமும் சுமார் 1.5 லட்சம் முதல் 2 லட்சம் வரையிலான மக்கள் அயோத்தி வருகின்றனர். அயோத்தியில் உள்ள கலாச்சார இடங்களை விரிவுபடுத்துவதில் இந்த அருங்காட்சியகம் மிக முக்கியமானதாக இருக்கும்.
அருங்காட்சியகத்தை திராவிட பாணி கட்டிடக்கலையில் சர்வதேச நிபுணத்துவம் மற்றும் தர உத்தரவாதம் கொண்ட ஒரு குழுவுடன் இணைந்து டாடா சன்ஸ் அமைக்க உள்ளது” என்றார்.