2030-ம் ஆண்டுக்குள் 500 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு: மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி

2030-ம் ஆண்டுக்குள் 500 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு: மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி


சென்னை,


2030-ம் ஆண்டுக்குள் நாட்டில் 500 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை உற்பத்தி செய்யும் இலக்கை நோக்கி இந்தியா முன்னேறி வருவதாகவும், இதில் 100 ஜிகாவாட் மின்சாரம் காற்றாலை திட்டங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் என்றும் மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை மந்திரி பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.


சென்னையில் இன்று (30 அக்டோபர் 2025) நடைபெற்ற 7-வது விண்டர்ஜி இந்தியா-2025 மாநாட்டில் உரையாற்றிய அவர், தூய்மையான எரிசக்தி தொழில்நுட்பங்களில் தற்சார்பு இந்தியா என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, அசல் உபகரண உற்பத்தியாளர்கள் மற்றும் உதிரிபாக உற்பத்தியாளர்கள் உள்ளிட்ட தொழில்துறையின் பங்குதாரர்கள் காற்றாலை திட்டங்களில் உள்ளூர் உள்ளடக்கத்தை தற்போதைய 64 சதவீதத்திலிருந்து 85 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். வளர்ந்து வரும் உலகளாவிய மாற்றங்கள் மற்றும் அதிகரித்து வரும் புவிசார் அரசியல் சவால்களுக்கிடையே, இந்தியாவின் தூய்மையான எரிசக்தி விநியோகச் சங்கிலியை வலுப்படுத்த உள்நாட்டு மதிப்புக் கூட்டலை அதிகரிப்பது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.


ஒவ்வொரு துறையிலும் விரைவான முன்னேற்றத்திற்கு இந்தியா ஒரு பிரகாசமான எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது என்று கூறிய பிரகலாத் ஜோஷி, இந்தியா உலகின் நான்காவது பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனைக் கொண்டுள்ளது என்றும், இந்தியாவின் காற்றாலை திறன் தரவரிசையும் உலகில் நான்காவது இடத்தில் உள்ளது என்றும் கூறினார். பிரதமரின் தொலைநோக்குத் தலைமையின் கீழ், பொருளாதாரம், தொழில்நுட்பம் என அனைத்துத் துறைகளிலும் உலகத் தலைமையிடமாக இருக்க வேண்டும் என்பதே நாட்டின் லட்சியம் என்று அவர் கூறினார்.


முதல் காற்றாலைப் பண்ணைகள் முதல் இன்றைய அதிநவீன விசையாழிகள் வரை, தமிழ்நாடு இந்தியாவின் தூய எரிசக்தி பயணத்தை வழிநடத்தி வருகிறது என்று பாராட்டிய மந்திரி, அது மேலும் பிற மாநிலங்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கிறது என்றார். தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் ஆகியவை இந்தியாவின் மொத்த காற்றாலைத் திறனில் கிட்டத்தட்ட பாதியளவு பங்களிக்கின்றன என்றும், இது 54 ஜிகாவாட் என்றும் அவர் குறுப்பிட்டார்.


கடற்கரைக் காற்றாலைத் திட்டங்களுக்கான புதிய பகுதிகளைத் திறக்க ஒரு சாத்தியமான நிதித் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது என்றும், இந்தத் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டின் ராமநாதபுரம் கடற்கரையில் 500 மெகாவாட் திட்டம் நிறுவப்படும் என்றும் மத்திய மந்திரி கூறினார். இந்தத் திட்டம் குறித்த பூர்வாங்க ஆய்வு நிறைவடைந்துள்ளது என்றும், அந்தப் பகுதியில் காற்றாலை மின்சாரம் மிக அதிகமாக உற்பத்தி செய்யும் திறனை அந்த ஆய்வு காட்டுவதாகவும் தெரிவித்த மந்திரி, இந்தத் திட்டத்திற்கான ஒப்பந்தப்புள்ளி பிப்ரவரி 2026-க்குள் வெளியிடப்படும் என்றும் கூறினார்.


பணிகள் முடிக்கப்பட்ட திட்டங்களைப் பட்டியலிட்ட மத்திய மந்திரி, ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 3 ஜிகாவாட் காற்றாலை திறன் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், மார்ச் 2026-க்குள் மேலும் 3 ஜிகாவாட் காற்றாலை திறன் சேர்க்கப்படும் என்றும் கூறினார், இது கடந்த ஆண்டின் 4 ஜிகாவாட் காற்றாலை மின்சாரத்தை விட மிக அதிகமான வருடாந்திர கூடுதலாகும் என்றும் அவர் கூறினார்.


கடந்த பத்து ஆண்டுகளில் தொடர்ச்சியான முயற்சிகள் மூலம், நாட்டின் மொத்த மின்சார நிறுவுதிறனில் 50 சதவீதம் புதைபடிவ எரிபொருள் இல்லாத மூல வளங்களிலிருந்து வருவதை இந்தியா உறுதி செய்துள்ளது என்றார் அவர். நாட்டின் மொத்த நிறுவப்பட்ட திறன் 500 ஜிகாவாட்டாக நெருங்கி வருவதாகவும், அதில் புதைபடிவமற்ற ஆதாரங்கள் 257 ஜிகாவாட்டாக பங்களிப்பதாகவும் அவர் கூறினார். இந்த விரைவான முன்னேற்றம் காரணமாக பாரம்பரிய அனல் மின்சாரத்தின் பங்கு கணிசமாகக் குறைந்துள்ளது.


தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், ஜெர்மனியின் மத்திய பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு துணை அமைச்சர் ஜோஹன் சாத்தாப் ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கேற்றவர்களில் முக்கியமானவர்கள் ஆவர்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%