தீபாவளி பண்டிகை: தி.நகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள்; கூடுதல் கமிஷனர் கண்ணன் ஆய்வு
சென்னை, அக். 13–
இம்மாதம் 20ந் தேதி தீபாவளி பண்டிகை. அதை முன்னிட்டு தி.நகரில் கூட்டநெரிலை சமாளிக்க செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர் கண்ணன் ஆய்வு செய்தார்.
வருகிற 20ந் தேதி அன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்கு அதிகளவு கூடுமிடங்களான தி.நகர், பாண்டி பஜார், மயிலாப்பூர், பூக்கடை, புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை ஆகிய இடங்களில் சென்னை பெருநகர காவல்துறை சார்பில், பல்வேறு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் உத்தரவின்பேரில், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் (தெற்கு) என்.கண்ணன், தி.நகர் ரங்கநாதன் தெருவில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் கண்காணிப்பு மையம், ரங்கநாதன் தெரு மற்றும் உஸ்மான் ரோடு சந்திப்பு பாலத்தின் கீழ் புதிதாக அமைக்கப்பட்ட புதிய காவல் உதவி மையத்தை திறந்து வைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:
பொதுமக்கள் புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்கு தி.நகர் மற்றும் பாண்டி பஜார் பகுதிக்கு அதிகளவு வருவதால், அங்கு 8 தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள், 4 காவல் உதவி மையங்கள், 2 தற்காலிக காவல் உதவி கட்டுப்பாட்டறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதர இடங்களில் 16 ஒலிப்பெருக்கிகள், 90 கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள், 3 டிரோன் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. நிகழ்வுகளை கண்காணித்து, குற்றங்கள் நிகழாமல் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டும், திருட்டு, குற்றங்கள் தொடர்பான காவல்துறை எச்சரிக்கைகள் ஒலிபரப்பப்பட்டும், கூட்டத்தில் குழந்தைகள் காணாமல் போனால் உடனடியாக மீட்பதற்கு குழந்தைகளின் கையில் பெற்றோர் விவரங்கள் எழுதுவதற்கான Wrist Band வழங்கப்பட்டும் தீவிர பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
200 காவல் அதிகாரிகள்
தி.நகர் பகுதியில் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக 200 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள், 100 ஆயுதப்படை ஆளிநர்கள், 100 ஊர்க்காவல் படையினர் கடந்த 01.10.2025 ம் தேதி முதல் சுழற்சி முறையில் நியமிக்கப்பட்டு பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்கள் அவசர உதவிக்கு தொடர்பு கொள்ள 2 (89399 77649, 91504 72278) கைப்பேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளது. அவசர தேவைக்கு 2 ஆம்புலன்ஸ்கள், 2 தீயணைப்பு வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளது. சென்னை பெருநகர காவல்துறையின் டிரோன் யூனிட் குழுவினர், டிரோன் கேமராக்கள் மூலம் கூட்டங்களை கண்காணித்து, குற்ற சம்பவங்கள் நிகழாமல் கண்காணித்து வருகின்றனர். சாதாரண உடையில் ஆண் மற்றும் பெண் காவலர்கள் பல குழுக்களாக ரோந்து சுற்றி வரப்பட்டு, கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் காவல் கூடுதல் ஆணையாளர் மாம்பலம் காவல் நிலைய வளாகத்தில் புதுப்பிக்கப்பட்ட உள்விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய காவல் சிறார் மன்ற கட்டிடம் மற்றும் நவீன உடற்பயிற்சி உபகரணங்களுடன் கூடிய உடற்பயிற்சி கூடங்களை திறந்து வைத்து பார்வையிட்டார். நிகழ்ச்சியில், தெற்கு மண்டல இணை ஆணையாளர் பி.சி.கல்யாண், தி.நகர் மாவட்ட காவல் துணை ஆணையாளர் எஸ்.குத்தாலிங்கம், தி.நகர் காவல் சரக உதவி ஆணையர் சுரேஷ் குமார், மாம்பலம் காவல்நிலைய ஆய்வாளர் விமல் ஆகியோர் உடனிருந்தனர்.