அன்புமணி ராமதாசின் தலைவர் பதவி ஓராண்டு நீட்டிப்பு: பா.ம.க. பொதுக்குழுவில் முடிவு
சென்னை, ஆக. 9–
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்த பொதுக்குழுக் கூட்டத்தில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸின் பதவிகாலத்தை ஓராண்டு நீட்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பாமகவில் அதன் நிறுவனர் ராமதாசுக்கும், அவரின் மகனும் மற்றும் கட்சியின் தலைவருமான அன்புமணி இடையேயான மோதல் கோர்ட் வரை சென்றுவிட்டது. ஆக.19ம் தேதி பாமக பொதுக்குழு நடைபெறும் என்று ஒரு பக்கம் ராமதாஸ் அறிவிக்க, மறுபுறம் தாமும் இன்று (9–ந் தேதி) பொதுக்குழுக் கூட்டத்தை கூட்டுவதாக அன்புமணி அறிவித்தார்.
இதற்கு எதிராக ராமதாஸ் தரப்பு தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. இருவரிடமும் நீதிபதி தனித்தனியாக விசாரணை நடத்திய நிலையில் அன்புமணியின் பொதுக்குழுவுக்கு அனுமதி வழங்கிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ராமதாஸ் தரப்பு மனுவை தள்ளுபடி செய்தார்.
ராமதாசுக்கு இருக்கை
கோர்ட் உத்தரவை அடுத்து, திட்டமிட்டபடி இன்று தாம் அறிவித்த பொதுக்குழு கூட்டத்தை அன்புமணி தொடங்கி உள்ளார். கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என அழைப்பிதழ் அனுப்பப்பட்ட அனைவரும் கலந்து கொண்டுள்ளனர். பொதுக்குழுக் கூட்ட பேனரில், ராமதாஸ் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
பொதுக்குழு கூட்ட மேடையில் ராமதாசுக்காக நடு இருக்கை காலியாக விடப்பட்டிருந்தது.
கூட்டத்தை தொடங்கி வைத்து அன்புமணி பேசுகையில், பொதுக்குழு உறுப்பினர் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன். பொதுக்குழுவில் முக்கிய முடிவுகளை எடுக்க இருக்கிறோம். மருத்துவர் ராமதாஸ் வழியில் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து பாடுபடும். தமிழகத்தில் உரிமைகளை மீட்டெடுப்போம் அனைவரும் தயார் நிலையில் இருக்க வேண்டும். இறுதியாக நான் பேசுகிறேன். தற்பொழுது பொதுக்குழு தொடங்குகிறது” என்றார்.
தலைவர் பதவிக்
காலம் நீட்டிப்பு
இந்த கூட்டத்தில் பா.ம.க. தலைவராக அன்புமணி ராமதாஸ் மற்றும் பொதுச் செயலாளராக வடிவேல் ராவணன், பொருளாளராக திலகபாமா ஆகியோரின் பதவிக்காலம் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் உட்கட்சித் தேர்தல் நடத்த ஓராண்டு காலம் அவகாசம் வழங்குவது மற்றும் பெண்கள் பாதுகாப்பு, சட்டம் மற்றும் ஒழுங்கை உறுதி செய்யத் தவறிய திராவிட மாடல் அரசுக்கு கண்டனம், மக்களை ஏமாற்ற மோசடித் திட்டங்களை செயல்படுத்தும் தி.மு.க. அரசுக்கு கண்டனம், தமிழ்நாட்டிற்கு வந்த தொழில் முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும், 4 முறை உயர்த்தப்பட்ட மின்சாரக் கட்டணத்தை குறைக்க வேண்டும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும், சிங்கள கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும், வன்னியர்களுக்கு விரைவில் இடஒதுக்கீடு வழங்காவிட்டால், சிறை நிரப்பும் போராட்டம், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தவேண்டும்; விடுதலை நாள் அறிவிப்பாக தமிழக அரசு வெளியிட வேண்டும், தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தை முழுமையாக தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும், தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதே பாட்டாளி மக்கள் கட்சியின் இலக்கு உள்ளிட்ட 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.