எம்.ஜி.ஆர். குறித்து பேசுவதற்கு திருமாவளவனுக்கு தகுதி இல்லை: எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு

எம்.ஜி.ஆர். குறித்து பேசுவதற்கு திருமாவளவனுக்கு தகுதி இல்லை: எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு

சேலம், ஆக.10-–


எம்.ஜி.ஆர். பற்றி பேசுவதற்கு திருமாவளவனுக்கு தகுதி இல்லை என்று அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்து உள்ளார்.


சேலம் மாவட்டம் ஓமலூரில் பல்வேறு மாற்றுக்கட்சிகளை சேர்ந்தவர்கள் அண்ணா தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நேற்று அங்குள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடந்தது. அப்போது பல்வேறு கட்சிகளில் இருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விலகி கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அண்ணா தி.மு.க. வில் இணைந்தனர். பின்னர் அவர் கட்சியில் சேர்ந்தவர்களுக்கு கட்சி துண்டு அணிவித்து வரவேற்றார்.


அண்ணா தி.மு.க.வில் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-


2011 முதல் 2021-ம் ஆண்டு வரை சேலம் மாவட்டம் எந்த அளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். ஓடையின் குறுக்கே தடுப்பணைகள் கட்டி நிலத்தடி நீரை உயர செய்தோம். குடிமராமத்து திட்டத்தை கொண்டு வந்து ஆங்காங்கே இருக்கிற ஏரிகள் தூர்வாரப்பட்டு மழைக்காலங்களில் பெய்கின்ற நீரை சேமித்து கோடைக்காலத்தில் பயன்படுத்த முடியும் என்கிற திட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. அள்ளப்படும் வண்டல் மண் நம்முடைய விளைநிலங்களில் இயற்கை உரங்களாக பயன்படுத்தப்பட்டது.


நலிவடைந்து வரும்


விசைத்தறி தொழில்


அதேபோல் விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை அளித்தோம். நம்முடைய விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிர்கடனை 2 முறை தள்ளுபடி செய்தோம். இப்படி விவசாயிகளுக்காக நிறைய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது.


நம்முடைய மாவட்டம் விசைத்தறி நிறைந்த பகுதியாகும். ஆனால் இந்த ஆட்சியின் நிர்வாக திறமையற்ற காரணத்தினால் தற்போது விவசாயம் மற்றும் விசைத்தறி தொழில் நலிவடைந்து வருகிறது. அண்ணா தி.மு.க. ஆட்சி வருகின்றபோது இந்த விவசாயிகளும், விசைத்தறி தொழிலாளர்களுக்கும் உதவி செய்யப்படும். அதேபோல், மரம் ஏறும் தொழிலாளர்கள் பல்வேறு இடங்களில் இருக்கிறார்கள். அவர்களுடைய கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும். அடுத்த ஆண்டு அண்ணா தி.மு.க. ஆட்சி மலரும்.


இவ்வாறு அவர் பேசினார்.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் வெள்ளையன் என்கிற தர்மன், எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட இணை செயலாளர் ராமசுந்தரம், மாவட்ட துணை செயலாளர்கள் முருகேசன், கணேசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–-


தமிழக மக்கள் எம்.ஜி.ஆரை தெய்வமாக பார்க்கின்றனர். அவரை பற்றி விமர்சித்தால் அரசியலில் காணாமல் போய்விடுவார்கள். எம்.ஜி.ஆர். குறித்து பேசுவதற்கு திருமாவளவனுக்கு தகுதி இல்லை.


ஒரு சாதியை வைத்து மட்டும் அரசியல் செய்வது என்பது இயலாத காரியம். அவ்வாறு செய்யவும் முடியாது. எம்.ஜி.ஆர். காலத்திலும், ஜெயலலிதா காலத்திலும் ஏன் அவர்கள் மறைவிற்கு பிறகும் அண்ணா தி.மு.க. சாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சி.


அண்ணா தி.மு.க.வில் பல்வேறு சாதி, மதத்தினர் இருக்கிறார்கள். நாங்கள் ஒற்றுமையாக செயல்படுகிறோம். ஆனால் சிலருக்கு அது பொறுக்கவில்லை.


தி.மு.க. கூட்டணியில் கருத்து வேறுபாடு உள்ளது. இதனால் இன்னும் 8 மாதத்தில் அவர்களது கூட்டணி நிலைக்குமா? நிலைக்காதா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். அண்ணா தி.மு.க. தலைமையில் சிறப்பான கூட்டணி அமையும்.


தேர்தலுக்கு இன்னும் 8 மாதம் இருப்பதால் அதுபற்றி அனைவருக்கும் தெரிவிப்போம். பாட்டாளி மக்கள் கட்சியின் உள்விவகாரத்தில் நாங்கள் தலையிடுவது இல்லை. அது அவர்களுடைய சொந்த கட்சி. அதில் கருத்து சொல்வது சரியாக இருக்காது. நான் எப்போதும் அப்படிப்பட்ட கருத்தை சொல்ல மாட்டேன்.


இவ்வாறு அவர் கூறினார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%