வத்தலகுண்டு நகரில் மதுரை ரோட்டில் ஆக்கிரமிப்பை அகற்றிய நெடுஞ்சாலை துறை

வத்தலகுண்டு நகரில் மதுரை ரோட்டில் ஆக்கிரமிப்பை அகற்றிய நெடுஞ்சாலை துறை

வத்தலகுண்டு, ஆக. 21–


வத்தலகுண்டு நகரின் மையப் பகுதியான காளியம்மன் கோவில் முதல் உசிலம்பட்டி பிரிவு வரை நீண்ட நாட்களாக போக்குவரத்து நெரிசலுக்குக் காரணமாக இருந்த 200க்கும் மேற்பட்ட சாலை ஆக்கிரமிப்புகள், மதுரை உயர்நீதிமன்ற கிளையின் உத்தரவின் பேரில் நெடுஞ்சாலைத்துறையினரால் நேற்று அதிரடியாக அகற்றப்பட்டன.


வத்தலகுண்டு நகரில் தொடர்ந்து அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் குறித்து பொதுமக்கள் நீண்ட நாட்களாக புகார் தெரிவித்து வந்தனர். குறிப்பாக, காளியம்மன் கோவில் முதல் உசிலம்பட்டி பிரிவு வரையுள்ள சாலை, கடைகளின் ஆக்கிரமிப்புகளால் சுருங்கி, வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு பொதுநல வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றி, போக்குவரத்தை சீரமைக்க நெடுஞ்சாலை த்துறைக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவின் அடிப்படை யிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, மதுரை நெடுஞ்சாலைத்துறை நிர்வாகப் பொறியாளர் கே.பி. சங்கர், திண்டுக்கல் செயற்பொறியாளர் ஆனந்த், மற்றும் வத்தலகுண்டு உதவி செயற்பொறியாளர் தாமரை மாறன் ஆகியோர் தலைமையில் இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடங்கியது. 30க்கும் மேற்பட்ட சாலைப் பணியாளர்கள், நெடுஞ்சாலை த்துறையினர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் இந்த பணியில் ஈடுபட்டனர்.


200 கடைகள் அகற்றம்


ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி முன்னதாகவே கடைகாரர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தும், அவர்கள் அதை கண்டுகொள்ளாததால், ஜேசிபி போன்ற கனரக வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றப்பட்டன. கடைகளின் முன்புறம் அமைக்கப்பட்டிருந்த தற்காலிகக் கூரைகள், விளம்பரப் பலகைகள், மற்றும் சாலையை ஆக்கிரமித்திருந்த படிக்கட்டுகள், இரும்பு தடுப்புகள் போன்றவையும் அகற்றப்பட்டன.


ஆக்கிரமிப்பு அகற்றும்போது எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க, வத்தலகுண்டு காவல் நிலைய ஆய்வாளர் கௌதம் தலைமையில், சார்பு ஆய்வாளர் ஷேக் அப்துல்லா உள்ளிட்ட காவல்துறையினர் மற்றும் போக்குவரத்து காவலர்கள் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இதனால், எந்தவொரு பிரச்னையும் இல்லாமல் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி வெற்றிகரமாக முடிவடைந்தது.


காளியம்மன் கோவில் முதல் உசிலம்பட்டி பிரிவு வரையுள்ள சுமார் 200க்கும் மேற்பட்ட கடைகளின் முன்பிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதால், சாலை விசாலமாக மாறியுள்ளது. இதனால், போக்குவரத்து நெரிசல் குறைந்து, வாகனங்கள் சிரமமின்றிச் செல்கின்றன. நெடுஞ்சாலை த்துறையின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்பட்டதால், வத்தலகுண்டு நகரின் போக்குவரத்து இனி சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%