tamilnadu epaper

அகத்தின் நிறம்

அகத்தின் நிறம்

 

என்னங்க , நம்ம ராஜாவுக்கு என்ன குறை வச்சோம்னு இப்ப தனியா போகனும்னு நிக்கிறான் . நாம இரண்டாவது குழந்தை கூட பெத்துக்காம இவன் ஒரு குழந்தையே போதும்னு நம்ம ரெண்டு பேரும் வேலைக்கு போயி இவன் நெனச்சதெல்லாம் வாங்கி கொடுத்து வளர்த்தோம் . அவன் காதலிச்ச பொண்ணையே கல்யாணமும் பண்ணி வச்சோம். 

 

அவன் சந்தோசம்தான நம்ம சந்தோசம்னு வாழ்றோம். இவ்ளோ நாளா பார்த்து, பார்த்து எல்லா வேலையும் ஓய்வில்லாமல் செய்யறேன்.

 

ஏங்க, நான் உங்ககிட்ட தான பேசுறேன் எதையுமே காதில் வாங்காமல் உட்கார்ந்து இருக்கீங்க அவன் சொல்றதுக்கு எல்லாம் சரி, சரிங்கறீங்க .

 

ஏன் வீணா புலம்புற , அவன் ஒரு முடிவு எடுத்துட்டான். அந்த முடிவ நம்ம ஏன் தடுக்கணும் அவங்க வாழ்க்கை, அவன் போய் வாழட்டும் விடு .

 

ராஜா தன்முடிவில் உறுதியாக இருந்து தனி குடித்தனம் சென்று இன்றோடு ஆறு மாதம் ஆனது.

 

ராஜாவின் மனைவி என்னங்க உங்க அப்பாவோட ஃப்ரெண்டு உங்கள பாக்கணும்னு வந்திருக்காரு,

 

 வாங்க அங்கிள் எப்படி இருக்கீங்க,

 

நல்லா இருக்கேன் 

என் பொண்ணு வீடு உன் வீட்டில் இருந்து இரண்டு வீடு தள்ளி தான் பா இருக்கு, பொண்ண பார்க்க வந்தேன் அப்படியே உன்னையும் பார்த்துட்டு போலாம்னு வந்தேன் .

 

 ஏன்பா கேட்கிறேன்னு தப்பா நினைச்சுக்காத வயசான காலத்துல உங்க அப்பா, அம்மாவை இப்படி தனியா விட்டுட்டு வந்துட்டியே , 

அப்பா எதுவும் உங்க கிட்ட சொன்னாரா அங்கிள்.

 

உங்க அப்பாவை பார்த்து நாலு மாசத்துக்கு மேல ஆகுது , உங்க அப்பா எதுவும் சொல்லல ,என் மனசுக்கு தப்பா பட்டுச்சு அதான் கேட்கிறேன்.  

 

இல்ல நீங்க என்னை தப்பா புரிஞ்சுகிட்டு இருக்கீங்க அவங்க ஓய்வு இல்லாம நிறைய எனக்காக வேலை பார்த்துட்டாங்க , வயதான காலத்திலையாவது கொஞ்சம் ஓய்வு எடுக்கட்டும். அவங்க வாழ்க்கையை அவங்க வாழட்டும்னு நினைச்சு தான் நான் தனியா வந்தேன் . நேரம் கிடைக்கிறப்ப நான் அவங்கள போய் பாத்துட்டு தான் இருக்கேன். இந்த ஆறு மாசத்துல அவங்க ரெண்டு தடவை கோயில் டூர் போயிட்டு வந்துட்டாங்க சந்தோசமா வாழ்றாங்க. அவங்களுக்கு எங்க உதவி தேவைப்படும்போது அவங்களோட போயிருந்துக்கலாம் .

 

ராஜாவின் வார்த்தையில் அர்த்தம் இருப்பதை உணர்ந்து, 

சில பிரிவுகளும் அர்த்தமுள்ளதாக தான் இருக்கிறது.

மனதுக்குத்தான் எத்தனை வலிமை மருந்தே இல்லாமல் காலப்போக்கில் சில வலிகள் காணாமல் போயிரும்.அவன் செயலின் நல்ல எண்ணம் புரிந்து விடைபெற்றேன். 

 

-சங்கரி முத்தரசு கோவை .