tamilnadu epaper

அன்பின் வழியது.....

அன்பின் வழியது.....

 

        என்ன இப்படி நடந்திடுச்சு? எதிர்பார்க்கவே இல்லை....

                 இப்படி நடக்கும்னு நெனைச்சு கூடப் பாக்கலே......

  வேதனைகளைச் சுமந்த பல குரல்கள் கேட்ட வண்ணம் இருந்தது.

        இதையெல்லாம் கேட்டவளாக சோகத்தைச் சுமந்து வண்டியின் சன்னலோரத்தில் தலை சாய்த்திருந்தாள் காவேரி.

   மாமாவின் இறப்புச் செய்தி கேட்டு நெருங்கிய சொந்தங்கள் சேர்ந்து வண்டி எடுத்து மதுரைக்குச் சென்று கொண்டிருக்கின்றனர்.

             இவளுக்கு நன்றாக நினைவு இருக்கிறது. இந்த மாமாவும் அத்தையும் ஒருமித்த தம்பதிகள் என்பதற்கு மிகச் சரியாகப் பொருந்துவர்கள்.

 ஒருவரை விட்டு ஒருவர் இருந்து இவள் பார்த்ததில்லை. எல்லாக் குடும்ப விழாக்களுக்கும் ஒன்றாகத் தான் வருவார்கள்.

                திருமண விழாவிற்குச் சென்ற போது நெஞ்சு வலி வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரே நாளில் இறந்தும் போனார்.

            வீடு நெருங்க நெருங்க உள்ளுக்குள் இவளுக்கு அழுகை வந்தது. இந்த இழப்பை அத்தை எப்படி தாங்கிக் கொள்வாள்?

 வாழ்ந்தால் இப்படித்தான் வாழ வேண்டும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்தவர்.

         குடும்பத்தில் பொருளாதாரத்திற்குக் குறைவில்லை என்பதால் நினைத்த மாத்திரத்தில் இருவரும் வெளியில் கிளம்பி விடுவர். வாழ்க்கையை மிகச் சுவாரசியமாக வாழ்ந்தவர்கள். 

             வசதி இருந்தும் வாழ்க்கையை அனுபவிக்காதவர்களுமுண்டு அனுபவிக்க நினைப்பவர்களுக்கு வசதி இல்லாத சூழ்நிலையும் உண்டு.ஆனால் இவர்கள் அப்படி இல்லை. கிடைத்த வாழ்வை பிடித்த மாதிரி வாழ்ந்தவர்கள். 

        இதோ..... வீடு வந்து விட்டது. அத்தை என்ன செய்வாளோ? எப்படி ஆறுதல் சொல்லப் போகிறோமோ என்று உள்ளே நுழைந்தவளுக்கு அதிர்ச்சி.

      துக்கத்திற்கு வந்திருப்பவர்களுக்கு தண்ணீர் கொடுத்து உபசரித்து உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தாள் அத்தை.

         பொங்கி வந்த அழுகையைக் கட்டுப்படுத்த முடியாமல் அத்தையின் கையைப் பிடித்து அழுதாள்.

         அத்தையோ இவள் கைகளை வருடி இவளுக்கு ஆறுதல் சொன்னாள்.

       வீட்டிலிருந்த மற்றொரு அறையில் உறவுகள் எல்லாம் பேசிக் கொண்டிருந்ததைக் கண்டு இவளும் உள்ளே சென்றாள்.

     உலை வாயை மூடினாலும் ஊர் வாயை மூட முடியாதே! அத்தையின் யதார்த்தமான இந்தப் போக்கைக் கண்டு வந்திருந்தவர்கள் பலரும் பலவிதமாகப் பேசினார்கள்.

       இவள் அத்தைக்கு ஆதரவாகப் பேச முடியாமலும் ஊர்ப் பேச்சைத் தட்ட முடியாமலும் அமைதியாக இருந்தாள்.

       ஏதோ ஒரு காரணத்திற்காக அறைக்குள் நுழைந்த அத்தை இவர்களின் பேச்சைக் கேட்டு நின்றாள்.

         நீங்க எல்லாரும் என்ன பேசிட்டு இருக்கீங்கன்னு எனக்குத் தெரியும். இவ எல்லாம் ஒரு பொம்பளையா? புருஷன் செத்துக் கிடக்கும்போது அழக்கூட இல்லாம இப்படி நிக்கிறாளே அதானே உங்க சந்தேகம்?

          என்னை விட்டு அவர் போயிட்டாருன்னு நான் அழ ஆரம்பிச்சா இந்த நொடியில் என் உயிர் போயிடும். நான் அவரோட வாழ்ந்த ஒவ்வொரு நிமிஷமும் உணர்வுப்பூர்வமா வாழ்ந்திருக்கேன். அன்புன்னா என்னன்னு அனுபவிச்சிருக்கேன். அவர் இறப்புக்கு அழுதாதான் அன்புன்னு நீங்க நினைச்சீங்கன்னா அது உங்க தப்பு.

       உங்களுக்கு வேணும்ன்னா அவர் இறந்து போயிருக்கலாம். என்னோட ஒவ்வொரு அணுவிலும் அவர் வாழ்ந்துட்டு இருக்கிறார். அவர் இறந்ததா நான் இப்பவும் நினைக்கல. என் உயிர் போற வரைக்கும் என்னோட தான் இருப்பாருன்னு நம்பறேன். அவரோட வாழ்ந்த நினைவுகளை என்னைக்குமே என் இதயம் சுமக்கும். அன்புங்கறது அருவியா கொட்ற கண்ணீர்ல இல்ல.அவருக்குப் பிடிச்ச மாதிரி வாழறதுல இருக்கு. முப்பது வருஷத்தில ஒவ்வொரு நொடியையும் மன நிறைவா வாழ்ந்து இருக்கேன். நான் இருக்கிற வரைக்கும் அந்த நினைவுகளோடு வாழ்ந்துருவேன் என்று சொல்லியவளைக் கை எடுத்து வணங்கத் தோன்றிற்று. அன்பின் இன்னொரு பரிமாணம் புரிந்தது.

***************************

தமிழ்நிலா