tamilnadu epaper

அப்பனுக்கு பாடம் சொன்ன...!

அப்பனுக்கு பாடம் சொன்ன...!

 

 

நண்பர்  ஒருவரின் தாயார் இறந்து விட்டார் துக்கத்திற்கு  சென்றிருந் தேன்.இறந்தவர்வாழ்ந்து சலித்த  வயதானவர்  என்பதால் வீட்டில்  அதிக துக்கம் இல்லாமல் வந்திருந்தவர்கள் சிறுசிறு குழுக்களாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். என்னைக் கண்டதும் நண்பன் எழுந்து வந்து கைகளைப் பிடித்துக் கொண்டான்.கோடை  வெயிலில் நான் வந்திருந்த படியால் நண்பனிடம்  குடிக்கத் தண்ணீர் கேட்டேன். நண்பன் எட்டு வயது மதிக்கத் தக்க தன் மகனைக் கூப்பிட்டு "மாமாவுக்கு குடிக்கத்  தண்ணீர் கொண்டு வா"  என்று  கூறினான்.

உள்ளே ஓடிச் சென்ற சிறுவன் கால் வாசி வரை  குடித்திருந்த பிராந்தி பாட்டிலை எடுத்துக் கொண்டு ஒடி வந்தான். நண்பன் பதறிப்  போய் "குடிக்க தண்ணி கொண்டு வாடான்னா,  படவா  ராஸ்கல்   எங்கே இருந்ததுடா இதை  கொண்டு வர்ர" என்று கேட்க  "நேத்து நீ தானே    தாகமா இருக்கு தண்ணி குடிக்கிறேன்னு எனக்கிட்டா சொன்ன" என்று சொல்ல "நான் தெரியாமத்தானே ஒளிச்சு வச்சிருந்தேன் எப்படிடா கண்டு பிடிச்சு எடுத்த " என்று கூறியவாறே பாட்டிலை மறைத்தபடியே  மகனையும்   இழுத்துக் கொண்டு உள்ளே ஓடினான்...! துக்கவீடு என்பதைக் கூட மறந்து நண்பர்கள் சிரித்து விட்டார்கள்.

   பிள்ளைகளுக்குதெரியாது, அவர்கள் பார்த்திருக்க மாட்டார்கள், அல்லது  அவர்கள் தூங்கி விட்டார்கள் என்று நினைத்துக் கொண்டு அந்தரங்கமான வேலைகளை செய்வதில் பெரியவர்கள் மிகக்  கவனமாக இருக்கவேண்டும்.இல்லையெனில் பிள்ளைகள் அப்பனுக்கு பாடம் சொன்ன சூப்பனாக மாறிவிடு வார்கள். ================

 குடந்தை பரிபூரணன்

===============