tamilnadu epaper

அப்பா பாவம்மா...!

அப்பா பாவம்மா...!

 

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் தன் மகள் ஷோபனாவின் வகுப்பு ஆசிரியை லதாவை மார்க்கெட்டில் சந்தித்தாள் குமுதா.

 

 அப்போது அந்த டீச்சர் சொன்ன விஷயம் குமுதாவை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியது. "என்ன டீச்சர் சொல்றீங்க?...நீங்க சொல்றது நிஜமா?"

 

 'ஆமாங்க... உங்க பொண்ணு டான்ஸ் போட்டியோட ரிகர்சலில் ரொம்ப நல்லாவே ஆடினாள்!... நான் மட்டுமில்லை... ஸ்கூல்ல இருக்கற டீச்சர்ஸ் எல்லோருமே அவள் தான் இந்த வருஷம் டான்ஸ் போட்டில ஃபர்ஸ்ட் பிரைஸ் வாங்குவாள்னு சொன்னாங்க"

 

  "இல்லையே டீச்சர்... அவ ஃபைனல் செலக்சன் போட்டியில் நல்லாவே ஆடலையாமே... அதன் காரணமாய் இந்த ஆண்டு விழா டான்ஸ் போட்டிக்கு அவ தேர்வு ஆகலையாமே... அவ சொன்னாளே?".

 

  'உண்மைதான்... ஆனா அவ அந்த ஃபைனல் செலக்சன் போட்டியில் மோசமா ஆடினது கூட வேணுமின்னே செஞ்சதோ?ன்னு நினைக்க வைக்குது' டீச்சர் சொல்ல,

 

 "ஏன் டீச்சர் அப்படிச் சொல்றீங்க?".

 

  "பின்னே?... ரிகர்சல்லுல... மத்த நார்மல் செலக்சன் போட்டிகள்ல எல்லாத்திலேயும் நல்லா ஆடியவள் அந்தக் கடைசி செலக்சன் போட்டியில் மட்டும் மோசமாக ஆடியது... கொஞ்சம் நெருடலாவே இருக்கு... நீங்க ஒண்ணு செய்யுங்க... உங்க பொண்ணு கிட்ட நாசூக்காக் கேட்டுப் பாருங்க" சொல்லி விட்டு டீச்சர் சென்றதும், நேரா வீட்டிற்கு வந்த குமுதா மகள் சோபனாவை அருகில் அழைத்து நேரடியாகவே கேட்டாள்.

 

 "ஏண்டி அந்த ஃபைனல் செலக்சன் டான்ஸ்ல மட்டும் நீ மோசமா ஆடினே?.... சொல்லு...சொல்லு"

 

  ஆரம்பத்தில் உண்மையான பதிலைக் கூறத் தயங்கிய சோபனா, அம்மாவின் அதிரடி மிரட்டலில் பயந்து உண்மையைச் சொன்னாள்.

 

  'அம்மா ஃபைனல் செலக்சன்ல நான் தேர்வாகி இருந்தா... ஆண்டு விழா போட்டியில நான் ஆடணும்... அங்க ஆடறதுன்னா... இந்த மாதிரி நார்மல் டிரஸ்ல எல்லாம் ஆட முடியாதும்மா!... காஸ்ட்யூமரை வரவழைச்சு... அவங்க சொல்ற மாதிரியான காஸ்ட்லி டிரஸ்தான் போடணும்!...மத்த பொண்ணுங்க எல்லாரும் அப்படித்தான் செய்யறாங்க!... அதுக்கெல்லாம் ரொம்ப செலவாகும்!... அவங்க பணக்கார வீட்டுப் பொண்ணுங்க செய்வாங்க... ஆனா நம்ம அப்பா ஏற்கனவே ரொம்ப பணக்கஷ்டத்தில் இருக்கார்... மாசக் கடைசியில கடன் வாங்கித்தான் குடும்பத்தையே ஓட்டுறாரு... அவருக்கு நானும்... செலவு வைக்கலாமா?... அதான் வேணும்னே மோசமா ஆடி செலக்சன் ஆகாமப் போனேன்!" கலங்கிய விழிகளுடன் சொன்ன மகளை இறுகக் கட்டிக் கொண்டாள் அம்மா.

 

(முற்றும்)

 

முகில் தினகரன், கோயமுத்தூர்.