பக்தனின் வாக்கை காப்பாற்ற நொடி நேரத்தில் எடுத்த அவதாரம் நரசிம்ம அவதாரம்.
பரம்பொருளான ஸ்ரீமன்நாராயணன் பல அவதாரங்கள் எடுத்தாலும் மிக முக்கியமாக பத்து அவதாரங்களை அதாவது தசாவதாரங்களை குறிப்பிடுகிறோம். ஒன்பது அவதாரங்கள் எடுத்திருந்தபோதிலும் கர்ப்பவாசம் ஏதும் இல்லாமல் பக்த பிரஹலாதன் அழைத்த மாத்திரத்தில் தூணில் இருந்து நரசிங்கமாக அவதரித்தார்.
மனித உடலோடும் சிங்க முகத்துடனும் தூணில் இருந்து ஆர்பவித்தார்.நரன்- மனிதன் , அரி- சிம்மம்
மிருகம் பாதி மனிதன் பாதியாக தோற்றம் ஏன் ?
அசுரர்களான ஹிரண்யாட்சன்,ஹிரண்யகசிபு இருவரும் சகோதரர்கள். இதில் எம்பெருமான் ஹிரண்யாட்சனை வராக அவதாரத்தின் போது வதம் செய்தார். அந்த கோபம் ஹிரண்யகசிபுவின் மனதில் கழன்றுக் கொண்டிருந்தது.அதனால் அவரை வெல்லவேண்டும் என்ற தவறான எண்ணத்தோடு பிரம்மாவை நோக்கி கடுமையான தவம் புரிந்தார். தவத்தில் மயங்கிய பிரம்மா நேரில் தோன்றினார். உடனே ஹிரண்யன் , தனக்கு தேவர்களாலோ அல்லது மனிதனாலோ, மிருகத்தாலோ மரணம் ஏற்படக்கூடாது என வேண்டினான். அதுமட்டுமல்ல ஆயுதங்களாலும் ஆபத்து வரக்கூடாது என்றும் இரவிலும் இல்லாமல், பகலும் இல்லாமல் இருக்க வேண்டும்.
பிரம்மாவும் சரியென்று வரத்தை தந்துவிட்டார். ஹிரண்யன் தன் வேலைகளை ஆரம்பித்தான். மூன்று உலகங்களையும் தன்வசப்படுத்த நினைத்தான். தேவர்களை கொடுமைப்படுத்த ஆரம்பித்தான். தவம் முடிந்து வந்த நேரத்தில் அவனது மனைவியையும் மகன்களையும் நாரதர் அவனிடம் ஒப்படைத்தார். அவனது மகன் ப்ரஹலாதன் சிறந்த பக்தன். தாயின் கருவில் இருக்கும்போதே பரம்பொருள் ஸ்ரீமன் நாராயணனின் அஷ்டாசர மந்திரத்தை கேட்டு வளர்ந்தவன். எப்போதும் ஸ்ரீமன் நாராயணா என நாமத்தை உச்சரித்துக் கொண்டே இருப்பான். அவனது தந்தையின் எதிரி ஆயிற்றே. கோபம் கொண்டான் ஹிரண்யன். மகனை தனது குலகுருவான சுக்கிராச்சார்யர் மூலம் திருத்தவேண்டும் என நினைத்து அவரிடம் கல்வி கற்க அனுப்பினான். நாட்டில் யாருமே ஸ்ரீமன்நாராயணன் பெயரை உச்சரிக்கக்கூடாது என சட்டம் வைத்து இருந்தான். சுக்ராச்சாரியர் தன் மகன்களைக் கொண்டு கல்வியை தொடங்கி வைத்தார். மிகவும் புத்திசாலியாக திகழ்ந்தான் பிரஹலாதன். தன்னை அவன் மாற்றிக்கொள்ளவில்லை.
தன் மகன் என எண்ணாது தண்டனைக் கொடுத்தான் ஹிரண்யன். எதற்கும் அந்த பிஞ்சுக்குழந்தை பயப்படவில்லை.
அவன்மேல் விஷப்பாம்பை ஏவினான். மதயானை ஓடவிட்டான். தன் மனைவியிடம் விஷத்தை கொடுத்து மகனிடம் தரச் சொல்ல , எம்பெருமாளின் பக்தன் அல்லவா ஒன்றும் ஆகவில்லை. கோபத்தின் உச்சிக்கே சென்றான் ஹிரண்யன். எதற்கும் அஞ்சாமல் ஸ்ரீமன்நாராயணனே பரம்பொருள் என உறுதியாக இருந்த அந்த குழந்தை ப்ரஹலாதனிடம் ," தூணில் இருக்கிறானா, துரும்பில் இருக்கிறானா,எங்கே இருக்கிறான் அந்த நாராயணன் “என கத்தினான். இங்கும் அங்கும் அலைந்து தன் கையில் இருக்கும் கதாயுதம் கொண்டு அருகே இருந்த தூணில் ஓங்கி அடித்தான்.
மறுவினாடி அந்த தூண் தூள் தூளாக வெடித்தது. அதிலிருந்து
பிடரி மயிரை சிலிர்த்து, நிமிர்ந்து கர்ஜனையுடன் சிங்க முகத்துடனும் மனித உடலாக நரசிம்ம மூர்த்தி அவதரித்தார்.
அதை ஆண்டாள் நாச்சியார் தன் திருப்பாவையில்
மாரி மலைமுழஞ்சில் மன்னிக்கிடத்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கப் புறப்பட்டு
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா
என்று வர்ணிக்கிறாள்.
தூணில் இருந்து தோன்றிய நரசிம்ம பெருமாளுடன் போர் புரிய ஹிரண்யன் தயாரானான்.தன் வாளை உருவினான்.
இருவருக்கும் இடையே சண்டை நடந்தது. மாலை நேரம் நெருங்கியது.
உக்ரமான நரசிம்மர், அவனை பற்றி இழுத்தான். தன் தொடையில் அவனை போட்டு கைகளில் உள்ள நகங்களால் கீறினார். உடலை இரண்டாக கிழித்து குடலை உருவி எடுத்தார்.
தேவர்கள் வானில் இருந்து மலர்களை பொழிந்தனர்.
நரசிம்மரின் உக்ரம் தணியவில்லை . அதனால் அனைவரும் மஹாலட்சுமியை வேண்டினர்.ஆகவே
மஹாலட்சுமி வந்து அவரது மடியில் அமர்ந்தார். நரசிம்மரின் கோபம் தணிந்தது. ப்ரஹலாதனை அநகில் அழைத்து ஆசிர்வதித்தார்.அவனுக்கஉ வேண்டிய வரங்களை அளித்தார்.
எங்கும் நாராயண நாமம் ஒலித்தது.
பக்த பிரஹலாதனின் வாக்கான ஸ்ரீமன் நாராயணன் இங்கும் உள்ளான் எங்கும் உள்ளான் என்பதை நிரூபித்தார். பக்த வாக்ய பரிபாலனமே நரசிம்ம அவதாரம். விஷ்ணு பகவானின் நான்காவது அவதாரம்.
இப்பேர்ப்பட்ட இந்த அவதார தினம் வைகாசி மாதம் சுக்லபட்ச சதுர்த்தசி திதியில் வருகிறது. அந்த நாளை நரசிம்ம ஜெயந்தியாக கொண்டாடுகிறோம்.
இந்த வருடம் மே 11, 2025 அன்று வருகிறது.
நரசிம்ம காயத்ரி , நரசிம்ம ஸ்தோத்திரம், பாசுரங்கள் சொல்லலாம்
அன்றைய தினம் விரதம் இருந்து நரசிம்மரை தியானிக்க நீண்ட நாள் பகை, நோய்கள் விலகும் . நாளை என்பதே நரசிம்மனுக்கு கிடையாது. ஆகவே அவரை மனதார," ஸ்ரீநரசிம்ம வரப்ரதாய நமஹ" என வழிபட்டு நலம் பெறுவோம்.
ஸ்ரீ நரசிம்மர் ஸ்வாமி திருவடிகளே சரணம்
-உமாமுரளி,
ஸ்ரீரங்கம்