எங்கள் கிராமமான தஞ்சாவூர் மாவட்டம், திருவையாருக்கு அருகில் அமைந்துள்ள அழகான எளிமையான கிராமம். திருப்பழனம் என்னும் சிவஸ்தலம்தான்.
சின்ன கிராமம். விவசாயத்தை நம்பி இருக்கும் குடும்பங்கள். காவிரியாற்றுப் பாசனம், அமைதியான கிராமம்.
இங்கு சுயம்புவாக தோன்றி அருள்பாலிக்கும்
ஆபத்ஸகாயேஸ்வரர் திருக்கோயில், அம்பாள் பெரியநாயகி தாயார்
எழுந்தருளியிருக்கும் கோயில். அப்பூதியடிகளால் பாடல் பெற்ற ஸ்தலமாகும்.
புரட்டாசி, பங்குனி மாதத்தில் பௌர்ணமியன்றும், அதற்கு முந்தைய, அடுத்த நாளும் நிலாவொளி சுவாமி மீது படுவது மிகவும் சிறப்பானதாகும்.
திருவையாற்றைச் சுற்றி ஏழு ஸ்தலங்களில் அலங்கரிக்கப்பட்ட பல்லாக்குகளோடு சுற்றிவரும் பெரும் விழா சப்தஸ்தானம் என்னும் ஏழூர் திருவிழா.
அது என்ன சப்தஸ்தானம்.
ஆவலுடன் என் பாட்டியிடம் கேட்டேன். பாட்டியும் மிகவும் பெருமையாக தனக்கு தெரிந்ததை சொன்னார்கள்.
'திருவையாறு' 'திரு'
'ஐயாறு' என்று பிரிக்கப்படும். ஐந்து ஆறுகள் சங்கமிக்கும் இடம்".
"காவிரி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு குடமுருட்டி,
என்ற ஐந்து ஆறுகளும் சங்கமிக்கும் இடமாகும். இந்த ஒவ்வொரு ஆறும் வேறு வேறு வழிகளில் பாசனத்திற்கு பயன்படும் வகையில் இயற்கை கொடுத்த வரம்" என்பார்கள். ஐந்து ஆறுகள் சங்கமிப்பதால் ஐயாறு திருவையாறு ஆனது. கோவிலின் தெய்வம் 'ஐயாரப்பன்' என்றும் பஞ்சநதீஸ்வரன் என்றும் அழைக்கப்படுகிறார். அம்பாள் 'தர்மசம்வர்த்தனி' யும் அருள்பாலிக்கின்றனர். கோயிலின் நாலு பிரகாரமும் மிக பெரிதாக அமைந்திருக்கும்.
திருவையாற்றில் அமைந்துள்ள சிவஸ்தலம் அப்பர், சுந்தரர், சம்பந்தர் என்ற மூவராலும் தேவாரம் பாடப்பெற்ற புண்ணிய ஸ்தலமாகும். காவிரி வடகரையில் அமைந்துள்ள 51வது சிவஸ்தலமாகும்.
சன்னதிகளை சுற்றி வரும்போது தெய்வீகம் நிறைந்திருக்கும்.
நெற்களஞ்சியம் அல்லவா தஞ்சை மாவட்டம். பெருமையானது தானே!
சப்தரிஷிகளான காசியபர் திருக்கண்டியூரிலும், கௌதமர் திருப்பந்தூருத்தியிலும், ஆங்கீரசர் திருச்சோற்றுத்துரையிலும், குத்ஸர் திருப்பழனத்திலும், அத்திரி திருவேதிகுடியிலும், பிருகு திருநெய்த்தானத்திலும் (தற்போது தில்லஸ்தானம் எனாறழைக்கப்படுகிறது) வசிஷ்டர் திருவையாறு ஆகிய ஸ்தலங்களில் சிவனை வழிபாடு செய்ததாக ஐதீகம் என்று பாட்டி சொன்னவுடன் எனக்குள் ஆச்சர்யம்.
நாவுக்கரசர் பாடல் பெற்ற ஸ்தலமாகிய திருக்கண்டியூர் பெயர் பெற்ற ஸ்தலமாகும். நவக்கிரகங்களில் ஒரு கிரகமான சந்திரனுக்கு கோயில் அமையப்பெற்றிருப்பது விசேஷமாகும்.
நாவுக்கரசரையே சதா சர்வ காலமும் துதித்துக் கொண்டிருந்த அப்பூதியடிகளின் பாடல் பெற்ற ஸ்தலமாகும். இப்படி பல பெருமைகள் பெற்ற ஸ்தலங்களை சுற்றிலும் அமையப்பெற்ற திருப்பழனம் எங்கள் ஊர் என்று சொல்லிக்கொள்வதில்தான் எத்தனை பெருமை!
சப்தஸ்தானத்திற்கு வருவோம். இது ஒரு மாபெரும் விழா. திருவிழா. ஏழூர் திருவிழா!
உறவுகள் எல்லோரும் வந்திருந்து இரண்டு நாட்களுக்கு முன்னரே வந்திருந்து கலகலவென எத்தனை சந்தோஷம். தெரு முழுவதும் பந்தல் போட்டு, எல்லார் வீட்டிலும் அதிகாலையில் சாணம் தெளித்து தெரு முழுவதும் கலர் கலராய் கோலம் போட்டு, குளித்து அலங்கரித்து கொண்டு உள்ளூர் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் முடித்து, அலங்கரித்து வைக்கப்பட்டிருக்கும் பல்லக்கின் அழகை ரசித்து மகிழ்ச்சியுடன் இருக்கும் உன்னத நாள். ஊராரின் ஒற்றுமையை பறைசாற்றும் பெருவிழா இந்த சப்தஸ்தானம். எங்கள் வீட்டிலும் மூதாதையர் காலம் தொட்டே அன்னதானம் செய்வது வழக்கம். வீட்டிலேயே சமையல் செய்து வாழை இலை போட்டு சாப்பாடு பரிமாரப்படும். பெருமைமிகு நாளாகும் எங்கள் குடும்பத்தாருக்கு.
"திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத்துரை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூத்துருத்தி, தில்லைஸ்தானம்
என்னும் ஏழு ஊயிலிருந்தும் பல்லக்குகள் தயாராக இருக்கும்".
"சித்திரை மாதம் பௌர்ணமிக்கு பிறகு வரும் விசாக நக்ஷத்திரத்தன்று இந்த விழா மிகச்சிறப்பாக ஆரம்பமாகும். திருவையாற்றிலிருந்து ஐயாரப்பன் அலங்கரித்த பல்லக்கு முதலில் கிளம்பி ஒவ்வொரு ஊருக்கும் செல்லும். அந்த ஊர் தெய்வம் எதிர் கொண்டு அழைத்து பின்னர் இரண்டு பல்லக்கும் மூன்றாவது ஊருக்குசெல்லும். இப்படியாக ஏழு ஊர் பல்லக்குகளும் ஒன்றோடு ஒன்று சேர்ந்து அடுத்த நாள் காலை மறுபடியும் திருவையாறு சென்று ஏழு பல்லக்குகளும் வரிசையாக நிற்கும். கண்கொள்ளா காட்சியாகும். மக்களின் பக்தியும் ஒற்றுமையும் ஒருங்கே காணப்படும்".
மக்கள் கூட்டம் கூட்டமாய் குடும்பத்தோடு கண்டு களிப்பார்கள். நானும் பல முறை ரசித்திருக்கிறேன்.
இது ஒருபுறம் என்றால் அநேக மக்கள் உலகெங்கிலுமிருந்து இந்த ஏழூர் திருவிழாவில் ஏழு ஊரையும் (சுமார் 35கிலோ மீட்டர்) நடைபயணமாக சுற்றி வருவது வழக்கம். வேண்டுதல் கண்டிப்பாக நிறைவேறும் என்பது நம்பிக்கை.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் நடைபயணம் மேற்கொள்வார்கள்.
போகும் வழியெங்கும் அன்னதானக்கூடங்களும், தண்ணீர் பந்தல்களும் அமைக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்படும். அந்த உணவு அதீத ருசியுடன் இருக்கும்.
எங்கள் வீட்டில் எல்லோரும் வந்து அமர்ந்து சாப்பிடும்போது மிகவும் பாக்கியம் செய்திருப்பதாக தோன்றும்.
முன்னோர்கள் ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செய்திருப்பதாக, ஏற்படுத்தியிருப்பதாக தோன்றும். அதை எந்த காலத்திலும் அந்த தலைமுறையினர் விடாமல் தொடர வேண்டும் என்றும் நினைப்பேன்.
கிராமம் ஒரு அழகான நினைவு. வயல், புல்வெளி, பனித்துளி, சுத்தமான காற்று, விவசாயம் இதெல்லாம் பிரமிப்பூட்டும்.
சாணம் மொழுகிய அடுப்பு, விறகு வைத்து சமைப்பது, அன்பான உபசரிப்பு, இயல்பான பேச்சு இதெல்லாம் இதமாக இருக்கும்.
ஏழூரிலும் நடந்து செல்லும் மக்கள் சிரமமில்லாது நடந்ததாக கூறுவார்கள். இதை அனுபவிக்க வேண்டும் என்பார்கள். தெய்வ நம்பிக்கை மிகவும் ஆழமாகவும் அற்புத சக்தியாகவும் காணப்படும்.
இன்னும் இன்னும் தெரிந்து கொள்ள தூண்டும், கலந்து கொண்டு ரசிக்க வேண்டும் என்ற ஆவலை உண்டாக்கும். நீங்களும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும்.
மேலும் திருவையாற்றின் பெருமைகளை காண்போம்.
திருவையாறு என்றால் சட்டென்று நினைவிற்கு வருவது மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகப்பிரும்பத்திற்கு சங்கீதத்தால் ஆராதிக்கும் 'தியாகராஜ உற்சவம்' ஆகும். இது மிகப்பெரிய விழாவாக நடத்தப்படும்.
சங்கீத கச்சேரிகள் ஐந்து நாட்களும் வித்வான்களால் பாடப்படும். இதில் கலந்து கொள்வதை மிகப்பெரிய பாக்கியமாகவே கருதுவார்கள். மக்கள் கூட்டம் அலை மோதும். கச்சேரிகள் களை கட்டும். சுற்றுப்புறம் முழுவதும் சங்கீத மனம் கமழும்.
பக்கவாத்தியத்துடன் கச்சேரிகள் காதில் தேன் பாயும்.
மார்கழி பஞ்சமி திதியன்று தியாகப்பிரும்ம ஆராதனையும், அபிஷேகமும் அத்தனை அற்புதமாக நடைபெறும். அத்துனை பாடகர்களும் சேர்ந்து 'பஞ்ச ரத்ன கீர்த்தனை' கள் பாடி தியாகப்பிரம்மத்திற்கு ஆராதனை செய்வது மிகவும் பிரசித்தம். கேட்பவர்களுக்கு அலாதி உற்சாகத்தை தரும். தெய்வீகம் முழுமையாக வெளிப்படும்.
மீடியாவில் ஒலிபரப்பப்பட்டு உலகெங்கும் உலவும் இந்த கானங்கள். தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி இந்தியாவிற்கே பெருமை தரும் நிகழ்விது.
திருவையாறு அரசு இசைக்கல்லூரி, தமிழ் கல்லூரி, தமிழிசை சங்கமும் பிரசித்தம் பெற்றவை. சொல்லிக்கொண்டே போகும் அளவு பெருமைகள் பல கொண்ட ஊர் என்றால் திருவையாறு என்றால் மிகையல்ல! திருவையாறு தேர் திருவிழாவும் மிகவும் அருமையாக நடைபெறும்.
ஆங்! மறந்துவிட்டேனே! ஆண்டவர் கடையின் 'அசோகா' மிகவும் விசேஷமாயிற்றே.
பரம்பரை பரம்பரையாக யாரும் வெல்லமுடியாத ருசியில் செய்து அசத்தும் பாங்கு அலாதியானது.
இன்றுவரை திருநெல்வேலி அல்வா என்றால் திருவையாறு அசோகா தானே!
ஒருமுறையாவது நீங்களும் சென்று சப்தஸ்தானம் என்னும் ஏழூர் திருவிழாவை கண்டுகளிக்க வேண்டும்.
சங்கீத பிரியர்கள் டிசம்பர் சீசனில் திருவையாறு சென்று கச்சேரிகளை கேட்டு ஆத்ம திருப்தி அடையலாம். அப்படியே 'ஆண்டவர் அசோகாவையும்' வாங்கி சுவையுங்களேன்.
-வி.பிரபாவதி
மடிப்பாக்கம்.