tamilnadu epaper

அர்த்தமுள்ள சிரிப்பு

அர்த்தமுள்ள சிரிப்பு

 

முந்தின நாள் மாலை ஒரு டீன் ஏஜ் பெண் ஸ்கூட்டியில் பெட்ரோல் இல்லாமல் தள்ளி கொண்டு வந்ததையும், அவளுக்குத் தான் தன் பைக்கிலிருந்து பெட்ரோல் பிடித்துக் கொடுத்து அனுப்பி வைத்ததையும், தன் நண்பன் குருவிடம் பெருமையாக சொல்லிக் கொண்டான் ராஜேஷ்.

 

அதைக் கேட்டு குரு எந்த ரியாக்ஷனும் காட்டாமல் இயல்பாய் இருக்க, "என்னடா ஒண்ணுமே சொல்ல மாட்டேங்குறே?".

 

   "என்ன சொல்லச் சொல்றே?" குரு கேட்டான்.

 

  "ஒரு பாராட்டு கூடச் சொல்ல மாட்டேங்குறே?"

 

அதற்கும் பதிலேதும் சொல்லாமல் அர்த்த புஷ்டியுடன் ஒரு குறுஞ்சிரிப்பை சிந்தினான் குரு.

 

  "ஹும்... உன்கிட்டப் போய் சொன்னேன் பாரு!" தலையிலடித்துக் கொண்டு நகர்ந்தான் ராஜேஷ்.

 

   மறுநாள் மார்க்கெட் சென்றிருந்த போது அதே பெண்ணை மறுபடியும் பார்த்த ராஜேஷ் சினேகமாய் சிரிக்க, முகத்தை வெடுக்கென்று திருப்பிக் கொண்டு நகர்ந்தாள் அவள்.

 

  "ஒருவேளை அடையாளம் மறந்திருப்பாளோ?" தனக்குத்தானே சமாதானம் சொல்லிக்/கொண்டு காய்கறி கடையை நோக்கி சென்றான் ராஜேஷ்.

 

   பக்கத்துக் கடையில் அதே பெண் மீண்டும்.

 

  மறுபடியும் புன்னகைத்தான்.

 

   "ஏய்... யாருடி அவன்?... அங்கேயும் உன்னைப் பார்த்துச் சிரித்தான்!... இங்கேயும் உன்னைப் பார்த்துச் சிரிக்கிறான்... யாரடி அவன்?" தோழி கேட்க.

 

  "நேத்திக்கு ஸ்கூட்டியில் பெட்ரோல் இல்லாமல் தள்ளிக்கிட்டு வரும்போது இவன் தான் தன்னோட பைக்கிலிருந்து பெட்ரோல் எடுத்துக் கொடுத்து உதவினான்"

 

  "அப்புறம் ஏண்டி தெரியாத மாதிரி இருக்கே?"

 

   "இவனுகளைப் பற்றி உனக்குத் தெரியாதுடி!.. உதவுற மாதிரி உதவுவானுங்க... அப்புறம் சிரிப்பானுக!.. மெல்ல வந்து பேசுவானுங்க!.. கடைசில "ஐ லவ் யூ"ன்னு சொல்லி வழியுவானுக!.. நான் ஒரு டீன் ஏஜ் ஃபிகரா இருந்ததினால உதவினான்!.. இதே ஒரு வயதான பெண்மணியே அல்லது ஒரு ஆணோ இருந்தால் உதவுவானா?... கண்டுக்காமப் போயிடுவான்"

 

  "பரவாயில்லைடி...ஜென்ட்ஸைப் பத்தி நல்லாவே கணிச்சு வச்சிருக்கே"

 

   தன் நண்பன் குரு நேற்றுச் சிரித்த சிரிப்பின் அர்த்தம் இப்போது புரிந்தது ராஜேஷுக்கு.

 

முற்றும்.

 

முகில் தினகரன் கோயம்புத்தூர்.