tamilnadu epaper

அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்

அறிவோம் அபிராமி அந்தாதியை    பாடல்

தண்ணளிக்கென்று முன்னே பலகோடி தவங்கள் செய்வார்

 

மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார்? மதிவானவர் தம்

 

விண்ணளிக்கும் செல்வமும் அழியா முத்தி வீடுமன்றோ?

 

பண்ணளிக்கும் சொல் பரிமளயாமளைப் பைங்கிளியே.

 

 

தண்ணளிக்கென்று முன்னே பலகோடி தவங்கள் செய்வார் = (தண்=குளிர்ச்சி, அளி = கருணை) அன்னையே உனது குளிர்ச்சி பொருந்திய கருணை பெறுவதற்கு பல கோடி தவங்கள் செய்பவர்கள்

 

மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார்? - இந்த பூலோகத்தில் அனுபவிக்க கூடிய மண், நகைகள், பணங்கள், வாகனங்கள் போன்றவற்றை மட்டுமா அனுபவிப்பர்?

 

 மதிவானவர் தம்

விண்ணளிக்கும் செல்வமும் அழியா முத்தி வீடுமன்றோ? - அறிவில் சிறந்த தேவர்கள் பெறக்கூடிய செல்வங்களையும், அழியா முத்தி பேரையும், இந்திர பதவியும் அல்லவா அடைவார்கள்?

 

பண்ணளிக்கும் சொல் பரிமளயாமளைப் பைங்கிளியே - இசையைப் போன்று பேசக்கூடிய மனம் கமழும் யாமளை நிற பைங்கிளியே!

 

 

இங்கே பட்டர் எதனால் அம்பிகையை யாமலை நிற பைங்கிளி என்று சொல்கிறார் என்று பார்த்தால், கிளியின் நிறம் பச்சை அதன் மூக்கானது சிவப்பு. சிவனுடைய நிறமானது சிவப்பு மதுரை மீனாட்சி புடவை பச்சை நிறம். ஆகையால் சிவப்பு மற்றும் பச்சை நிறங்களை சிவசக்தி ஐக்கிய சொரூபமாக பார்க்கிறார் பட்டர். அப்படிப்பட்ட அன்னையின் கருணைக்காக பல கோடி தவங்களை செய்யக்கூடியவர்களுக்கு இந்த மண்ணிலே கிடைக்கக்கூடிய ராஜபோக வாழ்க்கை மட்டுமா அம்பாள் கொடுப்பார்? அறிவில் சிறந்த தேவர்கள் ஆளக்கூடிய தேவலோகப் பதவியும், இந்திர பதவியும், அழியாது முத்தி பேரையும் அல்லவா கொடுப்பாள்?

(இந்திரன் பதம் பெறண்டர் தன் பயம் கடிந்த பின்பு எண்கணங்கமர் ந்திருந்த பெருமாளே -திருப்புகழ்)

 

(தொடரும் / வளரும்) 

சிவகுமார் நடராஜன், பரங்கிப்பேட்டை