*அறிவோம் அபிராமி அந்தாதியை - பாடல் 89*
சிறக்கும் கமலத் திருவே; நின்சேவடி சென்னி வைக்கத்
துறக்கம் தரும் நின் துணைவரும் நீயும் துரியம் அற்ற
உறக்கம் தரவந்து, உடம்போடு உயிர் உறவு அற்று அறிவு
மறக்கும் பொழுது, என் முன்னே வரல் வேண்டும் வருந்தியுமே
--------------------
சிறக்கும் கமலத் திருவே - சிறப்பான தாமரை மலரில் இருக்கக்கூடிய செல்வமே, நின்சேவடி சென்னி வைக்கத் - உனது திருவடிகளை என் சிரசின் மீது வைக்க,
துறக்கம் தரும் - தேவலோக பதவியை அளிக்க, நின் துணைவரும் நீயும் - நீயும் உனது துணைவரும், துரியம் அற்ற
உறக்கம் தரவந்து - தியானத்தில் சுசுப்தி என்ற நிலையில் இருக்கும் போது, உடம்போடு உயிர் உறவு அற்று - உடம்போடு உயிர் இருக்கும் நிலை அற்று போய், அறிவு
மறக்கும் பொழுது - அறிவும் தன் நிலையை மறக்கும் போது, என் முன்னே வரல் வேண்டும் வருந்தியுமே - வருந்தாமல் என் முன்னே வந்து நிற்க வேண்டும்.
---------------------
சகஸ்ராரம் என்று சொல்லக்கூடிய ஆயிரம் இதழ்களை உடைய தாமரையில் வீற்றிருக்கும் அன்னையே. நீயும் உனது கணவரும், நான் தியானத்தில் துரியாதீத நிலையில், உடலும் உயிரும் உணர்வு அற்று இருக்கும் பொழுது நீ வருந்தியாவது வந்து உனது திருவடிகளை எனது சிரசின் மீது வைக்க வேண்டும்
(தொடரும் /வளரும்)
சிவகுமார் நடராஜன், பரங்கிப்பேட்டை