tamilnadu epaper

இறைவன் ஒரு நாள்..

இறைவன் ஒரு நாள்..

மேலிருந்து ஒருவர் ஸ்லோ மோஷனில் இறங்கி அவனிடம் வந்தார்.


”நானே இறைவன்.. வேண்டிய வரத்தைக் கேளு தரேன்,” என்றார்.


”நீங்கதான் கடவுள்னு எப்படி நம்புறது?”


”அதை நிரூபிக்க நான் என்ன பண்ணட்டும்?” கடவுள் கெஞ்சினார்.


”புரூஃப் ஏதாவது காட்டுங்க!”


’மந்திர தந்திரம் செஞ்சு காட்டவா?”


”ஓ! அப்ப நீங்க மேஜிஷியன்னு சொல்லுங்க..”


”உன் பிறந்த தேதி, நேரம் சொல்லவா? ”


”இறக்கும் தேதி தெரிஞ்சா சொல்ங்க..”


”எடக்கு மடக்காவே பேசுறியே..நீ எப்பவுமே இப்படித்தானா?”


”கல்யாணம் ஆன பிறகு மனைவியிடமிருந்து தொத்திக்கிச்சோன்னு தெரியல!”


”மணமாவதற்கு முன் காதல் வசப்பட்டாயா?”


”இந்த மூஞ்சிய எந்த சுமாரான பிகரும் காதலிக்கல..”


”எதுக்கு அரேஞ்டு மேரேஜ் பண்ணிக்கிட்டே?”


”இல்லாட்டி ஆணவக் கொலை பண்ணிடுவாங்க..”


”குழந்தை குட்டி இருக்கா?”


”கர்ப்பப்பை வீக்கு..அதனால வா.தாய் மூலம் பெற்றோர் ஆனோம்!”


”எங்கே போய்க்கிட்டிருக்கே?”


“என் தாயார் நினைவு நாளுக்கு அநாதை ஆசிரமத்தில் அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்ய போறேன்..”


”உன்னுடைய இன்னல்கள் எவைன்னு சொல்ல முடியுமா?”


”திடீர்னு காஸ் ஸ்டவ் டியூப் தீப்பிடிச்சுக்கிச்சு..அதை எடைக்குப் போட்டு புதுசு வாங்கினேன். எல் ஐ சியில பாலிஸி எடுத்தேன். மெடிக்கல் ரிப்போர்ட் குறைன்னு மீண்டும் டெஸ்ட் எடுக்க மூவாயிரம் கூடுதல் செலவு..

அடுக்கு மாடி குடியிருப்பு பழசானதால் இடிச்சுக் கட்ட யுடிஎஸ் சான்றிதழ் பெற இருபதாயிரம் ரூபாய் ஆச்சு..வருடக் கடைசி என்பதால் 80CC எடுக்க கொஞ்சம் செலவாச்சு.

கார் ரிவர்ஸ் எடுக்கும்போது, துணிகள் காயப்போடும் ஸ்டாண்டு சுவரோடு அழுந்தி மடங்கி விட்டது. புதுசு வாங்க ஆயிரத்து நானூறு ஜிபே செஞ்சேன்..”


”சரி.. உன் பிரச்சனைகள் தீர சில லட்சங்கள் தரவா?”


“நோய், நொடி இன்றி சௌக்கியமாக வெச்சிருக்கியே..அதுவே போதும்!”


“அப்ப என்னைக் கடவுள்னு ஒத்துக்கிட்டாயா, மானிடா?”


“பிறர் கஷ்டத்தை இரக்கமுடன் காது கொடுத்து கேட்பவன் நிச்சயம் மனிதாபிமானின்னு நான் முடிவு செஞ்சுட்டேன்!”


சர்’ரென்று ஏதோ மேலெழும்பிச் சென்றது!


ஏதாவது வரம் கேட்டிருக்கலாமோ என அவன் மனம் அலைபாய்ந்தது.



-பி. பழனி,

சென்னை.