அதிசயம் ஆன வடிவுடையாள் அரவிந்தம் எல்லாம்
துதிசய ஆனன சுந்தரவல்லி துணை இரதி
பதி சயமானது அபசயமாக முன் பார்த்தவர்தம்
மதி சயமாக அன்றோ வாம பாகத்தை வவ்வியதே
அதிசயம் ஆன வடிவுடையாள் = அபிராமி அன்னை மிகவும் அதிசயமான அழகான உருவத்தை உடையவள். (வடிவு = அழகு)
அரவிந்தம் எல்லாம் துதி =
அரவிந்தமாகிய தாமரை மலரை முதற்கொண்டு எல்லா அழகிய மலர்களும்
சய ஆனன சுந்தரவல்லி - துதி செய்யக்கூடிய வெற்றி பொருந்திய திருமுகத்தை உடைய அழகிய கொடி போன்றவள் (ஆனன = முகம். கஜானனர்= யானை முகத்தை உடையவர்)
துணை இரதிபதி = அழகிய ரதியின் பதியாகிய மன்மதனின்
சயமானது = (ஜெயமானது) வெற்றியானது
அபசயமாக = தோல்வியுறும்படி
முன் பார்த்தவர் - முன்பு நெற்றிக்கண்ணால் பார்த்து எரித்த சிவபெருமானின்
தம் மதி = திருவள்ளமானது
சயமாக அன்றோ வாம பாகத்தை வவ்வியதே - அப்படி மன்மதனை வென்றவர் தம் மனத்தையும் நீர் போல் குழையச்செய்து வெற்றிகொண்டு அவருடைய இடது பாகத்தையும் கவர்ந்து கொண்டவளே. அது பெரும் அதிசயம். காமனை அழித்தவரின் இதயத்தில் இடம் பிடிப்பது அதிசயம் அல்லவா?
உலகங்கள் எல்லாம் வியக்கும் வண்ணமாக அழகிய திரு உருவை கொண்டவளே. தாமரைப் போன்ற மலர்கள் எல்லாம் துதி செய்யக்கூடிய திருமுகத்தையும் அழகிய கொடியைப் போன்ற இடையையும் உடையவளே. தோல்வியே அறியாத ரதியின் பதியாகிய மன்மதனை முன்பு தனது நெற்றிக்கண்ணால் எரித்து தோல்வியுற செய்த சிவனின் இதய பாகமாகிய இடபாகத்தை தனதாக்கிக் கொண்டவளே உனது செயல் அதிசயமானதே.
எப்படி எமனை எரித்தால் உலகில் இறப்பு என்பது இருக்காதோ, அதுபோல இச்சையை தூண்டக்கூடிய மன்மதனை எரித்தால், உலகில் புதிய உயிர்கள் பிறப்பு தோன்றாது, உலக இயக்கமானது நின்றுவிடும். ஆகையால் இறைவி அரனது உடம்பில் இடது பாகத்திலே அமர்ந்து மன்மதனுக்கு மீண்டும் உயிர் பிச்சை அளித்தாள்.
*ஹர நேத்ராக்னி ஸந்தக்த காம சஞ்சீவ நௌஷதி* என்ற லலிதா சகஸ்ரநாமத்தின் பொருள்: சிவனது கண்களில் இருந்து தோன்றிய நெருப்பினால் பஸ்பமான மன்மதனை சஞ்சீவினி என்ற உயிர்ப்பிக்கும் மூலிகை மருந்தை கொடுத்து அவனை உயிர்பித்தவள்.
(வளரும் /தொடரும்)
சிவகுமார் நடராஜன், பரங்கிப்பேட்டை