கடந்த பத்து நாட்களாகவே திலீப் படு சந்தோஷமாக இருந்தான். ஒரு மாதம், இரண்டு மாதமல்ல, கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக அவன் தன் காதலை சுமதியிடம் சொல்லிக் கொண்டிருக்கின்றான். அவள் கம்பெனியின் மெயின் கேட்டைத் தாண்டிச் செல்லும் போதும், அவளது சாப்பாட்டுக் கூடையை செக்யூரிட்டியான அவன் செக் பண்ணும் போதும், அவளிடம் தன் மனதைத் திறப்பான்.
"ச்சீய்... ஒரு செக்யூரிட்டியான உன்னைக் காதலிக்க நான் என்ன அவ்வளவு கேவலமாகவா போயிட்டேன்?" என்று பதிலடியாக அவன் மூக்கை உடைப்பாள்.
என்னவாயிற்றோ தெரியவில்லை பத்து நாளைக்கு முன் அவள் அவனது காதலை ஏற்றுக் கொள்ள அன்றிலிருந்து திலீப் உல்லாச ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருக்கிறான். உலகத்தின் மொத்த சந்தோசமும் அவன் ஒருவனுக்கே கிடைத்து விட்டது போல் ஆடிப்பாடி மகிழ்ந்தான்.
அன்று மதியம், அவளுக்காகத்தான் வாங்கி வைத்திருந்த அல்வாவை அவளுக்கு தர வேண்டி மதிய உணவு வேளையில் பெண்கள் சாப்பிடும் இடத்திற்குச் சென்று உள்ளே எட்டிப் பார்த்தான்.
உள்ளே சுமதியும் இன்னொருத்தியும் மட்டுமே இருந்தனர். அவர்களது "கிசு...கிசு"ப்பான பேச்சில் தன் பெயரும் இடம் பெற வெளியில் நின்றே கூர்ந்து கவனித்தான்.
"ஏண்டி சுமதி... அந்த வாட்ச்மேன் திலீப்பை வாய்க்கு வந்தபடியெல்லாம் திட்டுவே... இப்ப என்னடி திடீர்னு அவன் மேலே காதல்?" தோழி கேட்க,
"காதலா?... எனக்கா?... அவன் மேலேயா?... சுத்தமாக் கிடையாது!.. நான் நடிச்சிட்டிருக்கேன்!.. அவ்வளவுதான்!.."என்றாள் சுமதி.
அதிர்ந்து போனான் திலீப்.
"எதுக்கு தெரியுமா?... நான் அவனைக் காதலிக்காத போது தினமும் அவன் சாய்ந்தரம் போகும் போது என்னுடைய சாப்பாட்டுக் கூடையைச் சோதனை பண்ணுவான்... இப்ப காதலுக்கு நான் ஓ.கே. சொன்ன பிறகு அவன் என் கூடையை சோதனை பண்றதே இல்லை!"
"சரி இதிலென்ன சந்தோசம்?"
"தினமும் கம்பெனியிலிருந்து போகும் போது அரைக் கிலோ செம்புக் கம்பியை உருட்டி.. சுருட்டி.. என் டிபன் கூடைக்குள்ளார டிபன் பாக்ஸுக்கு நடுவுல வெச்சு எடுத்துட்டு போறேன்.... இதுவரைக்கும் கிட்டத்தட்ட 10 கிலோ செம்புக்கம்பி சேர்த்திட்டேன்!.. இனி அதை வித்திடுவேன்... அதுக்காகத்தான் இந்தக் காதல் நாடகம்"
தன் கையில் இருந்த அல்வாவை பக்கத்திலிருந்த குப்பைக் கூடையில் வீசி விட்டு திரும்பி நடந்தான் திலீப்.
போகும் அவனைப் பார்த்து குப்பை கூடையில் இருந்த அல்வா சிரித்தது.
(முற்றும்)
முகில் தினகரன், கோயமுத்தூர்.