தன்னுடைய வேலை நிமித்தமாக காரை எடுத்துக்கொண்டு ஓட்டுநர் ஒருவரை வாடகைக்கு அமர்த்தி வெளியூர் போய்விட்டுத் திரும்புகையில் குமரனுக்கு நினைவுக்கு வந்தது போகிற வழிதானே சொர்ணம் அத்தையின் வீடு என்று. குமரனின் தூரத்துச் சொந்தம் சொர்ணம் அத்தை அவர்கள். ஒரு வருடத்திற்கு முன்பு நடைபெற்ற விபத்தில் சிக்கில் கால்கள் உடைந்துபோய் பெரிய அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றினார்கள். அதன்பின் தானே செய்கிறேன் என்று இரண்டுமுறை கீழே விழுந்து மறுபடியும் அறுவைச் சிகிச்சை என்று மரணத் துன்பத்தை அனுபவித்தார்கள். நடமாடமுடியாமல் இப்போதுதான் லேசாக வீட்டுக்குள்ளேயே நடக்கிறார்கள். விபத்து நேர்ந்தபோது குமரனும் அவன் மனைவியும் போய் பார்த்துவிட்டு வந்தார்கள். அதற்குப்பின் இப்போதுதான் நேரம் வாய்த்திருக்கிறது.
பார்த்துவிட்டுப் போய்விடலாம். இதற்காக வரவில்லை. சுமந்து போகவும் ஒன்றும் இல்லை. சொர்ணம் அத்தையும் மகிழ்ச்சி கொள்வார்கள் பார்க்க வந்தமைக்காக. போகிற வழிதானே.
போகிற வழியில் பழமுதிர்ச்சோலையொன்றில் நிறுத்தி சொர்ணம் அத்தைக்கு எது உடலுக்கு நல்லது. ?. எது பிடிக்கும்? என்று யோசித்து மாதுளை, உலர் திராட்சை, கொய்யா என்று வாங்கிக்கொண்டான்.
வீட்டு வாசலில் காரை நிறுத்தி உள்ளே போய் பார்த்ததும் சொர்ணம் அத்தைக்கு மகிழ்ச்சியாயிற்று. நிறைய நேரம் பேசியிருந்துவிட்டுக் கிளம்புகையில் வாடகைக்கு வந்த டிரைவரைப் பார்த்து, குமரன் தம்பி வந்து என்னைப் பார்க்க வந்தது காணாத தெய்வத்தைக் கண்டதுபோல் இருக்கிறது என்று நெகிழ்ந்து கூறினார்கள்.
குமரனுக்கும் நெகிழவே செய்தது.
இனிமேல் இந்தப் பக்கம் வரும்போதெல்லாம் தவறாமல் பார்த்துவிட்டுச் செல்வதையும் ஒரு முக்கிய வேலையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று முடிவுசெய்துகொண்டான். கணவனை இழந்தவரகள். தனிமையில் இருப்பவர்கள். நோய்க்கு ஆட்பட்டவர்கள் பேச்சுத் துணைக்கு எதிர்பார்ப்பது இயல்பானது. ஏங்குவார்கள். குமரன் அதை நன்குணர்ந் திருந்தான்.
உடம்பைப் பாத்துக்கங்க அத்தை என்று சொல்லிவிட்டு குமரன் கிளம்பினான்.
(2)
மேற்சொன்ன சம்பவம் நிகழ்ந்த அடுத்த வாரம் குமரன் உறவினர் ஒருவர் எதேச்சையாகக் குமரனைப் பார்த்தவர், ஒரு செய்தி சொன்னார்.
குமரன், சொர்ணம் அத்தையைப் பாக்கப்போனியா?
ஆமாம் மாமா.. ஏன் என்ன விஷயம் மாமா? அத்தைக்கு ஏதாவது திரும்பப் பிரச்சினையா ? என்றான்.
அதெல்லாம் ஒண்ணும் இல்ல.. இருக்கு.. நான் பாக்கப்போயிருந்தேன்.. அப்ப நீ வந்து பாத்துட்டுப்போனத சொன்னிச்சு.. என்னமோ பழங்கள்லாம் வாங்கிட்டு வந்தியாம்.. அதுலே கொய்யா ஒண்ணுகூட நல்லா இல்லையாம்.. என்னமோ பாக்க வர்றாங்கன்னு சொன்னாங்க… என்று சொன்னதும்
குமரனுக்கு வருத்தமானது. சொர்ணம் அத்தையின் இயல்பு எப்போதும் காசுதான்.. காசு இருந்தால்தான் மதிப்பார்கள். இத்தனை வயதாகியும் நோய்க்கு ஆளாகியும் இந்தப் பண்பு போகவில்லையே என்று வருத்தப் பட்டான். ஒருத்தருடைய அடிப்படைப் பண்பு எப்பவும் எதனாலும் மாறுவதில்லையோ என்கிற ஐயமும் வந்தது.
(3)
சரியாக ஒரு மாதம் கழித்து மறுபடியும் சொர்ணம் அத்தையைப் பார்க்கும் சந்தர்ப்பம் வாய்த்தது. அலுவலக வேலையை முடித்துவிட்டுத் திரும்பிய பொழுதில் சொர்ணம் அத்தையைப் பார்க்கப்போனான். வழக்கம்போல ஒரு பழக்கடையில் வண்டியை நிறுத்தி மாதுளை, மாவு ஆப்பிள், கொய்யாப்பழம், விதையில்லாத் திராட்சை, நெல்லிக்காய் என்று அதிகமாகப் பழங்கள் வாங்கிக்கொண்டான்..
ஏன் சார் இவ்வளவு பழம் என்று டிரைவர் கேட்டார்.
சொர்ணம் அத்தை குறைபட்டதை டிரைவரிடம சொன்னான்.
வாசலில் காரை நிறுத்திவிட்டு உள்ளே போனான் குமரன். போய் பழங்களைத் தூக்க முடியாமல் கொடுத்தான்.
ஏங்க தம்பி.. இத்தனை பழம் வாங்கிட்டு வந்திருக்கீங்க… நான் ஒத்தையாளு.. அங்க அப்படியே சோபாவில் வைங்க தம்பி என்றார்கள்..
வழக்கம் போல கொஞ்ச நேரம் பேசியிருந்துவிட்டுப் பின் கிளம்பறேன் அத்தை என்று சொல்லிவிட்டுக் கிளம்பினான்.
திரும்புகையில் டிரைவர் கேட்டார்.. ஏன் சார் அந்தம்மாதான் அத்தனை குறை பேசுனாங்க.. அப்புறம் ஏன் சார் இவ்வளவு பழங்கள் வாங்குனீங்க?
டிரைவரிடம நிதானமாகச் சொன்னான் குமரன்.
ஒவ்வொருவர் இயல்புப்படிதான் அவரவர் வாழ்க்கை அமையும். நான் வேணுமின்னு செய்யலே.. ஆனா கொய்யா நல்லா இல்லன்னு சொன்னாங்க.. அதெல்லாம் மீறி அவங்கள உண்மையாப் பாக்கணும்னு போனேன்.. சரி.. நாம வாங்குனது சரியில்லைன்னு சொல்லும்போது.. அது எனக்குத் தவறாப் பட்டுச்சு.. அதனால சரியான பழத்தை வாங்கிக்கொடுத்துட்டு வந்தேன்.. இது என்னோட குணம்.. குறைசொல்லாமப் பாத்துக்கறது. சரியில்லன்னு சொன்னா அதை சரிசெஞ்சுடணும்.. இது என்னோட குணம்.. நம்ப குணத்தை நாம மாத்திக்க முடியாதுல்ல.. அவ்வளவுதான். என்றான் குமரன்.
--- -ஹரணி, தஞ்சாவூர்.