tamilnadu epaper

அஸ்திவாரம்

அஸ்திவாரம்

அடுத்தபடியாக பிரபல தொழிலதிபர் 

ஆடியபாதம்  அவர்கள் இந்த அன்பு இல்லத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றுவார்கள்... மேடையில் ஒருவர் பேசினார். 

 

ஆடியபாதம் இருக்கையில் இருந்து எழுந்து அந்த அன்பு இல்லத்தை திறந்து வைத்தார்.

திறப்பு விழா சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்த பின்பு பேசிட மைக்கை நோக்கி நடந்தார்.

 

அவர் பேச்சை ஆரம்பிக்கும் போதே அதில் அனல் பறந்தது.

 

"உண்மையில் இந்த மாதிரி முதியோர் இல்லத் திறப்பு விழாவிற்கு வருவதில் எனக்கு உடன்பாடு இல்லை.

தயவு செய்து இனிமேல் இந்த மாதிரி விழாவுக்கு என்னை அழைக்காதீர்கள். 

இந்த மாதிரி முதியோர் இல்லமோ, அனாதை விடுதியோ கட்டப்படுவதை பெரிய அவமானமாகவும், குற்றமாகவும் நான் நினைக்கிறேன்.

 

இந்த இல்லமே இந்த நாட்டில் திறக்கப்படும் கடைசி இல்லமாக இருக்க வேண்டும். 

அதற்கான முன்னேற்பாடுகளை நாம் செய்ய வேண்டும். 

இது போன்ற இல்லங்களுக்கு என்று அஸ்திவாரம் தோண்டப்படாமல் இருக்கிறதோ அன்று தான் இந்த நாட்டிற்கு விடிவு காலம்...என்று ஆவேசமாக பேசிக்கொண்டே போனார்.

வந்திருந்தோர் கைதட்டில் அந்த விழா நடைபெறும் இடமே அதிர்ந்தது.

 

விழா முடித்து காரில் ஏறி அமர்ந்த ஆடியபாதத்திடம்...

'ஐயா வீட்டிற்குத் தானே'  என்று கேட்டார்  டிரைவர்.

 

நேராக "அன்னை தெரசா இல்லம்" போப்பா... என்றார் ஆடிய பாதம்.

 

"அம்மாவைப் பார்த்து இரண்டு மாசமாச்சு... மனதுக்குள் நினைத்துக் கொண்டார்.

 

                  -----------------------------------

கவிஞர்.க.மோகனசுந்தரம்

ஊரப்பாக்கம்.