சூரியன் தெற்கு திசையை நோக்கி நகரத் தொடங்கும் தட்சிணாயனம் புண்ணிய காலமும் இந்த ஆடி மாதத்தில்தான் தொடங்குகிறது..
கிருத்திகா நட்சத்திரம் 27 நட்சத்திரங்களில் 3வது நட்சத்திரம். தமிழ் மாதமான ஆடியில் இந்த நட்சத்திரத்தால் ஆளப்படும் நாள் ஆடி கிருத்திகை என்று போற்றப்படுகிறது.
முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த நட்சத்திரம் கிருத்திகை என்பதால், இந்த நாள் மிகவும் மங்களகரமானதாகவும், முருகப்பெருமானை வழிபட சிறந்த நாளாகவும் கருதப்படுகிறது..
இந்த வருடம் 2024 ஆடி கிருத்திகை எப்போது? அன்று முருகனை வழிப்பட்டால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன? என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்..
☆☆☆ இந்த ஆண்டு ஆடிக் கிருத்திகையானது ஜூலை 30ம் தேதி செவ்வாய்கிழமை வருகிறது. ஜூலை 29ம் தேதி பகல் 02.41 மணிக்கு துவங்கி, ஜூலை 30ம் தேதி பகல் 01.40 மணி வரை கிருத்திகை நட்சத்திரம் உள்ளது. ஜூலை 29ம் தேதி பகல் பொழுதிலேயே கிருத்திகை நட்சத்திரம் துவங்கி இருந்தாலும், சூரிய உதயத்தின் போது இருக்கும் நட்சத்திரமே அன்றைய நாளுக்குரிய நட்சத்திரமாக கருத வேண்டும் என்பதால் ஜூலை 30ம் தேதியையே ஆடிக்கிருத்திகையாக எடுத்துக் கொண்டு விரதம் இருக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம்..
மேலும் அன்றைய தினம் மிகவும் சிறப்பான நாளாக கருதப்படுகிறது.. அதற்கு காரணம் முருகனுக்கு உரிய கிருத்திகை செவ்வாய்கிழமையில் வரூகிறது. அம்மனுக்கு உரிய ஆடி 2ஆம் செவ்வாய் கிழமையும் அன்றுதான் வருகிறது.. இதனால் அன்றைய தினம் விரதம் இருப்பவர்களுக்கு அம்மனுடைய அருளும் முருகனுடைய அருளும் சேர்ந்தே கிடைக்கும்..
☆☆☆ ஆடி கிருத்திகையின் புராணம்..
சிவனின் நெற்றிக் கண்ணில் இருந்து வந்த முருகப் பெருமானை ஆறு கார்த்திகை பெண்கள்தான் வளர்த்தனர். அவர்களை சிறப்பிக்கும் விதமாக அவர்கள் முருகனுக்குரிய நட்சத்திரமாக கருதப்படுவார்கள் என்றும், அந்த நாளில் கார்த்திகை பெண்கள் ஆறு பேரும் வழிபடப்படுவார்கள் என்றும், கார்த்திகை நட்சத்திரத்தன்று முருகப் பெருமானை வழிபடுபவர்களுக்கு அனைத்து நலன்களும் கிடைக்கும் என்றும் சிவ பெருமான் வரம் அளித்தார். அவர் அளித்த வரத்தின்படி கார்த்திகை நட்சத்திரம் முருகப் பெருமானுக்குரிய நட்சத்திரமாக கருதப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது..
☆☆☆ முருகனை வழிபடும் முறை...
ஆடி கிருத்திகை நாளில், சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்து நீராடி தங்களுடைய விரதத்தைத் தொடங்க வேண்டும். இந்த நாளில் சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்து நீராட வேண்டும். பின்னர் முருகப் பெருமானின் ஆலயத்திற்குச் சென்று வழிபாடுகளை மேற்கொண்ட பின்னதாக விரதத்தைத் தொடங்கவும்.
கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டின் பூஜை அறையில் முருகனை வழிபட வேண்டும்.. இந்த நாளில் காலையிலிருந்து மாலை வரை எதுவும் சாப்பிடாமல் இருந்து முருகனை மனதிலே நினைத்து வழிப்பட வேண்டும்.. உடல் நலம் குன்றியவராக இருந்தால் கொஞ்சமாக பழங்கள் அல்லது பழச்சாறு அருந்திக்கொள்ளலாம்.. பின்னர் மாலை நேரத்தில் வீட்டில் பூஜைகளை செய்துவிட்டு உணவு உண்டு விரதத்தை முடித்துக்கொள்ளலாம்..
☆☆☆ ஆடி கிருத்திகையின் முக்கியத்துவம்...
தமிழ் மாதமான ஆடி மாதம் மங்களகரமானதாக கருதப்படுகிறது. ஆடி மாதம் ஆண்டின் இரண்டாம் பாதியில் வருகிறது, இது தட்சிணாயனம் என்று அழைக்கப்படுகிறது, அதாவது சூரியன் வடக்கிலிருந்து தெற்கு அரைக்கோளத்திற்கு மாறும்.. எனவே, ஆடி மாதம் முழுவதும் தெய்வங்களுக்கு சிறப்பு பிரார்த்தனைகள் மற்றும் பூஜைகள், வழிபாடுகள் செய்ய ஏற்றது..
ஆடி கிருத்திகை முருகப்பெருமானின் சக்தி நாளாகக் கருதப்படுகிறது, அன்று முருகப்பெருமானின் ஆறு படைவீடுகளில் அவருக்கு பூஜைகளும் சிறப்புப் பிரசாதமும் வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ஆடி மாதம் அம்மனுக்குரிய மாதமாகும். இந்த மாதத்தில் வேறு எந்த தெவத்தையும் வணங்குவதில்லை. ஆனால் முருகபெருமானை அனைவரும் வணங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது..
☆☆☆ விரத பலன்கள்...
ஆடி கிருத்திகை விரதத்தைக் கடைப்பிடிப்பதன் மூலமும், வாழ்க்கையில் அனைத்து நன்மைகளையும் பெற முடியும் என்றும் குழந்தை பேறு உண்டாகும் எனவும் சொல்லப்படுகிறது. அதிலும் ஆடி இரண்டாவது செவ்வாய் வழிபாடும் சரி, ஆடிக் கிருத்திகை விரதமும் சரி குழந்தை வரம் தரக் கூடியதாகும்.
இந்த வருடம் இது இரண்டும் சேர்ந்து வருகிறது.. குழந்தை இல்லாத தம்பதிகள் இந்த நாளில் விரதம் இருந்து, முறையாக வழிபட்டால் நிச்சயம் குழந்தை வரம் கிடைக்கும்.
இதுவரை திருமணம் ஆகாதவர்கள் அல்லது திருமணம் செய்ய பேச்சு வார்த்தை ஆரம்பிப்பவர்கள் ஆடி கிருத்திகையில் முருகனை வழிபட்டால் கண்டிப்பாக திருமணம் நடக்கும்..
அதுமட்டுமல்லாமல் வாழ்க்கையில் முன்னேற வேண்டும். பிரச்னைகளில் இருந்து விடுப்பட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு முருகன் அருள் பொழிவார்..
வாழ்க வளமுடன். ...
ஓம் முருகா ஓம்.
கவிதா சரவணன்.