புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில்*, தஞ்சாவூர்
தஞ்சாவூரிலிருந்து 7 கி.மீ தொலைவில் இந்த கோவில் அமைந்திருக்கிறது.
தஞ்சையை ஆண்ட சோழப் பேரரசர்கள் தஞ்சையைச் சுற்றி எட்டுத் திசைகளிலும் அஷ்ட சக்திகளைக் காவல் தெய்வங்களாக அமைத்தனர். அவ்வாறு தஞ்சைக்குக் கிழக்குப் புறத்தில் அமையப் பெற்ற சக்தியே அருள்மிகு புன்னைநல்லூர் மாரியம்மன்.
அப்போதைய தஞ்சாவூர் மகாராஜாவான சத்ரபதி வெங்கோஜியின் கனவில் மாரியம்மன் வந்து தான் தஞ்சாவூரிலிருந்து சில மைல் தொலைவிலுள்ள புன்னை மரக் காட்டின் நடுவே சிலை வடிவில் இருப்பதாகவும், தனக்கு அங்கே ஒரு கோவில் கட்டுமாறும் கூறினாராம். மகாராஜா அங்கு சென்று பார்த்தபொழுது மாரியம்மனின் சிலையைக் கண்டாராம். உடனே அதே இடத்தில் ஒரு கோவிலைக்கட்டி அச்சிலையை அங்கே பிரதிஷ்டை செய்தார் என்று சொல்லப்படுகிறது.
கோவிலின் கருவறையில் உள்ள மாரியம்மன் புற்று மண்ணால் ஆனது. எனவே, கருவறையில் உள்ள அம்பாளுக்கு அபிஷேகங்கள் செய்யப்படுவதில்லை.
ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு மண்டலம் தைலக்காப்பு அபிஷேகம் நடைபெறும்.
உற்சவ மூர்த்தியான விஷ்ணு துர்க்கைக்கே அபிஷேகங்கள் நடத்தப்படுகின்றன.
ஆண்டுதோறும் கோடை நாள்களில் அம்பாளுக்கு முகத்திலும், சிரசிலும் முத்து, முத்தாக வியர்வை பூக்கும். எனவே முத்து மாரியம்மன் என பக்தர்கள் அன்போடு அழைக்கிறார்கள்.
அம்மை நோய் கண்டவர்கள் தங்கியிருந்து, குணமடைந்து செல்ல தனி அம்மை மண்டபம் உள்ளது.
தேவியின் திருத்தலங்கள் தொடரும்...
கீதா ராஜா சென்னை