tamilnadu epaper

ஆணென்ன, பெண்ணென்ன?

ஆணென்ன, பெண்ணென்ன?

 

ரவி தன் கல்யாணத்திற்குப் பிறகு இன்றுதான் கடையைத் திறக்கப் போகிறான்.

தஞ்சாவூரில் சொந்தமாக இரு சக்கர வாகன பழுது பார்க்கும் கடை வைத்திருக்கிறான்.

கல்யாணம் முடிந்து பத்து நாட்களாகின்றன. அப்பா இறந்து பத்து வருடங்களுக்கு மேலாகிறது.

ரவி ஒரே பையன். அவன் அம்மா மரகதம்தான் கஷ்டப்பட்டு அவனைப் பத்தாம் வகுப்பு வரை

படிக்க வைத்து, தன் அண்ணன் உதவியுடன் தஞ்சையில் ஒரு கடை வைத்து கொடுத்தாள்.

 

காலையில் எழுந்து, குளித்து முடித்து, தன் புது மனைவி செய்து கொடுத்த டிபனை

சாப்பிட்டுவிட்டு கிளம்பியவுடன், அவன் மனைவி சாந்தி, "அத்தான், கொஞ்சம் விளக்குமாத்தை

எடுத்து கூடத்தைப் பெருக்குங்க, ஒரே குப்பையா இருக்கு பாருங்க..." என்றவுடன்

விளக்குமாற்றை எடுத்து பெருக்கவும் அவன் தாய் மரகதம் வரவும் சரியாக இருந்தது. நாலு

நாட்களுக்கு முன்னால் தஞ்சாவூரில் இருக்கும் தன் அண்ணன் வீட்டுக்கு சென்றவள்

இப்போதுதான் வருகிறாள்.

 

ரவி விளக்குமாற்றுடன் இருப்பதை பார்த்து, "ஏன்டா கடைக்கு கிளம்பலையா? கல்லணை பஸ்

மேற்கே போயிருக்கான், திரும்பிடுவான், கிளம்பு. நீ ஏன் பெருக்கறே, அவ எங்க?" என்று

கேட்கவும்,

 

ரவி, "அம்மா அவளுக்கு காலைலேருந்து அவ கைல சுளுக்கு, அதான்...." என்று இழுக்கவும்,

சாந்தி உள்ளிருந்து வந்தாள்.

 

"ஏம்மா சாந்தி, அது என்னம்மா ஆம்பளை புள்ளையை விளக்குமாத்தை எடுக்க பெருக்க

சொல்றது?"

 

"அத்தை, நம்ம வீட்டுக்குள்ள இருக்கற குப்பையை பெருக்கறதுல ஆம்பளை என்ன பொம்பளை

என்ன? எங்க வீட்டில எங்கப்பா, எங்கண்ணன், தம்பிங்க எல்லாம் செய்யறதுதான் வழக்கம்"

 

"இத பாரும்மா உங்க வீட்டு பழக்கம் உங்க வீட்டோட இருக்கட்டும், இந்த வீட்லே அதெல்லாம்

வேண்டாம்" என்று கூறவும், சாந்திக்கு மூஞ்சி சின்னதாகி விட்டது.

 

"சரி, சரி கிளம்புங்க" என தன் கணவனை கிளப்பி வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தாள்.

 

கிளம்புமுன் ரவி, "சாந்தி அம்மா சொன்னதை நினைச்சு வருத்தப்படாதே, அவங்க

அப்படித்தான் மனசுல இருக்கறதை வெளிப்படையா பேசிடுவாங்க, கொஞ்சம் நீதான்

அட்ஜஸ்ட் பண்ணிக்கணும்" என்று கூறிவிட்டு கிளம்பினான்.

 

பஸ் ஏறி தஞ்சாவூருக்கு சென்று தன் கடைக்கு வந்தவன் வாசல் கூரையில் செருகி வைத்திருந்த

விளக்குமாற்றை எடுத்து சர, சரவென கடை வாசலைப் பெருக்க ஆரம்பித்தான்.

 

அவனுக்கு இது புதிதல்ல, தினசரி வாடிக்கையான ஒன்றுதான். அவன் தாய் மரகதத்திற்குத்தான்

இது புதுசு, தன் மருமகளிடம் சண்டை போட இது ஒரு காரணி.

 

-o0o0o0o0o0o0o0o0o0o0o0o-

 

திருப்பூந்துருத்தி பாலகிருஷ்ணன்

5/501 சத்சங்கம் தெரு

மடிப்பாக்கம்

சென்னை 600091