ஆன்மீகம் என்பதைக் குறித்து பலருக்கும் வெவ்வேறு விதமான கருத்துக்கள் உண்டு. ஆனால் எல்லாவற்றுக்கும் அடிப்படையானது நிபந்தனையற்ற அன்பும், நம்பிக்கையுமே.
எல்லையற்ற ஒரு பிரபஞ்ச சக்தி நம்மைச் சுற்றிலும் பரவி இருக்கிறது. நமக்கு என்ன தேவையோ அதை அந்த சமயத்தில் அளிக்க ஓடோடி வந்து விடுகிறது. அதன் கருணையும், அன்பும், அரவணைப்பும் எப்பொழுதும் நம்மில் இனிய தென்றலாக வீசிக் கொண்டிருக்கிறது. அதை உணர்வது தான் ஆன்மீகம்.
கோவிலுக்குப் போவதாலோ, இறை பாடல்களை, நாமங்களை நா வலிக்க கூறுவதாலும் இறைவன் மகிழ்ந்து விடுவதில்லை. இறைவனை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்றால், எளியவர்களுக்கு, நலிவுற்றவர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும்.
இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொரு உயிரையும் தன்னைப் போல் நினைத்து நேசிக்க வேண்டும். அந்த நேசம் என்பது ஒவ்வொருவர் மனதிலும் இருந்து விட்டால் இங்கு ஏது வன்முறை? தீவிரவாதம்?.
இவன் என் உடன் பிறந்தவன், இவன் என் ஆத்மா, இவனுக்குள் உறையும் தெய்வமே எனக்குள்ளும் இருக்கிறது. உலகம் முழுவதும் ஒரே தெய்வம் தான் என்ற உணர்வு வந்து விட்டால் அங்கு எந்த ஒரு போட்டி, பொறாமை, நான் உயர்வு, நீ தாழ்த்தி என்ற ஏற்றத்தாழ்வுகள் எதுவும் இருக்காது.
இதைத்தானே நமது வேதங்களும் சொல்கிறது. நானே நீயான பிறகு, நான் யார்? நீ யார்? என்கிறது. நீதான் நான், நான்தான் நீ என்ற உணர்வை உள்ளுக்குள் ஏற்படுத்துவதே ஆன்மீகம்.
கோவில் கோவிலாக ஏறி இறங்குவதும், மணிக்கணக்கில் உட்கார்ந்து இருப்பதும், மதச் சின்னங்களைத் தரித்துக்கொள்வதாலோ நமக்குள் ஆன்மீகம் வளர்ந்ததாக அர்த்தம் இல்லை.
எப்பொழுது பிறர் துன்பம் கண்டு நம் மனம் உருகுகிறதோ, வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடும் வள்ளலார் போல் நம் மனம் நெகிழ்கிறதோ, ஓடிச் சென்று அவர்களுக்கு உதவ கை நீட்டுகிறதோ, அந்த இடத்தில் நம் கைகளுக்குள் இறைவன் வந்து விடுகிறான்.
அப்பொழுது நாமே கோவில் ஆகிவிடுகிறோம். அந்தக் கோவிலில் இதயத்திற்குள் கருணை, அன்பு என்ற வடிவில் இறைவன் குடியேறி விடுகிறான். இதைத்தான் ஆன்மீகம் நமக்கு போதிக்கிறது. எல்லா தெய்வங்களும் ஒன்றுதான், எல்லா மதங்களும் அன்பை மட்டுமே போதிக்கிறது. இதை உணர்ந்து நாம் செயல்பட வேண்டும்.
இதை அறிந்து விட்டால் எப்பொழுதும் இறைவனின் அன்பு என்னும் காற்று தென்றலாக நம்மை தழுவிக் கொண்டே இருக்கும். அந்த இறைவனை அதன் மூலம் உணர்வதுதான் பக்தி. இப்படிப்பட்ட பக்தியை நமக்குள் வளர்ப்பது ஆன்மீகம்
-ஜி ஏ பிரபா
கோவை