தன் எதிரே அமர்ந்திருந்த பிரைவேட் டிடெக்டிவ் குமாரிடம் சன்னக் குரலில் கேட்டார் நித்தியானந்தம்.
"என்ன சார்... நான் சொன்ன மாதிரி என் பொண்ணுக்காக நான் பார்த்திருக்கும் மாப்பிள்ளையை ஃபாலோ பண்ணி... அவரோட நடவடிக்கைகளை வாட்ச் பண்ணுனீங்களா?.. எப்படி நல்லவரா?.. பரவாயில்லையா?"
மெலிதாய்ப் புன்னகைத்த பிரைவேட் டிடெக்டிவ் குமார், "சார்... அவர் நல்லவர் இல்லை சார்!" என்றதும் "என்ன சார் சொல்றீங்க?" அதிர்ச்சியாய்க் கேட்டார் நித்தியானந்தம்.
"வெறும் நல்லவர் இல்லை சார்.. ரொம்ப ரொம்ப நல்லவர்"
"அப்படியா?" புன்னகையோடு கேட்டார் நித்தியானந்தம்.
"சார்... கார்ல போகும்போது சாலையோரமாய் தள்ளாடி நடந்து போய்க்கிட்டிருந்த பெரியவருக்கு வலியப் போய் லிப்ட் கொடுத்து... அவர் போக வேண்டிய இடத்திற்குக் கொண்டு போய் இறக்கி விட்டார் சார்"
"பரவாயில்லையே?' என்றார் நித்தியானந்தம்.
" அப்புறம்.... நண்பர் ஒருத்தர் அம்மாவுக்கு உடனே ஆபரேஷன் பண்ணனும் ரெண்டு லட்சம் ஆகும்ன்னு தவிச்சிட்டிருந்தாரு... அதைக் கேள்விப்பட்ட அடுத்த நிமிஷமே சட்டுன்னு மொபைலை எடுத்து அந்த நண்பருக்கு 2 லட்சத்தை டிரான்ஸ்பர் பண்ணிட்டு... "தைரியமா ஆபரேஷனுக்கு ஏற்பாடு பண்ணு... எல்லாச் செலவையும்... நான் பார்த்துக்கிறேன்" ன்னு சொன்னார் சார்"
"அடடா.." வியந்தார் நித்தியானந்தம்.
"ஆக... ஒரு வாரமா அவரை ஃபாலோ பண்ணி நான் பார்த்த வகையில் அவர் சொக்கத்தங்கம்... அவர்தான் உங்கள் மகளுக்கு ஏற்ற மாப்பிள்ளை... தாராளமா கல்யாணம் பண்ணலாம்" தனது அறிக்கையின் முத்தாய்ப்பாய்ச் சொன்னார் குமார்.
"ஸாரி மிஸ்டர் குமார்.. சத்தியமா என் மகளை இப்படி ஒரு ஆளுக்குத் தரவே மாட்டேன்!.. நடப்புச் சமுதாயம் நல்லவர்களை வாழ விடாது... நல்லவன் நல்லவனாய் இருப்பான்... ஆனா நல்லா வாழ மாட்டான்! வல்லவன்தான் காலத்திற்கு ஏற்ப வளைந்து வாழ்வாங்கு வாழ்வான்!.. வலியப் போய் உதவி செய்யறவனையும் வாரிவாரிக் கொடுக்கிறவனையும் நம்பி என் மகளை நான் கட்டிக் கொடுத்தால் அவள் வாழ்வாங்கு வாழ மாட்டா... சந்தோஷத்தை விட சங்கடத்தைத்தான் அதிகம் பார்ப்பாள்"
"சார்... சார்"
"மிஸ்டர் குமார் நீங்க கிளம்பலாம் உங்க சர்வீஸ் சார்ஜ் நாளைக்கு உங்க அக்கவுண்ட்ல விழும்"
"ஒருவேளை இவர் சொல்றது தான் சரியோ?" யோசித்தபடியே எழுந்து வெளியேறினார் பிரைவேட் டிடெக்டிவ் குமார்.
(முற்றும்)
முகில் தினகரன், கோயமுத்தூர்.